Sunday, April 24, 2016

32- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

                               

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பு இதுவாகும்

1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மைப்பு 27-11-1956ல் சங்கங்களின் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது.

1973ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வமைப்பின் மூலம் நாட்டுப்புற கலைகள், நாடகம்,தெருக்கூத்து  , பரதம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்டப்படுகிறது.கலத்துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

நவிவுற்ற கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை, நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்தினருக்கு மாத உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் மூலம் கலைஞர்களுக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

தவிர்த்து, கலைஞர்கள் வெளியூர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றால், அவர்கள் ரயிலில் பயணம் செய்ய ரயில் கட்டணச் சலுகைப் பெற ரயில்வேக்கு பரிந்துரை செய்கிறது.

வெளிமாநிலங்களிலிருந்து கலைஞர்களை வரவழைத்து அம்மாநில நிகழ்ச்சிகளையும், நம் மாநிலக் கலைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி நம் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.

சிறந்த கலாச்சார நிறுவனங்கள் என 27 நிறுவனங்களுக்கும், சிறந்த நாடகக் குழுவென 18 குழுக்களுக்கும் கேடயம் அளித்து கௌரவித்துள்ளது

சில அரசு கலாச்சார நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்துகிறது.

தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்படும் தலைவர், செயலாளர்கள் இம்மன்றத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கின்றனர்.இவர்கள் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

தற்போது இம்மன்றம் செயல்பட்டுவரும் முகவரி

"பொன்னி"
31, குமாரசுவாமி ராஜா சாலை
சென்னை-600028

Sunday, April 17, 2016

33 - இன்றைய நாடகங்களின் நிலை



சினிமா, தொலைக்காட்சி ஆகியவை மக்களை ஈர்த்துள்ள அளவிற்கு  இன்று, நாடகங்கள் மக்களை ஈர்க்கவில்லை.

முழுநேர நாடகக் குழுக்கள் நாடகத்தை நம்பி வாழ முடியாத நிலை.அமெச்சூர் நாடகக் குழுக்கள்தான் இன்று நாடகங்கள் நசிந்துவிடாமல் காத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

ந.முத்துசாமி, கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முழு நேர கலைஞர்களை தயார் செய்து வருகிறார்.உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நடிகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.ஒரளவு வெற்றியுடன் இந்த மைப்பு செயல் பட்டு வருகிறது

நாற்காலிக்காரர், உந்திச்சுழி, நிரபராதிகளின் காலம், கடைசி ஐந்து வினாடிகள் ஆகியவை இவர்கள் தயாரிப்பில் வந்த நிகழ்ச்சிகள் ஆகும்.

இதே போன்று ஞாநி அவர்களின் "பரிக்க்ஷா" குழுவினரும் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.வீதி என்ற நாடகக் குழுவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவை, சபா நாடகங்களுக்கு மாற்றாக இலக்கிய உணர்வு கொண்ட நாடகங்களை நடத்தி வருகின்றன.

இதே முறையில், மதுரையில், "நிஜ நாடக இயக்கம்", திருச்சியில் நாடக சங்கம், பாண்டிச்செரியில் , "கூட்டுக்குரல்கள்", ஆழி நாடகக் குழு, தன்னானே குழு, திருவண்ணாமலையில் "தீட்சண்யா", சென்னையில் "ஆடுகளம்" ஐக்கியா" "பல்கலை அரங்கம்", தில்லியில் "யதார்த்தா". ஆகிய குழுக்கள் நாடக இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தஞ்சை தமிழ்ப்பல்கலைககழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகங்களில் நாடகத்துறை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடகத்திற்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.பேராசிரியர் ராமானுஜம், எஸ்.பி.ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பங்கு போற்றற்குரியதாகும்.

இனி நாடகத்தின் நிலை என்ன?

நாடகம் என்பது சிறு சிறு துகளாக மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த வடிவம்.ஆகவேதான் உலகம் ஒரு நாடக மேடை...அதில் நாமெல்லோரும் நடிகர்கள் என்றனர்.

இன்று சினிமா, தொலைக்காட்சி ஆகியவை அசுர வலிமையுடன் ஒரு சேரப் பலரைச் சென்றடையும்.ஆனால், நாடகம் மட்டுமே ஒரு யதார்த்தத்தை..ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை நம் முன்னே நிறுத்துகிறது எனலாம்.எந்திரமயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகம் மனிதனின் கற்பனைகள், படைப்புகள் ஆகியவற்றை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

நாடகம் ஒருவனின் கற்பனைகளை மீட்டெடுக்கும்/
ஒரு கவிதையை அவன் வசப்படுத்தும்
அவன் வாழ்க்கையை...இன்னும் அதிகக் கற்பனையுடன்..இன்னமும் அதிக கற்பனையுடன் ...இன்னமும் அதிக படைப்பு மனசுடன் அவனை எதிர் கொள்ள வைக்கும்.

ஆரோக்கியமான கலை வளர்ச்சிக்கு பொறுப்பேற்று, ஒரு அரசு முயன்றால்தான் நாடகங்கள் மீண்டும் மறுமலர்ச்சி அடையும்.
நாடகங்கள் சிறப்புடன் இயங்க....பாடத்திட்டத்தில்...நாடகங்களையும் ஒரு சிறப்புப் பாடமாக ஆக்க வேண்டும்.

ஊடகங்கள் நாடக வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

ஒருகாலகட்டத்தில் அனைத்து தினசரிகளும், பத்திரிகைகளும், புதிதாக அரங்கேறும் நாடகங்களை விமரிசித்தன. அவற்றைப் பார்த்து, நாடகங்களுக்கான ஆத்ரவும் பெருகியது.
 உதாரணமாக    ஆனந்தவிகடனில் வீயெஸ்வி விமரிசனம் வந்தால் அந்நாடகம் நூறு முறை அரங்கேறும் வாய்ப்பைப் பெற்றன.அதேபோல  ஹிந்து, எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவையும் தொடர்ந்து விமரிசனங்கள் வெளியிட்டன.ஆனால் அப்பணியை ஹிந்து பத்திரிகையைத் தவிர வேறு யாரும் செய்வதில்லை.


மீண்டும் நாடகங்கள் தழைக்க ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும்

சமண...புத்தகாலத்தில் நாடகங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி திரும்ப வேண்டாம்.

நாடகத்தை ஆதரிப்போம்///நாடகத்தைப் போற்றுவோம்

வாழ்க நாடகக் கலை
வளர்க நாடகங்கள்

Wednesday, April 13, 2016

29 - எனது சௌம்யா நாடகக் குழு

                                             

                                                   (நூல் வேலி நாடகத்தில் எங்கள் நடிகர்கள்)


பள்ளியில் படிக்குக் காலத்திலேயே நாடகத்துறையில் பேரார்வம் கொண்டிருந்த நான், எனது பத்தாவது வயதில் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் பிரேமா வாக நடித்தேன்.இதுதான் எனது முதல் நாடகப் பிரவேசம்.

பின்னர், வீட்டுத் திண்ணையில் அப்பாவின் வேட்டியை திரையாக்கி, வீரபாண்டிய கட்டபொம்மனாக முழங்கினேன்.பள்ளி ஆண்டு விழாவில், "ராஜ ராஜ சோழன்" நாடகத்தில் நகைச்சுவைப் புலவர் "மேதீனிராயரா"க நடித்தேன்.

1967ல் யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அஸோசியேஷன்ஸ்  என்ற சங்கத்தை நண்பர்களுடன் துவக்கி, நான், விசு, மௌலி ஆகியோர் ரத்தபாசம், லவ் ஈஸ் பிளைண்ட்" (மௌலி எழுதிய முதல் நாடகம்) ஆகிய நாடகங்களைப் போட்டோம்.

1973ல் அம்பத்தூர் கல்சுரல் அகடெமி என்ற சபாவைத் தொடங்கி, நான்கு ஆண்டுகள், அதன் அங்கத்தினர்களுக்காக பல பிரபல நடிகர்களின் நாடகங்களைப் போட்டேன்.

1979ல் பிரபல நடிகர் அமரர் எம்.கே.ராதா, குத்துவிளக்கு ஏற்ற சௌம்யா நாடகக் குழுவைத் துவக்கினேன்.

எனது குழுவிற்கு என்னைத் தவிர்த்து, கே.கே.ராமன், பரத், வெங்கட் ஆகியோர் நாடகங்களை எழுதித்தந்தனர்.

இதுவரை 22 நாடகங்களை எனது குழு நடத்தியுள்ளது எங்களது நாடகங்கள் சில..

யாரைத்தான் கொல்லுவதோ? (கே.கே.ராமன்) புதியதோர் உலகம் செய்வோம், நெஞ்சங்கள் வாழ்தத்ட்டும் (பரத்), குடும்பம் ஒரு சிலம்பம் (வெங்கட்)

நான் எழுதிய சில நாடகங்கள், காயத்ரி மந்திரம்,பத்மவியூகம், சொல்லக் கொதிக்குது நெஞ்சம், மாண்புமிகு நந்திவர்மன்< பாரதரத்னா" நூல்வேலி, காத்தாடி, என்றும் அன்புடன்.எனது மழையுதிர்காலம் என்ற நாடகத்தில், மூன்றே மூன்று பாத்திரங்கள்.அத்துடம் மழையும் ஒரு பாத்திரமாகவே வரும்.

