Wednesday, April 13, 2016

29 - எனது சௌம்யா நாடகக் குழு

                                             

                                                   (நூல் வேலி நாடகத்தில் எங்கள் நடிகர்கள்)


பள்ளியில் படிக்குக் காலத்திலேயே நாடகத்துறையில் பேரார்வம் கொண்டிருந்த நான், எனது பத்தாவது வயதில் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் பிரேமா வாக நடித்தேன்.இதுதான் எனது முதல் நாடகப் பிரவேசம்.

பின்னர், வீட்டுத் திண்ணையில் அப்பாவின் வேட்டியை திரையாக்கி, வீரபாண்டிய கட்டபொம்மனாக முழங்கினேன்.பள்ளி ஆண்டு விழாவில், "ராஜ ராஜ சோழன்" நாடகத்தில் நகைச்சுவைப் புலவர் "மேதீனிராயரா"க நடித்தேன்.

1967ல் யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அஸோசியேஷன்ஸ்  என்ற சங்கத்தை நண்பர்களுடன் துவக்கி, நான், விசு, மௌலி ஆகியோர் ரத்தபாசம், லவ் ஈஸ் பிளைண்ட்" (மௌலி எழுதிய முதல் நாடகம்) ஆகிய நாடகங்களைப் போட்டோம்.

1973ல் அம்பத்தூர் கல்சுரல் அகடெமி என்ற சபாவைத் தொடங்கி, நான்கு ஆண்டுகள், அதன் அங்கத்தினர்களுக்காக பல பிரபல நடிகர்களின் நாடகங்களைப் போட்டேன்.

1979ல் பிரபல நடிகர் அமரர் எம்.கே.ராதா, குத்துவிளக்கு ஏற்ற சௌம்யா நாடகக் குழுவைத் துவக்கினேன்.

எனது குழுவிற்கு என்னைத் தவிர்த்து, கே.கே.ராமன், பரத், வெங்கட் ஆகியோர் நாடகங்களை எழுதித்தந்தனர்.

இதுவரை 22 நாடகங்களை எனது குழு நடத்தியுள்ளது எங்களது நாடகங்கள் சில..

யாரைத்தான் கொல்லுவதோ? (கே.கே.ராமன்) புதியதோர் உலகம் செய்வோம், நெஞ்சங்கள் வாழ்தத்ட்டும் (பரத்), குடும்பம் ஒரு சிலம்பம் (வெங்கட்)

நான் எழுதிய சில நாடகங்கள், காயத்ரி மந்திரம்,பத்மவியூகம், சொல்லக் கொதிக்குது நெஞ்சம், மாண்புமிகு நந்திவர்மன்< பாரதரத்னா" நூல்வேலி, காத்தாடி, என்றும் அன்புடன்.எனது மழையுதிர்காலம் என்ற நாடகத்தில், மூன்றே மூன்று பாத்திரங்கள்.அத்துடம் மழையும் ஒரு பாத்திரமாகவே வரும்.

பல விருதுகளை எனது நாடகங்கள் பெற்றுத் தந்திருந்தாலும்.....சிறந்த நாடகமாகக் கோடை நாடக விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லக் கொதிக்குது நெஞ்சம் பெற்ற விருதையும், இலக்கியச் சிந்தனை அமைப்பினர் சிறந்த நாடகம் என எனது "பாரத ரத்னா" நாடகத்தையும் தேர்ந்தெடுத்ததையும் எனது வாழ்நாளில் மறக்கமுடியாது.

என் குழுவினரைத் தவிர்த்து, கோவை பத்து, அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகிய குழுவினருக்கு நாடகம் எழுதியுள்ளேன்.

எனது நாடகங்களில், மணிபாரதி, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், ஓமக்குச்சி நரசிம்மன், ராம்கி, பி.டி.ரமேஷ், குட்டி பத்மினி, கமலா காமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.




30 - "குட ந்தை மாலி" என்னும் சாதனையாளர்




என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி 58ஆண்டுகளுக்குமுன் 1959ல் துர்கா டிரமாடிக் அசோசியேஷன்ஸ் ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என்று பெயர் மாறியது.அந்தக் குழு இன்று மாலிஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.மகாலிங்கத்தை, குடந்தை மாலி என்று ஆக்கியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.ஆவார்

இதுவரை இக்குழு 34 நாடகங்களை நடத்தியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய வெற்றி நாடகங்கள்.20 நாடகங்களுக்கான கதை, வசனம், இயக்கம் மாலியினுடையது..மீதம் 14 நாடகங்கள் பிறர் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்", ஆர்.சூடாமணியின் ஆழ்கடல்,திருப்பூர் கிருஷ்ணனின் பொய் சொல்லும் தேவதைகள், ஷ்யாமளாராவின் மன்னிக்க வேண்டுகிறேன் ஆகியவற்றை நாடகமாக்கிய பெருமை மாலிக்கு உண்டு

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர்,நாணு, மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராமன்,நவாப் கோவிந்தராஜன் ஆகியோர் இவர் குழுவில் நடித்துள்ள சில நடிகர்கள்.

