Friday, May 20, 2016

33 - நாட்டியக் கலை

                                 


ஒரு நடிகன் எப்படி தன் நடிப்பின் மூலம், வெட்கம்,வீரம், கருணை,அற்புதம்,சிரிப்பு,பயம்,அருவருப்பு,கோபம்,அமைதி ஆகிய நவரசங்களை வெளிப்படுத்த முடியுமோ...அதே அளவு ஒரு பரத நாட்டியக் கலைஞனாலும் அதை செய்யமுடியும்.

நாட்டிய அரங்குகளில் விறுவிறுப்புத் தோன்றுவதற்காக முதன் முதலாக ஆடப்படும் நடனம் அலாரிப்பு ஆகும். ஐந்து நிமிடத்திற்குள் ஆடப்படும் இது தத்தகார சொற்கட்டுகளால் ஆனது. இறைவனுக்கும், குருவுக்கும், சபையோருக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். அலாரிப்பை முகசாலி என்றும் கூறுவார்கள். இறுதியில் சிறு தீர்மானத்துடன் முடிக்கப்படும். தீர்மானம் என்பது பல அடவுகளை கோர்வையாக செய்து மிருதங்க சொற்களுக்கு ஏற்ப தாளத்தைப் போடுவது ஆகும்.

ஜதி என்பது அடவின் சொற்களை மிருதங்க சொல்லாக சொல்வதாகும். அலாரிப்புக்கு அடுத்தபடியாக ஆடப்படும் ஜதீஸ்வரம் ஸ்வர வரிசைகளைக் கொண்டதாகும். இது இசையுடன் அமைந்த தொனிப்பாதலால் ஜதீஸ்வரம், என்றும், துவக்கத்தில் அல்லது இறுதியில் ஜதிகள் இணைக்கப்பட்டிருப்பதால் ஜதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜதீஸ்வரத்திற்கு அடுத்தபடியாக ஆடக்கூடிய சப்தத்தில் தான் முதல்முதலாக அபிநயம் வெளிப்படுத்தப்படுகிறது. சப்தம் என்றால் சொல் என்று பொருள். இதற்கான சாஹித்தியங்களில் தெய்வம், அரசன் அல்லது தலைவன் புகழ் பாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக முடிவுறும். சப்தத்தில் ஆட்டத்திற்கான ஜதிகளும் சாஹித்திய அடிகளும் கலந்து வரும். அநேகமான சப்தங்கள் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளன. சாகித்திய வரிகளை பாடும்போது ஆடல் நங்கை அதற்கான பாவங்களைப் பற்பலவித அபிநயங்களுடன் தெளிவாக வெளிப்படுத்துவாள். இதில் நர்த்தகியின் மனோதர்மத்தையும், கலைத்திறமையையும் அளவிட முடிகின்றது. மண்டுக சப்தம், கோதண்டராமர் சப்தம் போன்ற சப்தங்கள் மிகவும் பிரபலமானவை. அநேகமான சப்தங்கள் காம்போதி ராகத்திலேயே பாடப்பட்டவையாகும். இன்று பல தமிழ் சப்தங்களை மற்ற ராகங்களிலும் பாடி ஆடி வருகின்றனர்.
சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும்


கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கருத்துகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலையே , இங்கு அபிநயம் எனப்படும்.அதாவது ஒரு கதையிலோ, பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையிலும் கருத்தினை வாயினால் கூறாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களாலும், பார்ப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லப்படும் செய்கையே அபிநயம் ஆகும்.

கண்ணீர் சிந்துவது போல நடிப்பது நாடக வழக்கமாகும்.ஆனால், அபிநயத்தில் நடிப்பு, பா(B)வம், பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.நவரசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைவதே நடனத்தில் சப்தம்,வர்ணம் ,பதம் ஆகும்

பலவிதமான இந்திய நாட்டியக்கலை வடிவங்களில் பரதநாட்டியம்,கதகளி,மோகினியாட்டம்,குச்சிப்பிடி,ஒடிசி,கதக்,சத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு கலை வடிவங்களும் இந்திய நாட்டியங்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.


பரதநாட்டியம், தென்னிந்தியாவிற்கே...அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும்.இது, பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதாலேயே பரதம் எனப் பெயர் வந்ததாகக் கூறுவர்.அதேநேரம்..
ப - (B)பாவம்
ர-ராகம்
த- தாளம்

ஆகிய மூன்றையும் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.இதில் (B)பாவம் உணர்ச்சியையும்,ராகம் இசையையும் குறிக்கும்.இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரதநாட்டியமாகும்.நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டியக் கலைஞரே முகபாவனையையும் நவரசங்களையும் கொண்டுவர முடியும்.

முக்கியமாக இந்நடனத்தை ஆடுபவர்கள் பெண்களாகவே உள்ளனர்.ஆனாலும் ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.முழுமுதல் கடவுள் சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் ஆடியுள்ளதாக உள்ளது..சிவன் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும்.மகிழ்ச்சியில் அவர் ஆடுவது ஆனந்த தாண்டவம் ஆகும்.கோபத்தில் ஆடுவது ருத்ரதாண்டவம் ஆகும்.மென்மையான அசைவுகள் "லாஸ்யா" எனப்படுகிறது.

உடல் அசைவுகளும், கைமுத்திரைகளும் அடவு எனப்படும்.பல அடவுகள் ஜதி ஆகும்.இவை 120 உள்ளன.இவற்றில் 80தான் பயன்பாட்டில் உள்ளன.சிதம்பரம் ஆலயத்தில் இவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

வடுவூர் ராமய்யாபிள்ளை, திருநாளப்புத்துர் சுவாமிநாத பிள்ளை, தனஞ்செயன், அடையார் லட்சுமணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் இந்நடனம் பயிற்றுவைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பத்மா சுப்ரமணியம், சித்ரா விஷ்வேஷ்வரன், வைஜயந்தி மாலா ஆகியோர் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள்.

பரதநாட்டியத்தில்...கைமுத்திரைகள் முதன்மையாகும்.பாடலின் பொருளை முத்திரைகள் காட்டும்.கை முத்திரைகள் வழி கண் செல்லும்.கண்கள் வழி மனம் செல்லும்.மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதையே கம்பர்.....

கைவழி நடனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர....

என்கிறார்.

(பரதம்..மற்றும் அதைச்சார்ந்துள்ளவைப் பற்றி ஒரு முழு புத்தகமே எழுதலாம்.,ஆனால் நாடகக்கலை பற்றிய இந்நூலில் பரதக் கலைப்பற்றியும் குறிப்பு இருக்க வேண்டும் என எண்ணியதால் இதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லியுள்ளேன்)