பல விருதுகளை எனது நாடகங்கள் பெற்றுத் தந்திருந்தாலும்.....சிறந்த நாடகமாகக் கோடை நாடக விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லக் கொதிக்குது நெஞ்சம் பெற்ற விருதையும், இலக்கியச் சிந்தனை அமைப்பினர் சிறந்த நாடகம் என எனது "பாரத ரத்னா" நாடகத்தையும் தேர்ந்தெடுத்ததையும் எனது வாழ்நாளில் மறக்கமுடியாது.

என் குழுவினரைத் தவிர்த்து, கோவை பத்து, அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகிய குழுவினருக்கு நாடகம் எழுதியுள்ளேன்.

எனது நாடகங்களில், மணிபாரதி, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், ஓமக்குச்சி நரசிம்மன், ராம்கி, பி.டி.ரமேஷ், குட்டி பத்மினி, கமலா காமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.




30 - "குட ந்தை மாலி" என்னும் சாதனையாளர்




என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி 58ஆண்டுகளுக்குமுன் 1959ல் துர்கா டிரமாடிக் அசோசியேஷன்ஸ் ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என்று பெயர் மாறியது.அந்தக் குழு இன்று மாலிஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.மகாலிங்கத்தை, குடந்தை மாலி என்று ஆக்கியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.ஆவார்

இதுவரை இக்குழு 34 நாடகங்களை நடத்தியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய வெற்றி நாடகங்கள்.20 நாடகங்களுக்கான கதை, வசனம், இயக்கம் மாலியினுடையது..மீதம் 14 நாடகங்கள் பிறர் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்", ஆர்.சூடாமணியின் ஆழ்கடல்,திருப்பூர் கிருஷ்ணனின் பொய் சொல்லும் தேவதைகள், ஷ்யாமளாராவின் மன்னிக்க வேண்டுகிறேன் ஆகியவற்றை நாடகமாக்கிய பெருமை மாலிக்கு உண்டு

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர்,நாணு, மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராமன்,நவாப் கோவிந்தராஜன் ஆகியோர் இவர் குழுவில் நடித்துள்ள சில நடிகர்கள்.

இவரது "ஞானபீடம்" மிகவும் புகழ் பெற்ற நாடகம் .115 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள இந்நாடகம், இன்றும் நடைபெற்று வருகிறது.

ஆனந்தவிகடன் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ.கே.பட்டுசாமியின் கடவுள் எங்கே? என்ற சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் இவர்.

அன்னை சாரதா தேவியின் 150ஆம் பிறந்த நாள் விழாவில் அவரது வாழ்க்கையை  "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள்..."மாப்பிள்ளை முறுக்கு, சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் (இந்நாட்கம் 350 முறை நடைபெற்றுள்ளது),நம்மவர்கள், ஆத்ம விசாரணை,நிதர்சனம், சம்மதம் ஆகும்

மாலி தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் என்று சொல்லலாம்.இவருக்கு 20க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்கள் வழங்கியுள்ளன.

31 -ஷ்ரத்தா
-----------------

                           
2010 ஆம் ஆண்டு டி.டி.சுந்தரராஜன்,சிவாஜி சதுர்வேதி, பிரேமா சதாசிவம் ஆகியோர் ஷ்ரத்தா என்ற குழுவினை ஆரம்பித்து...பிரம்மாண்டமான நாடகங்களை நடத்தி வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு ஒரு நாடகம்.

இவர்களுக்காக விவேக் ஷங்கர் எழுதிய தனுஷ்கோடி நாடகத்தில், மழை பொழிவதை...லாரிகளில் தண்ணீர் வரவழைத்து...சுழற்சி முறையில் மேடையில் மழையைக் காட்டினர்.

பின்னர், வாத வீரான் நாடகத்தில்...பாதாளச் சிறையைக் காட்டியதுடன் நில்லாது, மேடையிலேயே குதிரையைக் கொணர்ந்து காட்டினர்.கன்னையா காலத்திற்குப் பிறகு விலங்கு ஒன்றை மேடையில் காட்டியது இவர்கள் மட்டுமே எனலாம். இந்நாடகம் பற்றி ஒரு பத்திரிகை தனது விமரிசனத்தில் " அண்மைக்காலத்தில் இது போன்ற ஒரு நாடகத்தை கண்டிருக்கமுடியாது,நாடகங்கள் மறுமலர்ச்சிக்கு இந்நாடகம் ஒரு படிகல்லாய் அமையும் " என்றுள்ளது.

ஆனந்த ராகவ் இவர்களுக்காக எழுதிய நாடகங்களில் சில தூஸ்ரா மற்றும் சதுரங்கம். சதுரங்கம் என்ற நாடகத்தில் மிசோராம் பகுதி காட்டு எல்லையை தத்ரூபமாகக் காட்டினர்

ஸ்ரீவத்சன் எழுதிய நாடகங்கள்  வலை,ஹனுமான், நல்லதோர் வீணை

இயக்குநர் சிகரத்தின் "இடியுடன் கூடிய அன்பு மழை"யும் இவர்கள் அரங்கேற்றிய நாடகங்கள்.

விஜய் டெண்டூல்கரின் "bobbychi ghostha' வின் தமிழாக்கமான பாரதி இவர்கள் நாடகங்களில் மிகச்சிறந்த நாடகங்களில் ஒன்று எனலாம்.
வருடங்களில், 20 நாடகங்கள்  11 எழுத்தாளர்கள் இவர்களது சாதனை.

Shraddha's focus has been two aspects - quqlity and originality. இதுவே இவர்கள் தாரக மந்திரம் எனலாம்.

இவர்கள் குழுவில் டெக்னிகல் அட்வைசராய் இருக்கும் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தியின் பணி அளப்பரியது எனலாம்.

இவர்கள் நாடகங்களைக் காண்பவர்கள்....தமிழ்மேடை நாடகங்களுக்கு அழிவு வரவே வராது என்று கண்டிப்பாகச் சொல்வார்கள்.

மிகுந்த பொருட்செலவில்...நாடக முன்னேற்றம் ஒன்றே  குறிக்கோள் என்று பணியாற்றும் இக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்

  

Sunday, April 10, 2016

28 - "நல்லி" குப்புசாமி செட்டியார்

                               


சென்ற நூற்றாண்டின் பின்பாதி தமிழ் நாடகங்களின் பொற்காலம் என முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

1990 களுக்குப் பிறகு....பல சபாக்கள் மூடப்பட்டன. நாடகங்களுக்கு வரும் மக்கள் குறைந்தனர்.சபாக்களில் போதுமான அங்கத்தினர்கள் இல்லாததால், பொருள் வரவு பாதிக்கப்பட, நஷ்டத்தில் இயங்க முடியாது என பல சபாக்கள் மூடப்பட்டன.

இதற்கெல்லாம் காரணம்...

பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் உருவானதே! இவை பல நாடகங்களை ஒலி/ஒளி பரப்பின.திரைப்படங்களை ஒலி/ஒளி பரப்பின.பணம் செலவு செய்து வெளியே சென்று நாடகங்களைப் பார்ப்பதைவிட...மக்கள் தங்கள் வீட்டின் வரவேற்பறையிலேயே செலவு செய்யாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.அரங்குகளில் நாடகங்கள் குறைந்தன.சபாக்கள் மூடப்பட்டன.பல நாடகக் குழுக்கள் காணாமல் போனது.முன்னர், சாதாரண குழுக்களும் நூறு முறைகளுக்கு மேல் நாடகம் போட்ட நிலை மாறி...பிரபல குழுக்கள் நாடகங்கள் போடவும் திணறின.

இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தாலும்....நாடகக் கலை அழியவில்லை.முக்கியக் காரணம் அமெச்சூர் நாடகக் குழுவினர் என உறுதியாகச் சொல்லலாம்.இன்றும் சில சபாக்கள் நாடகங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நாடகங்கள் அழியாமல் இருக்க இன்று முக்கியக் காரணங்களில் ஒன்று.....ஸ்பான்சர்ஸ்....ஆம்....நாடகங்கள் நடத்துவதற்கான செலவுகளை ஏற்பவர்கள்,சில தொழில் நிறுவனங்கள் இந்த நற்பணியாற்றி வருகின்றன.அந்த நாட்களில் அரசர்கள் கலைஞர்களை ஆதரித்தனர்....இந்நாளில் அநத வேலையை ஸ்பான்சர்ஸ் செய்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல

அப்படி, நாடகங்கள் நடக்க உதவி வருகிறவர்களில், "நல்லி" குப்புசாமி செட்டியாரின் பங்கு அளப்பரியது எனலாம்.