இவரது "ஞானபீடம்" மிகவும் புகழ் பெற்ற நாடகம் .115 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள இந்நாடகம், இன்றும் நடைபெற்று வருகிறது.

ஆனந்தவிகடன் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ.கே.பட்டுசாமியின் கடவுள் எங்கே? என்ற சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் இவர்.

அன்னை சாரதா தேவியின் 150ஆம் பிறந்த நாள் விழாவில் அவரது வாழ்க்கையை  "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள்..."மாப்பிள்ளை முறுக்கு, சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் (இந்நாட்கம் 350 முறை நடைபெற்றுள்ளது),நம்மவர்கள், ஆத்ம விசாரணை,நிதர்சனம், சம்மதம் ஆகும்

மாலி தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் என்று சொல்லலாம்.இவருக்கு 20க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்கள் வழங்கியுள்ளன.

31 -ஷ்ரத்தா
-----------------

                           
2010 ஆம் ஆண்டு டி.டி.சுந்தரராஜன்,சிவாஜி சதுர்வேதி, பிரேமா சதாசிவம் ஆகியோர் ஷ்ரத்தா என்ற குழுவினை ஆரம்பித்து...பிரம்மாண்டமான நாடகங்களை நடத்தி வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு ஒரு நாடகம்.

இவர்களுக்காக விவேக் ஷங்கர் எழுதிய தனுஷ்கோடி நாடகத்தில், மழை பொழிவதை...லாரிகளில் தண்ணீர் வரவழைத்து...சுழற்சி முறையில் மேடையில் மழையைக் காட்டினர்.

பின்னர், வாத வீரான் நாடகத்தில்...பாதாளச் சிறையைக் காட்டியதுடன் நில்லாது, மேடையிலேயே குதிரையைக் கொணர்ந்து காட்டினர்.கன்னையா காலத்திற்குப் பிறகு விலங்கு ஒன்றை மேடையில் காட்டியது இவர்கள் மட்டுமே எனலாம். இந்நாடகம் பற்றி ஒரு பத்திரிகை தனது விமரிசனத்தில் " அண்மைக்காலத்தில் இது போன்ற ஒரு நாடகத்தை கண்டிருக்கமுடியாது,நாடகங்கள் மறுமலர்ச்சிக்கு இந்நாடகம் ஒரு படிகல்லாய் அமையும் " என்றுள்ளது.

ஆனந்த ராகவ் இவர்களுக்காக எழுதிய நாடகங்களில் சில தூஸ்ரா மற்றும் சதுரங்கம். சதுரங்கம் என்ற நாடகத்தில் மிசோராம் பகுதி காட்டு எல்லையை தத்ரூபமாகக் காட்டினர்

ஸ்ரீவத்சன் எழுதிய நாடகங்கள்  வலை,ஹனுமான், நல்லதோர் வீணை

இயக்குநர் சிகரத்தின் "இடியுடன் கூடிய அன்பு மழை"யும் இவர்கள் அரங்கேற்றிய நாடகங்கள்.

விஜய் டெண்டூல்கரின் "bobbychi ghostha' வின் தமிழாக்கமான பாரதி இவர்கள் நாடகங்களில் மிகச்சிறந்த நாடகங்களில் ஒன்று எனலாம்.
வருடங்களில், 20 நாடகங்கள்  11 எழுத்தாளர்கள் இவர்களது சாதனை.

Shraddha's focus has been two aspects - quqlity and originality. இதுவே இவர்கள் தாரக மந்திரம் எனலாம்.

இவர்கள் குழுவில் டெக்னிகல் அட்வைசராய் இருக்கும் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தியின் பணி அளப்பரியது எனலாம்.

இவர்கள் நாடகங்களைக் காண்பவர்கள்....தமிழ்மேடை நாடகங்களுக்கு அழிவு வரவே வராது என்று கண்டிப்பாகச் சொல்வார்கள்.

மிகுந்த பொருட்செலவில்...நாடக முன்னேற்றம் ஒன்றே  குறிக்கோள் என்று பணியாற்றும் இக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்

  

No comments:

Post a Comment