Sunday, April 17, 2016

33 - இன்றைய நாடகங்களின் நிலை



சினிமா, தொலைக்காட்சி ஆகியவை மக்களை ஈர்த்துள்ள அளவிற்கு  இன்று, நாடகங்கள் மக்களை ஈர்க்கவில்லை.

முழுநேர நாடகக் குழுக்கள் நாடகத்தை நம்பி வாழ முடியாத நிலை.அமெச்சூர் நாடகக் குழுக்கள்தான் இன்று நாடகங்கள் நசிந்துவிடாமல் காத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

ந.முத்துசாமி, கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முழு நேர கலைஞர்களை தயார் செய்து வருகிறார்.உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நடிகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.ஒரளவு வெற்றியுடன் இந்த மைப்பு செயல் பட்டு வருகிறது

நாற்காலிக்காரர், உந்திச்சுழி, நிரபராதிகளின் காலம், கடைசி ஐந்து வினாடிகள் ஆகியவை இவர்கள் தயாரிப்பில் வந்த நிகழ்ச்சிகள் ஆகும்.

இதே போன்று ஞாநி அவர்களின் "பரிக்க்ஷா" குழுவினரும் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.வீதி என்ற நாடகக் குழுவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவை, சபா நாடகங்களுக்கு மாற்றாக இலக்கிய உணர்வு கொண்ட நாடகங்களை நடத்தி வருகின்றன.

இதே முறையில், மதுரையில், "நிஜ நாடக இயக்கம்", திருச்சியில் நாடக சங்கம், பாண்டிச்செரியில் , "கூட்டுக்குரல்கள்", ஆழி நாடகக் குழு, தன்னானே குழு, திருவண்ணாமலையில் "தீட்சண்யா", சென்னையில் "ஆடுகளம்" ஐக்கியா" "பல்கலை அரங்கம்", தில்லியில் "யதார்த்தா". ஆகிய குழுக்கள் நாடக இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தஞ்சை தமிழ்ப்பல்கலைககழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகங்களில் நாடகத்துறை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடகத்திற்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.பேராசிரியர் ராமானுஜம், எஸ்.பி.ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பங்கு போற்றற்குரியதாகும்.

இனி நாடகத்தின் நிலை என்ன?

நாடகம் என்பது சிறு சிறு துகளாக மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த வடிவம்.ஆகவேதான் உலகம் ஒரு நாடக மேடை...அதில் நாமெல்லோரும் நடிகர்கள் என்றனர்.

இன்று சினிமா, தொலைக்காட்சி ஆகியவை அசுர வலிமையுடன் ஒரு சேரப் பலரைச் சென்றடையும்.ஆனால், நாடகம் மட்டுமே ஒரு யதார்த்தத்தை..ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை நம் முன்னே நிறுத்துகிறது எனலாம்.எந்திரமயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகம் மனிதனின் கற்பனைகள், படைப்புகள் ஆகியவற்றை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

நாடகம் ஒருவனின் கற்பனைகளை மீட்டெடுக்கும்/
ஒரு கவிதையை அவன் வசப்படுத்தும்
அவன் வாழ்க்கையை...இன்னும் அதிகக் கற்பனையுடன்..இன்னமும் அதிக கற்பனையுடன் ...இன்னமும் அதிக படைப்பு மனசுடன் அவனை எதிர் கொள்ள வைக்கும்.

ஆரோக்கியமான கலை வளர்ச்சிக்கு பொறுப்பேற்று, ஒரு அரசு முயன்றால்தான் நாடகங்கள் மீண்டும் மறுமலர்ச்சி அடையும்.
நாடகங்கள் சிறப்புடன் இயங்க....பாடத்திட்டத்தில்...நாடகங்களையும் ஒரு சிறப்புப் பாடமாக ஆக்க வேண்டும்.

ஊடகங்கள் நாடக வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

ஒருகாலகட்டத்தில் அனைத்து தினசரிகளும், பத்திரிகைகளும், புதிதாக அரங்கேறும் நாடகங்களை விமரிசித்தன. அவற்றைப் பார்த்து, நாடகங்களுக்கான ஆத்ரவும் பெருகியது.
 உதாரணமாக    ஆனந்தவிகடனில் வீயெஸ்வி விமரிசனம் வந்தால் அந்நாடகம் நூறு முறை அரங்கேறும் வாய்ப்பைப் பெற்றன.அதேபோல  ஹிந்து, எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவையும் தொடர்ந்து விமரிசனங்கள் வெளியிட்டன.ஆனால் அப்பணியை ஹிந்து பத்திரிகையைத் தவிர வேறு யாரும் செய்வதில்லை.


மீண்டும் நாடகங்கள் தழைக்க ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும்

சமண...புத்தகாலத்தில் நாடகங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி திரும்ப வேண்டாம்.

நாடகத்தை ஆதரிப்போம்///நாடகத்தைப் போற்றுவோம்

வாழ்க நாடகக் கலை
வளர்க நாடகங்கள்

No comments:

Post a Comment