1940 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் பிறந்த குப்புசாமி செட்டியார்....1958ல் அவரது தாத்தாவின் மறைவிற்குப் பின் அவர் செய்து வந்த ஜவுளித்துறையின் பொறுப்பை ஏற்றார்.வெறும் 200 சதுர அடியில் இருந்த வியாபாரம் குப்புசாமி செட்டியாரின் கடின உழைப்பால் 30000 சதுர அடியில் இயங்கும் நிறுவனமானது. இன்று உலகம் முழுதும் "நல்லி" சில்க்ஸ் பிரபலம்.

இவர், இன்று இசை, நாடகங்களுக்கு உதவுவதுடன்..கல்விக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி வருகிறார்,

ஸ்ரீ கிருஷ்ண கான சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, பிரம்ம கான சபா,பைரவி கான சபா, முத்ரா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை கல்சுரல் அகடெமி ஆகிய சபாக்களின் தலைவர் பொறுப்பை எற்றுள்ளார்.

தவிர்த்து, மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டியின் உப தலைவர்

பாரதீய வித்யா பவன், சென்னைக் கிளையில் நிர்வாகக்குழுவில் உள்ளார்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வருடந்தோறும் நடத்தும் கோடை நாடக விழாவில் இவரது பங்கு அளப்பரியது.

தமிழ், தெலுங்கு,ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அறிந்த நல்லி செட்டியார் பல நூல்களை எழுதியுள்ளார்.அவற்றில் இரு நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது,

தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ தேசிய விருதும் பெற்றுள்ளார்

ஈத லிசைப்பட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

(கொடைத்தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவும் இல்லை)

என்ற குறளுக்கு ஏற்ப நடந்து வருபவர் நல்லி குப்புசுவாமி செட்டியார் எனலாம் 

Saturday, April 9, 2016

27 - நாடக சபாக்கள்



கார்த்திக் ராஜகோபால்

நாடகக் குழுக்கள் நாடகம் நடத்துவதற்கான அரங்கினைத் தேர்ந்தெடுத்து, அவர்களே டிக்கெட்டுகளை விற்று....என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று வந்த நிலைமை 1950களில் மாறத் தொடங்கியது எனலாம்.

சென்னையிலும், பிற நகரங்களிலும் சபாக்கள் தோன்ற ஆரம்பித்தன.இவற்றின் நோக்கம் இயல், இசை,நாடகங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.

இந்த சபாக்கள் அங்கத்தினர்களைச் சேர்த்தனர்.அந்த அங்கத்தினர்களுக்கு மாதா மாதம்  இசை, நாடகம் என இரண்டு மூன்று நிகழ்ச்சிகளைக் காண ஏற்பாடு செய்தனர்.
நாடகங்களை நடத்தும் குழுக்களுக்கு, அவர்களது படைப்புகள் மக்களை அடைய சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தனர்.இந்த நிலை 1990வரை நீடித்தது எனலாம்.அந்தக் காலம் தமிழ் நாடக உலகின் பொற்காலம் ஆகும்.

சென்னையில் மட்டும் 130 சபாக்களும், தமிழ்நாடு முழுதும் முக்கிய நகரங்களில் சபாக்கள், தமிழ்ச் சங்கங்கள் உருவாகின.தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ் நாடகங்களுக்கு சந்தர்ப்பங்கள் வந்தன.

சாதாரண அமெச்சூர் குழுவினரின் படைப்புகளும் நூறு முறைகளுக்குமேல் நடந்தன.

இப்படிப்பட்ட சபாக்கள் பற்றி எழுதுகையில்...கடைசிவரை நாடகங்களே தன் மூச்சு என வாழ்ந்த கார்த்திக் ராஜகோபாலை மறந்துவிட முடியாது.இவரின் நாடகத்தீற்கான சேவையை அளவிட முடியாது.

மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்து வந்த ராஜகோபால் தன் நண்பர்களுடன் சேர்ந்து, 1951ல் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற சபாவினைத் தோட்ங்கி 23 ஆண்டுகள் சேவை புரிந்தார்.பின்னர், தவிர்க்க முடியா காரணங்களால் அச்சபாவிலிருந்து விலகி 1975ஆம் ஆண்டு "கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற சபாவை ஆரம்பித்தார்.இவருக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள்...எம்.ஆர்.கிருஷணமூர்த்தி, ராமானுஜம், சங்கு, ஏ.வி.ஜெயராம் ஆகியோர்.

சென்னை நகரின் முன்னணி சபாக்களில் ஒன்றாக மாறியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்.

நாடகக் குழுக்கள் , இந்த சபாவில் தங்கள் நாடகங்கள் அரங்கேறுவதையே விரும்பின.நாடகத்துறைக்கு ராஜகோபால் அளித்து வந்த ஊக்கத்தால் பல பிரபலங்கள் பின்னாளில் திரைப்படத்திலும் ஜொலித்தனர் எனலாம்.அவர்களில் சிலர், சோ, பாலசந்தர், விசு, மௌலி, கோமல் சுவாமினாதன், கிரேசி மோகன், எஸ்,வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி.

1990ஆம் ஆண்டிலிருந்து கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை நாடகவிழாவினை நடத்தி...பல பரிசுகளை நாடகங்களுக்கு வழங்கி வருகின்றனர்.


தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் ராஜகோபால்.எங்களது சௌம்யா குழுவினர் சார்பில், அவருக்கு 1989ஆம் ஆன்டு..கே.பாலசந்தர் தலைமையில் நாடகப்பேரரசு என்ற பட்டத்தை அளித்த பேறு பெற்றோம்.

2014 ஆம் ஆண்டு தனது 91ஆவது வயதில் ராஜகோபால் நம்மை விட்டு மறைந்தார்.

இன்றும் அவர் விட்டுச் சென்ற பணியினை ...திரு.சபாரத்தினம்..தலைமையில், ஏ.வி.எஸ்.ராஜா, ஏ.வி.ஜெயராம், ராஜகோபால் சேகர், வெங்கடசுப்ரமணியம் ஆகியோர் தங்களது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து வருகின்றனர்.

நாரத கான சபா

சென்னை சாபாக்களில் மற்ரொரு முக்கிய சபா நாரத கான சபாவாகும்.

1958ல் ஆரம்பித்த இந்த சபா, முதலில், மைலாப்பூர் வி.எம்.தெருவில் ஒரு தற்கால அரங்கிலும் பின்னர் மியூசிக் அகடெமி அரங்கிலும் அங்கத்தினர்களுக்காக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பின்னர் 1972ல் ஆள்வார்பேட்டையில் இடம் வாங்கி, தங்களுக்கான குளிர்பதன அரங்கை 1988ல் கட்டி முடித்தனர்.அக்காலகட்டத்தில் செயலர் ஆர்.கிருஷ்ணசுவாமியின் பங்கு அளவிடமுடியாது.இன்று...பல கலாசார விழாக்களும், நிறுவனங்களின்  பங்குதாரர்களுக்கான நிகழ்வுகளும், உபந்யாசங்களும் இந்த அரங்கில் நடைபெறுகின்றன.சென்னையின் பெயர் சொன்னால் உடனே நினைவிற்கு வரும் கட்டிடங்களில் இந்த அரங்கமும் ஒன்றாக ஆகிப்போனது.

இயல், இசை, நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த சபா இயங்கி வருகிறது.

இந்த அரங்கிற்கு சத்குரு ஞானானந்த ஹால் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
-------------------------------------------------------

இந்திய கலை ,கலாச்சாரததைப் போற்றிப் பேணவும், பிரபலப்படுத்தவும் மணி திருமலாச்சாரியார் என்ற கலை ஆர்வலர் 1896ல் சங்கீத வித்வத் சபையை ஆரம்பித்தார்.

இச்சபை, 1990ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பள்ளி கொண்டுள்ல பார்த்தசாரதி பெருமாள் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

முதன் முதலில் தோன்றிய சபா இதுவே எனலாம்.மைசூர் திவாங்களும், திருவாங்கூர் அரசவையைச் சேர்ந்தோரும், உயர் நீதி மன்ற நீதிபதிகளும் இதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஜி.என்.பாலசுப்பிரமணியனின் தந்தை நாராயனசுவாமி முதல் செயலாளராக இருந்தார்.

கர்னாடக சங்கீதம் மட்டுமன்றி ஹரிகதை,நாடகம், நாட்டியம் ,ஆன்மீக உபந்நியாசங்கள் நடந்தன.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எஸ்.வி.ஸகஸ்ரநாமம்,சிவாஜி கணேசன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகங்கள் நடத்தப்பட்டன.

திருமதி ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் "காவிரி தந்த கலைச்செல்வி" முதலில் இந்த சபாவில்தான் நடந்தது.

இன்றும் பல நாடகக் குழுக்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறந்த பணியாற்றி வருகிறார்.

