Saturday, April 2, 2016

24 - ராதுவும்...நாடகங்களும்..



1962ஆம் ஆண்டு.இந்திய- சீன யுத்தம் நடக்கிறது.மக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை யுத்த நிதியாக அளிக்கின்றனர்.

இவ்வேளையில், ரிசர்வ் வங்கி, சென்னை கிளை ஒரு நாடகம் நடத்தி நிதி திரட்ட நினைத்தது.இதுநாள் வரை பிற குழுக்களின் நாடகங்களைப் பார்த்து ரசித்து வந்த எஸ்.ராதாகிருஷ்ணன் என்ற இளம் ஊழியர் "ஜெயம் நமதே" என்ற நாடகத்தை எழுதினார்.ராதாகிருஷ்ணனின் கன்னி முயற்சி இது.

இவரே..பின்னாளில் நாடக உலகில் "ராது" என அறியப்பட்ட பெரிய சக்தியாய்த் திகழ்ந்தார்.

தன் நண்பர்களுடன் சேர்ந்து "கீதா ஸ்டேஜ்" என்ற குழுவை ராது ஆரம்பித்தார். இன்றும் மக்களால் மறக்க முடியாத..40 ஆண்டுகளுக்கும் மேல் பல் வேறு நடிகர்கள் நடிக்கப்பட்ட"கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்."வாய்ச்சொல் வீரரடி" அடுத்த நாடகம்.

இந்நிலையில், ஆனந்த விகடனிலும், பின்னர் இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையிலும் ஆசிரியராய் இருந்த மணியன், மயன் தியேட்டர்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து ராதுவிடம் ஒப்படைத்தார்.

சப்தஸ்வரங்கள் என்ற  நாடகம் அரங்கேறியது.அதில், பிரபல நகைச்சுவை நடிகராய்த் திகழ்ந்த கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா ஆகியோர் நடித்தனர்.

இவரால் நாடக மேடைக்கு வந்தவர்கள் ஏராளம்.காத்தாடி ராமமூர்த்தி,வி.கோபாலகிருஷ்ணன், நவ்ரங் விசு ஆகியோர் ராது குழுவில் நடித்தவர்கள் எனலாம்.

1988ல் ஒரே நாளில் கல்யாணத்தில் கலாட்டா நாடகம் எட்டு முறை நடத்தப்பட்டு லிம்கா புக் ஆஃப்  ரிகார்ட்ஸில் இடம் பெற்றது.தவிர்த்து, ஒரே நாடகம் பத்துமுறை நடந்து மீண்டும் ரிகார்ட் ஆனது.

1992ல் இவரது பதினைந்து  நாடகங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது.

 எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்டு, பி.எஸ்.ராமய்யா எழுதிய "போலீஸ்காரன் மகள்". பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் ஆகிய நாடகங்களை 1992ல் மீண்டும் மேடையேற்றினார் ராது.

தன் குழுவினரைத் தவிர, பல குழுக்களுக்கு நாடகம் எழுதித் தந்துள்ளார் ராது.முக்கியமாக, தில்லை ராஜன், நவ்ரங் விசு, அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி குழுக்களைச் சொல்லலாம்.
நவ்ரங் ஆர்ட்ஸ் விசுவிற்கு இவர் எழுதித் தந்த "மை டியர் குட்டிப்பிசாசு" இன்றளவும் பேசப்படும் நாடகமாகும்

இவரது நாடகங்கள் சில....தரை தட்டிய கப்பல், செக்க்ஷன் 302, மண்ணில் தெரியுது வானம், பாவ மன்னிப்பு,இன்று நீ நாளை நான்

நாடக அகடெமி என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நாடகக் குழுக்களுக்கு வாய்ப்பளித்தார்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருது பெற்ற ராது ஆற்றிய கலைப்பணி அளப்பரியது.

2009ல் நம்மை விட்டுப் பிரிந்த இவரது சேவையை இவரது மகள் பிரியா, மருமகன் கிஷோர், பேரன் அம்பரீஷ் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்.  

No comments:

Post a Comment