பிரம்ம கான சபா
--------------------------------

தொழிலதிபர்  சித்ரா நாராயணசாமியை தலைவராகக் கொண்டு 1969ல் ஆரம்பிக்கப் பட்டது இந்த சபா.திருவாளர்கள், முத்து, சேதுராமன் ஆகியோர்கள் அன்றைய செயலாளர்கள்.இயல், இசை, நாடகம் ஆகிய
வற்றிற்கு இன்றளவும் ஆதரவளித்து வரும் இந்தசபாவின்  இன்றைய காரியதரிசியாக ரவிசந்திரன் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.இன்றைய தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆவார்
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்
-----------------------------------------------------

1951ல் ஆரம்பித்தது இந்த சபா. இந்த சபாவிலும் நாடகங்கள் அரங்கேற்ற குழுக்கள் விரும்பின.திரு ராஜகோபால், வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில்  நாடகங்கள் நடந்தன.
இன்றும் நாடக விழாக்கள் மூலமும், அங்கத்தினர் மாத நிகழ்ச்சியாகவும் நாடகத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
திரு வரதராஜன், பத்மனாபன் ஆகியோர் இன்றைய செயலாளர்கள் ஆவர்.


ஸ்ரீகிருஷ்ண கான சபா

1953ல் திரு யக்னராமன் முயற்சியில் தியாகராய நகர் கிரிஃப்ஃபித் தெருவில் (இன்று மகராஜபுரம் சந்தானம் சாலை) உருவானது.தொடர்ந்து அங்கத்தினர்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.இன்றைய செயலர் ஒய்.பிரபு ஆவார்

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா

1945ல் தியாகராய நகரில், ஜி.என்.செட்டி சாலையில் துவங்கப் பட்டது இந்த சபா.வாணிமகால் என அனைவராலும் அழைக்கப்பட்டது.இச்சபா ஆரம்பிக்க மூல காரணமாகவும், உதவியாகவும் இருந்தவர் திரைப்பட நடிகர் அமரர் ஸ்ரீ சி.வி.நாகையா ஆவார்.இன்றும் திரு டெக்கான் கிருஷ்ணமூர்த்தி, திரு எஸ்,வி.எஸ்.மணி ஆகியோர் சாபவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்

ஆர்.ஆர்.சபா- சென்னை
----------------------------------------------

சென்னை மைலாப்பூரில் . ஏ.கே.ராமசந்திர ஐயர், லோகநாத நுதலியார், நடேச ஐயர் ஆகியோரால் 1929ல் துவக்கப்பட்டது ஆர்.ஆர்.சபா என அனைவராலும் அறியப்பட்ட ரசிக ரஞ்சனி சபா.இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறையினருக்கும் வாய்ப்பளித்து கலைச்செவையை இன்றும் தொடர்ந்து வருகிறது

முத்ரா
----------------

பாஸ்கர் தன்மனைவி திருமதி ராதா பாஸ்கருடன் இணைந்து முத்ரா என்ற சபாவை 1995ல் ஆரம்பித்தனர். இயல், இசை,நாடகம் என அனைத்து கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்து வருகின்றனர்.இசை விழா, நாடக விழா வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இவற்ரை தவிர்த்து, ரிகார்டிங்,பிரிண்டிங், ஸமுத்ரா என்ற பத்திரிகை, வெப் டெலிகாஸ்டிங் என அனைத்துத் துரையிலும் பாஸ்கர் மாஸ்டராகத் திகழ்கிறார் எனலாம்

பாரத் கலாச்சார்
-----------------------------

திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி வழிகாட்டலின் படி, ஒய்.ஜி.மகேந்திரன், திருமதி சுதா மகேந்திரன் பாரத்கலாச்சார் என்ற சாபா மூலம் கலை நிகழ்ச்சிகளை அளித்து வருகின்றனர்.இதில், ஒய்.ஜி.மதுவந்தியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி
----------------------------------------------------------------

சென்னையில் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டையில் திரு சிவகுமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி என்ற சாபவை ஆரம்பித்தனர்.நிகழ்ச்சிகளை நடத்த கூடவே "காமாக்ஷி கலை அரங்கம்" என்ற அரங்கு/ கல்யாண மண்டபத்தையும் நிறுவினர்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இயல், இசை, நாடக சேவையை அங்கத்தினர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றனர்.
பாபு, வெங்கட்ராமன் இருவரும் இன்றைய முக்கிய நிர்வாகிகள் ஆவர்

சென்னை கல்சுரல் அகடெமி
-----------------------------------------------------
லயன் நடராஜன் வழிகாட்டலில், இச்சபா பல ஆண்டுகளாக நாடகங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம்
--------------------------------------------------
தொழிலதிபரும் ஆன்மீகவாதியுமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஆதரவுடன் பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம் 45 ஆண்டுகலூக்கு முன் தன் கலைச்சேவையைத் துவக்கியது.இன்றுவரை அநேக குழுக்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி வருகிறது .ஆரம்பநாள் ,முதல் இன்றுவரை தமிழ்ச் சங்கத்திற்கு தனது அயராத உழைப்பைத் த்ந்து கொண்டிருப்பவர் இராம.வெள்ளையப்பன் ஆவார்.இவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது

திருச்சி ரசிக ரஞ்சனி சபா
---------------------------------------------

1914ல் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி ரசிக ரஞ்சனி சபா, இன்றும் நாடகக் கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து நாடக நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது.இதன் நிறுவனர் நடேச ஐயர் ஆவார்.இன்று சேகர் கௌரவச் செயலாளராய் இர்டுந்து சபையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.


இந்த சபாக்களைத் தவிர்த்து, மதுரை தமிழ்ச் சங்கம், காலாசாகரம் ஹைதராபாத், வாசி ஃபைன் ஆர்ட்ஸ் மும்பை, ஷண்முகானந்த சபா மும்பை, கல்கத்தா ஃபைன் ஆர்ட்ஸ், தில்லி தமிழ்ச் சங்கம், நாரதகான சபா கரூர் போன்றவையும் அவ்வப்போது நாடக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் 

Sunday, April 3, 2016

26 - மேலும் சில முக்கியக் குழுக்கள்-

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், அரசியல்வாதி , நாடகக் கலைஞர்..இப்படி பன்முகம் கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

பாய்ஸ் நாடகக் கம்பெனியில், குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்தார்.பின்னர், டி.கே.சண்முகம் அவர்களின் பால ஷண்முகானந்தா சபையில் நடிகரானார்.

பின்னாளில், தானே, எஸ்.எஸ்.ஆர்.நாடக மன்றம் என்ற குழுவை ஆரம்பித்து, மணிமகுடம், அல்லி, தங்கரத்தினம் ஆகிய நாடகங்களை நடத்தினார்.

மனோரமா, ஷீலா, விஜயகுமாரி ஆகியோர் இவர் குழுவின் நடிகைகள் ஆவர்.

1952ல், பாரசக்தி, திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த இவர் 85 படங்களுக்கும் மேல் நடித்தார்.இலட்சியநடிகர் எனவும் மக்களால் போற்றப்பட்டார்.

தமிழ் வசன உச்சரிப்பு இவரதி சிறப்பு அம்சமாகும்

தில்லை ராஜன் -

தில்லை ராஜன் ..LIC யில் பணி புரிந்து வந்தார்.திரைத்துறையிலும் அநேக நண்பர்களைப் பெற்றிருந்த அவர், நாடகமந்திர் என்ற குழுவை ஆரம்பித்து நாடகங்களை நடத்த ஆரம்பித்தார். நகைச்சுவை நடிகர்கள் சுருளி ராஜன், ஓமகுச்சி நரசிம்மன் ஆகியோர் இவரது நாடகங்களில் இவருடன் நடித்தனர்.

சுருளி நடித்த "சக்கைப் போடு போடு ராஜா" பரவலாக அந்த நாளில் பேசப்பட்ட நாடகம் ஆகும்.பின்னர், "நாரதரும் நான்கு திருடர்களும்" என்ற நாடகத்தில் ஓமகுச்சி என்ற பாத்திரத்தில் நடித்ததால் நரசிம்மன் , ஓமகுச்சி நரசிம்மன் ஆனார்.

தில்லைராஜனுக்கு, கஜேந்திர குமார், கிரேசி மோகன் மற்றும் ராது ஆகியோர் நாடகம் எழுதித் தந்துள்ளனர்.திரைப்பட நடிகை சிமித்ரா இவரது பெரும்பாலான நாடகங்களில் பங்கேற்றார்.
திரைப்பட இயக்குநர் ஷங்கர் இவரது நாடகக் குழுவில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நீ நாளை நான், பாவ மன்னிப்பு, பணம் பின் பாசம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

பல திரைப்படங்களில் தில்லை ராஜன் நடித்திருந்தாலும்...தன்னை ஒரு நாடக நடிகன் என்று சொல்லிக் கொள்ளவே விரும்பியவர்.

வி.கோபாலகிருஷ்ணன்;_

தமிழ் நாடக மேடைமட்டுமல்ல...சென்னையில் ஆங்கில நாடகங்கள் போடுபவர்களும் மறக்கமுடியா கலைஞர் வி.கோபாலகிருஷ்ணன்.1933ல் பிறந்த இவர் சிறந்த நாடக நடிகர் மட்டுமல்ல...திரைப்படங்களில் சிறந்த குணசித்திர நடிகர் என்ற பெயரையும் பெற்றவர்.நானூறுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர் அந்த நாளிலேயே எம்.ஏ., பட்டம் பெற்ற பட்டதாரி.,

சென்னையில் ஒரே நாடகத்தைத் தொடர்ந்து நூறு நாட்கள் மேடையேற்றி சாதனை புரிந்தவர்.

மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற ஆங்கில நாடகங்களை அரங்கேற்றும் குழுவில் பங்கேற்றவர்.
எஸ்,வி.ஸகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில், போலீஸ்காரன் மகள், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் நாடகங்களில் பங்கேற்றவர்.

இவர் பின்னர் கோபி தியேட்டர்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து நாடகங்களை நடத்தினார்."ராஜயோகம், யாரோ இவர் யாரோ ஆகிய நாடகங்கள் வெற்றி நாடகங்கள்.

இவரது குழுவில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் எம்.ஆர்.கே., என்று அழைக்கப்பட்ட எம்.ஆர்.கிருஷ்ணசாமி ஆவார்.

எஸ்.வி.சேகரை, நாடக உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் வி.கோபாலகிருஷ்ணன் ஆவார்

வி.எஸ்.ராகவன்

சிறந்த திரைப்பட குணசித்திர நடிகரான இவர்  ஐ என் ஏ தியேட்டர்ஸ் என்ற குழு நடத்தி வந்தார்.குருகுல பாணி.அவ்வளவு ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பவர்.கண்டிப்பானவர்.இவரது குழு ஸ்ரீரங்கம் நரசிம்மனின் பிரபல நாவலான "நகையே உனக்கொரு நமஸ்காரம்" நாவலை நாடகமாக்கி நடித்தனர்.
பின்னர், ஒன் செட் பிளே என்று சொல்லப்படும் ஒரே செட்...அதுவும் பிரம்மாண்டமாய்...போட்டு சதுரங்கம் நாடகம் நடத்தினர்.இதில் ஸ்ரீகாந்த் நடித்தார். கே.கே.ராமனின் ஞானயோகம் நாடகம் மிகவும் பேசப்பட்ட நாடகம்.

திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்த போதிலும் நாடகங்களை மறக்காத கலைஞன் இவர்

டி.எஸ்.சேஷாத்ரி

1960-70 களில் மிகவும் பிரபல நாடக நடிகர்.இவரது சாந்தி நிகேதன் குழுவினருக்காக மாரா, பிலஹரி,தூயவன்,சௌந்தர்யன் ஆகியோர் நாடகங்கள் எழுதியுள்ளனர்.

ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, டைபிஸ்ட் கோபு ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்துள்ளனர்.

பிலஹரி எழுதிய, "நெஞ்சே நீ வாழ்க" என்ற நாடகம் . பின்னர் மேஜர் சுந்தரராஜன் நடிப்பில், ஆலயம் என்ற பெயரில் திரைப்படமாக வந்து தேசிய விருது பெற்றது.

பால்குடம், கற்பூரம், மகிழம்பூ ஆகியவை இவரால் மேடையேற்றப்பட்ட சில நாடகங்கள்.திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர், இவரை தனது வெண்ணிற ஆடை படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் செய்வித்தார்.இவரது சகோதரன் டி.எஸ்.பத்மனாபனும் ஒரு நாடக நடிகர்.இவரும் ஒரு தனி நாடகக் குழு நடத்தி வந்தார்.அதில் ராஜசேகர், பானுமதி ஆகியோர் முக்கிய நடிகர்களாக இருந்தனர்.


பாரதி மணி
-----------------------

80 வயது இளையவரான இவருக்கு 71 வருட நாடக அனுபவம்.தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களின் எழுத்துகள் பலவற்றை நாடகமாக்கியுள்ளார்.7வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகங்களில் நடித்தவர்.பள்ளிப்படிப்பு முடியும் வரை விடுமுறைகளில் அவர் நாடகங்களில் நடித்தார்.பின் 1956ல் த்ட்சிண பாரத் நாடக சபா ஆரம்பித்து பம்மல் சம்பந்தமுதலியாரின் "சபாபதி" நாடகத்தை அரங்கேற்றினார்.1962ல் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாஸில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் அறிவியல் ரீதியாக நாடகங்களை அணுகும் முறையினைக் கற்றார்.இதுவரை கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடித்துள்ளார்.இந்திரா பார்த்தசாரதியின் "மழை" போர்வை போர்த்திய உடல்கள்" ஆகிய நாடகங்களும், சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகமும் இவரது நாடகங்களில் புகழ்பெற்றவை எனலாம்

ஹெரான் ராமசாமி

மனோகருடன் அவரது நேஷனல் தியேட்டர்ஸின்சரித்திர நாடகங்களில் நடித்து வந்த ஹெரான்..பின் தனிக்குழு ஆரம்பித்து சனீஸ்வரன் போன்ற நாடகங்களை நடத்தினார்.இவரைப்போல ருத்ராபதி என்ற நடிகரும் சில சரித்திர நாடகங்களை நடத்தினார்.

நவரசா பாலா

பாண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலசந்திரன், நாடக ஆர்வம் உள்ளவராய் இருந்தார்.விசுவின் முதல் நாடகமான "உறவுக்குக் கை கொடுப்போம்"  நாடகத்தில் முக்கியப் பங்கேற்று நடித்தார்.

பின்னர் நவரசா என்ற சபாவையும், நாடகக் குழுவையும் ஆரம்பித்து பல வெற்றி நாடகங்களை அரங்கேற்றினார்.பாண்ட்ஸ் பாலா என்றும், நவரசா பாலா என்றும் அறியப்பட்ட இவர் ஸ்ரீகவி எழுத "எந்தரோ மகானுபாவலு" நாடகம் மாபெரும் வெற்றி நாடகம்.ராஜ சேகர் இதில் நடித்தார்.

பின்னர் விழுதுகள் என்ற நீண்ட தொலைக்காட்சித் தொடர் பாலாவின் முழுத்திறமையை வெளிப்படுத்தியது எனலாம்

லியோ பிரபு

நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கியவர்.ஒய்.ஜி.பி.குழுவில் நடித்து வந்தார்.டி.எஸ்.சேஷாத்ரியின் சத்திய சோதனை இவர் நடித்த நாடகங்களில் சிறப்பான ஒன்று எனலாம்.

1969ல் ஸ்டேஜ் இமேஜ் என்ற சொந்தக் குழுவை ஆரம்பித்து..கிட்டத்தட்ட 30 நாடகங்களை அரங்கேற்றி நடத்தினார்.இவரது நாடகங்களுக்கான கதை, இயக்கம் இவரே!

இவரது நாடகங்கள் சில, "நீரில் எரியும் தீபம்", கங்கையுண்டு வெள்ளம் இல்லை< பதவி இழந்த ராஜா ஆகியவை

நெருப்புகோலங்கள் என்ற நாடகத்தை, தனது பரதநாட்டியம் அறிந்த மகள் முருகஷங்கரிக்காக எழுதி அவரை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அரங்கன் அரங்கம்

1955ஆம் ஆண்டு தனது 11ஆவது வயதில், தன் கலைப்பயணத்தைத் தொடர்ந்தவர் எஸ்.ரங்கநாதன் என்னும் ரங்கமணி.

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மகனாக முதல் தேதி என்ற படத்தில் நடித்தார்.பின், கோமதியின் காதலன், செந்தாமரை ஆகிய படங்களில் நடித்தவர், நாடகத்தின் மேல் இருந்த ஆரவத்தால் 1980ல் நாடகத்துறைக்கு வந்தார்,

இதுவரை 17 நாடகங்களை தனது அரங்கன் அரங்கம்  குழுவிற்கும், காத்தாடி, பிந்து ஸ்டேஜ், தில்லை ராஜன் ஆகியோருக்கும் எழுதியுள்ளார்.

வாழ்க்கை விசித்திரமானது,2பிஎச்கே, போலீஸ் அகடெமி, போன்றவை இவரது நாடகங்களில் சில

அகஸ்டோ
-----------------------

புருஷோத்தமன் என்பவர் தான் பிறந்த ஆகஸ்ட் மாதத்தை, அகஸ்டோ என தனது புனைப் பெயர் ஆக்கிக் கொண்டு, அகஸ்டோ கிரியேஷன்ஸ் என்ற நாடக் குழுவை 1980 ஆம் ஆண்டு துவக்கினார்.

இருட்டல்ல நிழல், எந்தப் புத்தில் எந்த பாம்போ, அந்த சரவணனைச் சுற்றி, ஜெயில் வீடு, ஜெயித்த குதிரை, ஜெ.ஆள்வார் எலும்புக்கூடு ஆகிய நாடகங்கள் இவர் குழுவிற்காக எழுதி மேடையேறியவை.

தவிர்த்து, காத்தாடி ராமமூர்த்தி, அமிர்தம் கோபல், பவித்ராலயா ஆகிய குழுவினருக்கும் நாடகங்களை எழுதித் த்ந்துள்ளார்.

இவரது நாடகங்கள் வழக்கமான நாடகப் பாணியிலிருந்து மாறுபட்டவை. மர்ம நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள் இவர் சிறப்பு.

எஸ்.கே.ஜெயகுமார்,கீதாஞ்சலி ராஜா, பொன்மலை சுந்தர் ஆகியோர் இவர் நாடகங்கள் மூலம் வெளிவந்தவர்கள் எனலாம்.

அமிர்தம் கோபால்
-------------------------------------

தனது கீதாஞ்சலி குழு மூலமாக இதுவரை 43 நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.ஒரே குழு, இவ்வளவு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது ஒரு சாதனை எனலாம்.இவருக்கான நாடகங்களை வெங்கட், ராது, அகஸ்டோ. சுந்தர், டி.வி.ராதாகிருஷ்ணன்,,ஸ்ரீவத்சன் போன்றவர்கள் எழுதியுள்ளனர்


பிரயத்னா ஸ்டேஜ்
-----------------------------------------



கே. விவேக் ஷங்கர் என்னும் திறமைமிக்க இளைஞர் 2000ஆம் ஆண்டு பிரயத்னா என்ற பெயரில் ஒரு நாடக குழுவினை திரு. வி. கோபாலகிருஷ்ணன் அவர்களது நினைவு நாளன்று (29/04/2000) ஆரம்பித்தார்.தனக்கென ஒரு தனிப்பாணியுடன் நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதே நாட்களில் அரங்கேற்றம் செய்தார். 

நரேந்திரா, ID, நதிமூலம்,  ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார்.பிரபல தொலைக்காட்சி நடிகர்கள்  அஃப்சர்,கௌசிக், கிரீஷ் போன்றோர் இவரது மேடை மூலம் நாடக நடிகர்கள் ஆனார்கள்.

மற்றொரு திறமை மிக்க நடிகரான திரு TDS என அழைக்கப்பட்ட சுந்தரராஜனை தனது நாடகங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். திரு காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் குழுவிற்கு இரண்டு நகைச்சுவை நாடகங்கள் எழுதி இயக்கியதோடு அவரை தனது நாடகங்களில் பங்கு பெறச் செய்திருக்கிறார்.

இவர் 2014ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு ஸ்தாபனத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நகைச்சுவை நாடகங்களை சிட்னி நகரில் புதிதாக அரங்கேற்றினார்.

தவிர்த்து விவேக் ஷங்கர் ஸ்ரத்தா குழுவினரின் முதல் தயாரிப்பான ”தனுஷ்கோடி”  என்ற நாடகத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்நாடகத்தில் மழைக்காட்சிகளை தத்ரூபமாக அமைத்தார்.லாரிகளில் தண்ணீர் கொணர்ந்து, மேடையின் பின்புறம் நிறுத்தி..சுழற்சி முறையைப் பயன்படுத்தி...மேடையில் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கும் மேலாக  மழையைக் காட்டினார்.

இது ஒரு சாதனையாகும்


டம்மீஸ்
----------------

ஸ்ரீவத்சன், ஸ்ரீதர் ஆகியோர் தொடங்கிய இக்குழு..வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களது விநோதயசித்தம், பரீட்சை, பிரதிபிம்பம், எங்கிருந்தோ வந்தான்,வாயு ஆகிய நாடகங்கள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டவை எனலாம்.இந்த இருவருடன், கிரிதரின் பங்கும் சொல்லப்பட வேண்டிய ஒன்று எனலாம்

சுபா கிரியேஷன்ஸ்
------------------------------------

பாம்பே கண்ணனின் குழு.சில ஆண்டுகள் முன்பு வரை நாடகங்களை அரங்கேற்றியவர் இப்போது ஆடியோ புக் என்று..பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல் புறா, பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் ஆகியவற்றை டிவிடி வடிவில் தயாரித்து அளித்து வருகிறார்,இப்போது ரா கி ரங்கராஜனின் கிருஷ்ணதேவராயர் தயாராகி வருகிறது.

நவ்ரங் தியேட்டர்ஸ்
----------------------------------------

இந்தப் பெயருடன் திரு விஸ்வனாதன் ஒரு குழுவை நடத்தி வந்தார்.பல பிரபல வெற்றி நாடகங்களை இவர் நடத்தினார்.அவற்றுள் குறிப்பிடத்தக்க நாடகம் ராது எழுதிய "மை டியர் குட்டிப் பிசாசு" என்னும் நாடகம்

தமிழரசன் தியேட்டர்ஸ்
------------------------------------------

                                                           (  பாலசுந்தரம்.)

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் நாடகக்குழுவின் நடிகராய் இருந்தவர் பாலசுந்தரம்.இவர், மனோகருடன், சாணக்கிய சபதம்,விசுவாமித்திரர்,திருநாவுக்கரசர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.மனோகரின் மறைவிற்குப் பின், தமிழரசன் தியேட்டர்ஸ் என்ற குழுவினை நிறுவி, மனோகர் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்து வருகிறார்.இவரது சரித்திர/புராண நாடகங்கள் சென்னை மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து பெரு நகரங்கள், கோவில்கள் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இவரது நாடகங்களில் சில, ஸ்ரீ நரசிம்மர், ராகு-கேது, சூரசம்ஹாரம்,சுவாமி விவேகானந்தர், நரகாசுரன்.

இவருக்கான நாடகங்களை கலைமாமணி ஆறு.அழகப்பன், கலைமாமணி கே.பி.அறிவானந்தம் ஆகியோர் எழுதி வருகின்றனர்.

மேடையில் மட்டுமின்றி, இவர் நாடகங்கள் சென்னை வானொலி, சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பப்பட்டுள்ளன.

திருவாளர்கள் கே.பி.அறிவானந்தம், எம்.ஷண்முகம்,முத்துக்குமார், எல்.மோகன், ரவிக்குமார், திருமதி பரிமளம், திருமதி ஜெயந்தி ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்து வருகின்றனர்

இவருக்கும், இவர் நாடக நடிகர்களுக்கும், நாடங்களுக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன

கங்கை கலாலயா
-------------------------------

அருணகிரி என்பவர் நடத்தியக் குழு இது.கிள்ளிவளவன் காதல், திருவள்ளுவர் ,மணிபல்லவ மங்கை ஆகிய சரித்திர நாடகங்களை அரங்கேற்றினார்.தவிர்த்து, நாடகங்களுக்காகவே "நாடகப் பணி" என்ற பத்திரிகையையும் சில காலம் நடத்தியது குறிப்பிடத்தக்கது

ஒரிஜினல் பாய்ஸ் 95
------------------------------------------

பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் நடிகர்கள் சிலர் பூர்ணம் விஸ்வநாதனின் ஆசியோடு குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 95 ஐ ஆரம்பித்தனர்.இதுவரை 23 நாடகங்களை அரங்கேற்றி நடத்தியுள்ளனர்.

ம.வெ.சிவகுமார்,கௌரிஷங்கர்,எம்.பி.மூர்த்தி ஆகியோரைத் தவிர பிரபல எழுத்தாளர் சுஜாதாவும் இவர்களுக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்.

பாப்கார்ன் கனவுகள், கனவு இல்லம், அன்னபூரணியின் அடுக்களை,அப்பா வந்தார்.முயல்/வீடு(சுஜாதா எழுதிய இரு நாடகங்கள்), டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (சுஜாதா), உறவுகளுக்கு அப்பால், நாற்காலிக்குஇடமில்லை, கடவுள் வந்திருந்தார் (சுஜாதா)

விஸ்வநாதன் ரமேஷ், மாலதி சம்பத்,பூர்வஜா மூர்த்தி ஆகியோர் இவர்கள் குழு நடிகர்கள்.

மாதவ பூவராக மூர்த்தி முக்கிய உறுப்பினராய் இக்குழுவை வெற்றியுடன் நடத்திவருகிறார்.

மதர் கிரியேஷன்ஸ்
-------------------------------------

ஜெயகுமாரின் இக்குழு சில ஆண்டுகளாக நாடகங்களை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு திரு சந்திர மோகன் நாடகங்களை எழுதி வருகிறார்.நேத்ர தரிசனம் (மூன்றே மூன்று பாத்திரங்கள்), பிரியமுடன் அப்பா, தலைமுறைகள் இவர்களின் சில நாடகங்கள். மது புருஷோதமன், குமார் ஆகிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்

சத்ய சாய் கிரியேஷன்ஸ்
------------------------------------------------

மாப்பிள்ளை கணேஷ்  என்று நாடக நண்பர்களாலும், இவரது ரசிகர்களாலும் அழைக்கப்படும் கணேஷ் ஆரம்பித்த நாடகக் குழு சத்ய சாய் கிரியேஷன்ஸ்.நகைச்சுவை நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டுதல்களை பெற்று வரும் இக்குழுவினருக்கு எழிச்சூர் அரவிந்தன் நாடகங்களை எழுதி வருகிறார்.
அடக்கடவுளே! எல்லாம் மாயை,கலக்கற மாப்பிள்ளை இவர்களின் சில நாடகங்கள்.

மகாலக்ஷ்மி மகளிர் குழு
------------------------------------------

பாம்பே ஞானம், முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட ஒரு நாடகக் குழுவை நடத்தி வருகிறார்.இவர்களின், போதேந்திராள், ராமானுஜர் போன்ற நாடகங்கள் புகழ் பெற்றவை.26 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இக்குழுவில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்

கலாமந்திர்
----------------------

மும்பையில் தன் கலைப்பணியை ஆற்றிக் கொண்டிருந்த சாணக்யா...சென்னைக்கு வந்தார் பம்பாய் சாணக்கியாவாக.திறமையுள்ளவர்கள் இயக்குநர் சிகரம் கண்களில் பட்டால் என்னவாகும்? ஆம்... பம்பாய் சாணக்கியாவும் கேபியின் சிஷ்யர் ஆனார்.தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை ,வசனம் எழுதினார்.
பின்னர்...கலாமந்திர் என்ற நாடகக் குழுவினை ஆரம்பித்து, நெருடும் உறவுகள், மூன்றாவது கை, டீ.ஆர்..பி. ஆகிய நாடகங்களை வழங்கினார்.
காட்சியமைப்பு, ஒளி அமைப்பு என்ற பிரிவுகளில் பல மாற்றங்களைச் செய்து, தன் திறமையை நிரூபித்து வருகிறார்.,

ரெயில் பிரியா
-----------------------

ரெயில்வேயில் வேலை செய்து வரும் நண்பர்கள் அனந்து, ரவிச்சந்திரன், வெங்கட் ஆகியோர் இணைந்து இக்குழுவை நடத்தி வருகின்றனர்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இக்குழுவின் நாடகங்கள் அனைத்தும் நகைச்சுவை நாடகங்களே!
இவர்களின் ஒரே நாடகம், ஒரே நேரம் இரு நாட்களில் இருமேடைகளில் நடந்துள்ளது.தவிர்த்து, 27மணி நேரம் 12 நாடகங்கள் தொடர்ந்து ஒரே மேடையில் நடத்தி சாதனை புரிந்துள்ளனர்

இவர்களைத் தவிர, இன்று...ரயில் பிரியா(அனந்து),கலாவாஹினி (வி.எச்.பாலு),கே.ஆர்.எஸ்.குமாரின் நாடகக் கலைக் கூடம் (புராண நாடகங்கள்),முத்துகுமாரின் மயூரப்பிரியா< மல்லிக்ராஜின் அஜய் எண்டெர்பிரைசஸ்,ஃபேப் தியேட்டர்ஸ் (ஃபாத்திமா பாபு) ஆகிய குழுக்கள் நாடகங்கள் நடத்தி வருகின்றனர்.

பூவை மணி-

இவரின் பல நாடகங்கள் 80களில் வந்தன.குறிப்பாக கற்பூர பொம்மை, ஒரு பொம்மலாட்டம் நடக்குது,ஆகிய நாடகங்களைச் சொல்லலாம்

சென்னை டிராமா ஹவுஸ்
-----------------------------------------------

சென்னை டிராமா ஹவுஸ் என்ற பெயரில், விவேக் ராஜகோபால்,விகரம் மங்கல், கௌசிக் ரமேஷ், கார்த்திக் பட் ஆகிய இளைஞர்கள் சமீபத்தில் ஒரு குழுவினை ஆரம்பித்து நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

கண்டபடி கண்டுபிடி, இன்று போய் நேற்று வா, குறுக்குவழியில் டிராஃபிக் ஜேம், கல்யாண வேளையில் கரடி ஆகிய நாடகங்கள் இதுவரை அரங்கேறியுள்ளன.புதுமையான தலைப்புகளில் வந்த இவை அனைத்துமே நகைச்சுவை நாடகங்கள்

இயக்குநர் சிகரம் கேபியுடன் இணைந்து :இடியுடன் கூடிய அன்பு மழை:" என்ற நாடகத்தையும் விவேக் ராஜகோபால் நடத்தியுள்ளார்.இந்நாடகத்திற்கு இலக்கியச் சிந்த்னை விருது கிடைத்துள்ளது.


தவிர்த்து சமீப காலமாக இளைஞர்கள் தமிழ் நாடக மேடையில் வந்து கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும்


ராது அவர்கள் பேரன் அம்பரிஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு குழுவினைத் தொடங்கி , தற்போது சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகம் நடத்தி வருகிறார்

ஒய்.ஜி.மதுவந்தி...மகம் எண்டெர்பிரைசஸ் என்ற குழு ஆரம்பித்து தொலைக்காட்சி நடிகர் சுந்தரேஷ்வரனுடன் பெருமாளே  என்ர நாடகம் நடத்தி வருகிறார்

சதிஷ் கிருஷ்ணமூர்த்தி, லீகலி யுவர்ஸ் என்ற குழு நடத்தி வருகிறார்..

கே ஆர் எஸ் குமார் என்பவர் சரித்திர நாடகங்கள் நடத்தி வருகிறார்

மல்லிக் ராஜ் என்பவர் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு ஆகிய நாடகங்களை வெற்ற்கரமாக மேடையேற்றி வந்துள்ளார்.

மேஜிக் லான்டெர்ன் குழுவினர் பின்னியின் செல்வன் நாடகத்தை மேடையேற்றினர்.ஆடுதுறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் இந்நாடகத்தை அரங்கேற்றினர்

இப்படிப்பட்ட குழுக்களைப் பார்க்கையில், இவர்கள் எல்லாம்
தமிழ் நாடக உலகிற்கு அழிவில்லை என்பதை நிரூபித்து வருவதாகவேத் தோன்றுகிறது

Saturday, April 2, 2016

25 - "TV" S,வரதராஜன்

                                   

பேங்க் ஆஃப் இந்தியாவில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர் எஸ்.வரதராஜன்....தன்னுடன் பணிபுரிந்த ஸ்ரீனிவாசன் என்பவருடன் சேர்ந்து 1975ஆம் ஆண்டு வெங்கட் எழுதிய "என் கேள்விக்கு என்ன பதில்" நாடகத்தின் மூலம் முதல் மேடையேறினார்.பின்னர், கிரேசிமோகன் எழுதிய "36 பீரங்கி லேன்' வேதம் புதிது கண்ணன் எழுதிய "சொல்லடி சிவசக்தி" "அவனுடைய செல்லம்மா" ஆகிய நாடகங்கள் அரங்கேறின.

அவர் நாடக மேடையேறிய சமகாலத்திலேயே டிவியிலும் நுழைந்தார்

1977 தொடங்கி 1996 வரை சென்னைத் தொலைக்காட்சியிலும், பின்னர் எட்டு ஆண்டுகாலம்
சன், விஜய்,ராஜ்போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றினார்

1986 முதல் தொலைக்காட்சித்
தொடரில் நடிக்கத்தொடங்கினாலும் 1994 தொடங்கி இயக்குனர்சிகரம் கே பாலசந்தர் அவர்களின்
தொடர்களில் நடித்து திறமையான நடிகர்என்ற
ஐஎஸ்ஐ முத்திரை பெற்றார்
அவரது அபிமானத்திற்குரிய அறிமுகங்களில் வரதராஜனுக்கு ஒரு தனி இடம்உண்டு
இதுவரை 50க்கும்அதிகமான தொடர்களில் நடித்துள்ளார்
தொடர்ந்து ஏதாவது ஒரு துறையில் நாற்பதாண்டுகளாக
டிவியில் தோன்றுவதாலேயே
இவர்  TV வரதராஜன் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்

நாடகங்கள் மீது தணியாத தாகம் கொண்டவர் வரதராஜன்

1994ல் தனக்கென யுனைடெட் விஷுவல்ஸ் என்ற குழுவைத் தொடங்கி இருபது ஆண்டுகளில் 18 நாடகங்களைத் தயாரித்திருக்கிறார் . நடுத்தரவர்க்கத்தின்
பிரச்சனைகளை   விரசமில்லா நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தங்களுக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்கள் இக்குழுவினர்

இவரது நாடகங்கள் சில...

ஜோடிப் பொருத்தம், எல்கேஜி ஆசை, மற்றும்பலர், ஆசைக்கும், ஆஸ்திக்கும், மெகா சீரியல், வாஸ்து வாசு,பிளாஸ்டிக் கடவுள்,ரீல் எஸ்டேட்,ஐபிஎல் குடும்பம்,நேரடி ஒளிபரப்பு .

இவரது குழுவின் முதல் எழுத்தாளர் சிறகு ரவி

வேதம்புதிது கண்ணன் மட்டும் எட்டு நாடகங்கள் எழுதியிருக்கிறார் அடுத்ததாக அதிகமாக எழுதியவர் சந்திரமோகன்

சோ அவர்கள் வரதராஜனின் கலை ஆர்வத்தைக் கண்டு, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற தனது பிரபல நாடகத்தை மீண்டும் வரதராஜன் அரங்கேற்ற அனுமதி அளித்தார்.சோ நாடகத்தில் ஏற்ற அதே நாரதர் வேடத்தில் வரதராஜனும் பிரமாதப்படுத்தினார்.

பின் துக்ளக் சத்யா இவருக்காக இது நம்ம நாடு என்ற முழுநீளஅரசியல் நையாண்டி நாடகம் எழுதினார். இந்தியாவில்மட்டுமின்றி அமெரிக்காவிலும் மிகப்
பெரிய வரவேற்பைப் பெற்ற
நாடகம் இது நம்ம நாடு

பிரபல பத்திரிகையாளரும் விமரிசகருமான வி.ஸ்ரீனிவாசன் (வீஎஸ்வி) தான் எழுதிய ஸ்ரீதியாகராஜரை நாடகமாக்க, பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் இசையமைக்க வரதராஜன் தியாகராஜராக நடிக்க, "ஸ்ரீதியாகராஜர்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக மேடைகளில் தற்சமயம் நடந்து வருகிறது.

இயல், இசை, நாடகம் மூன்றும் ரசிகர்களை அரங்கம் நிறைய ஈர்க்கும் வகையில் இந்நாடகத்தில் அமைந்திருப்பது இதிலுள்ள சிறப்பு அம்சமாகும்



24 - ராதுவும்...நாடகங்களும்..



1962ஆம் ஆண்டு.இந்திய- சீன யுத்தம் நடக்கிறது.மக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை யுத்த நிதியாக அளிக்கின்றனர்.

இவ்வேளையில், ரிசர்வ் வங்கி, சென்னை கிளை ஒரு நாடகம் நடத்தி நிதி திரட்ட நினைத்தது.இதுநாள் வரை பிற குழுக்களின் நாடகங்களைப் பார்த்து ரசித்து வந்த எஸ்.ராதாகிருஷ்ணன் என்ற இளம் ஊழியர் "ஜெயம் நமதே" என்ற நாடகத்தை எழுதினார்.ராதாகிருஷ்ணனின் கன்னி முயற்சி இது.

இவரே..பின்னாளில் நாடக உலகில் "ராது" என அறியப்பட்ட பெரிய சக்தியாய்த் திகழ்ந்தார்.

தன் நண்பர்களுடன் சேர்ந்து "கீதா ஸ்டேஜ்" என்ற குழுவை ராது ஆரம்பித்தார். இன்றும் மக்களால் மறக்க முடியாத..40 ஆண்டுகளுக்கும் மேல் பல் வேறு நடிகர்கள் நடிக்கப்பட்ட"கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்."வாய்ச்சொல் வீரரடி" அடுத்த நாடகம்.

இந்நிலையில், ஆனந்த விகடனிலும், பின்னர் இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையிலும் ஆசிரியராய் இருந்த மணியன், மயன் தியேட்டர்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து ராதுவிடம் ஒப்படைத்தார்.

சப்தஸ்வரங்கள் என்ற  நாடகம் அரங்கேறியது.அதில், பிரபல நகைச்சுவை நடிகராய்த் திகழ்ந்த கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா ஆகியோர் நடித்தனர்.

இவரால் நாடக மேடைக்கு வந்தவர்கள் ஏராளம்.காத்தாடி ராமமூர்த்தி,வி.கோபாலகிருஷ்ணன், நவ்ரங் விசு ஆகியோர் ராது குழுவில் நடித்தவர்கள் எனலாம்.

1988ல் ஒரே நாளில் கல்யாணத்தில் கலாட்டா நாடகம் எட்டு முறை நடத்தப்பட்டு லிம்கா புக் ஆஃப்  ரிகார்ட்ஸில் இடம் பெற்றது.தவிர்த்து, ஒரே நாடகம் பத்துமுறை நடந்து மீண்டும் ரிகார்ட் ஆனது.

1992ல் இவரது பதினைந்து  நாடகங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது.

 எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்டு, பி.எஸ்.ராமய்யா எழுதிய "போலீஸ்காரன் மகள்". பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் ஆகிய நாடகங்களை 1992ல் மீண்டும் மேடையேற்றினார் ராது.

தன் குழுவினரைத் தவிர, பல குழுக்களுக்கு நாடகம் எழுதித் தந்துள்ளார் ராது.முக்கியமாக, தில்லை ராஜன், நவ்ரங் விசு, அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி குழுக்களைச் சொல்லலாம்.
நவ்ரங் ஆர்ட்ஸ் விசுவிற்கு இவர் எழுதித் தந்த "மை டியர் குட்டிப்பிசாசு" இன்றளவும் பேசப்படும் நாடகமாகும்

இவரது நாடகங்கள் சில....தரை தட்டிய கப்பல், செக்க்ஷன் 302, மண்ணில் தெரியுது வானம், பாவ மன்னிப்பு,இன்று நீ நாளை நான்

நாடக அகடெமி என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நாடகக் குழுக்களுக்கு வாய்ப்பளித்தார்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருது பெற்ற ராது ஆற்றிய கலைப்பணி அளப்பரியது.

2009ல் நம்மை விட்டுப் பிரிந்த இவரது சேவையை இவரது மகள் பிரியா, மருமகன் கிஷோர், பேரன் அம்பரீஷ் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்.  

Friday, April 1, 2016

23 - "காத்தாடி" ராமமூர்த்தி


                       


"காத்தாடி" ராமமூர்த்தி

"சோ" 1959ல், "என்னிடம் கிடைத்தால்" என்ற நாடகத்தை எழுதி நண்பர்களுடன் சேர்ந்து நடித்தார்/அதில், ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று கதாபாத்திரங்கள் வருவார்கள்.

ஒருவர் பத்திரிகை ஆசிரியர் இடும்பன்
மற்றவர் உதவி ஆசிரியர்..ஆட்டம்பாம்
மூன்றாமவர் கார்ட்டூனிஸ்ட் .அவர் பெயர் காத்தாடி

கார்ட்டூனிஸ்ட் ஆக ராமமூர்த்தி என்பவர் நடித்தார்.இந்நாடகம் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.அந்த கதாபாத்திரத்தின் பெயரும் நடிகரின் பெயருடன் ஒட்டிக்கொண்டது.ஆம்..அந்த நடிகரே... "காத்தாடி" ராமமூர்த்தி என்னும் புகழ்பெற்ற நாடக நடிகர் ஆவார்.த்னியார் நிறுவனமொன்றில் அதிகாரியாய் வேலை செய்தபடியே தன் கலைப்பணியைத் தொடர்ந்தார் ராமமூர்த்தி.

1938 ஆம் ஆண்டு பிறந்த சுந்தரேஸ்வரர் ராமமூர்த்தி, 50க்கும் மேற்பட்ட நாடகங்களில் 6500 முறைகளுக்கு மேல் நடித்து சாதனை புரிந்து வருபவர் ஆவார்.இவரது ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் நாடகக் குழுவினருக்கு கே.கே.ராமன், சாரதி, ஆகியோர், "good bye to love", "matchless matchess","runaway husband",  போன்ற நகைச்சுவை நாடகங்களை எழுதினர்.

விசு இவர்களுக்காக எழுதிய "பட்டினப்பிரவேசம்" நாடகமும், "டௌரி கல்யாணம்" நாடகமும் பின்னர் திரைப்படங்களாகின."பட்டினப்பிரவேசம்" பார்த்த கேபி, காத்தாடி, டில்லி கணேஷ் நடித்த அந்நாடகத்தை திரைப்படமாக்கியதுடன் , அவர்களையும் படத்தில் நடிக்க வைத்தார்.பின்னர் பல திரைப்படங்களில் காத்தாடி நடித்து வருகிறார்.தவிர்த்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

பின்னர், இவரது குழுவினருக்கு கிரேசி மோகன், "அய்யா..அம்மா அம்மம்மா" என்ற நாடகத்தை எழுதினார்.

சன் ஆஃப் சாம்பு நாடகத்தில், சாம்பவின் மைந்தனாக நடித்த இவர் நடிப்பை அன்று பாராட்டாத மக்களே இல்லை எனலாம்

எஸ்,எல்.நாணு இவர்களுக்காக "நீங்க யார் பக்கம்". பிள்ளையார் பிடிக்க, வாட்ஸ் அப் வாசு" "நினைச்சது ஒன்னு", அப்பா..அப்பப்பா", சூப்பர் குடும்பம், ஐக்கியமுன்னணி'ஆகிய நாடகங்களை எழுதினார்.

சென்னையீல் இன்றைய பிரபல நாடக் குழுக்களில் "காத்தாடியின்" ஸ்டேஜ் கிரியேசஷன்ஸும் ஒன்று எனலாம்

சமீபத்தில் ராமமூர்த்தியின் 60 ஆண்டு நாடக சேவையும், அவரது குழுவின் பொன்விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது