Sunday, April 10, 2016

28 - "நல்லி" குப்புசாமி செட்டியார்

                               


சென்ற நூற்றாண்டின் பின்பாதி தமிழ் நாடகங்களின் பொற்காலம் என முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

1990 களுக்குப் பிறகு....பல சபாக்கள் மூடப்பட்டன. நாடகங்களுக்கு வரும் மக்கள் குறைந்தனர்.சபாக்களில் போதுமான அங்கத்தினர்கள் இல்லாததால், பொருள் வரவு பாதிக்கப்பட, நஷ்டத்தில் இயங்க முடியாது என பல சபாக்கள் மூடப்பட்டன.

இதற்கெல்லாம் காரணம்...

பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் உருவானதே! இவை பல நாடகங்களை ஒலி/ஒளி பரப்பின.திரைப்படங்களை ஒலி/ஒளி பரப்பின.பணம் செலவு செய்து வெளியே சென்று நாடகங்களைப் பார்ப்பதைவிட...மக்கள் தங்கள் வீட்டின் வரவேற்பறையிலேயே செலவு செய்யாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.அரங்குகளில் நாடகங்கள் குறைந்தன.சபாக்கள் மூடப்பட்டன.பல நாடகக் குழுக்கள் காணாமல் போனது.முன்னர், சாதாரண குழுக்களும் நூறு முறைகளுக்கு மேல் நாடகம் போட்ட நிலை மாறி...பிரபல குழுக்கள் நாடகங்கள் போடவும் திணறின.

இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தாலும்....நாடகக் கலை அழியவில்லை.முக்கியக் காரணம் அமெச்சூர் நாடகக் குழுவினர் என உறுதியாகச் சொல்லலாம்.இன்றும் சில சபாக்கள் நாடகங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நாடகங்கள் அழியாமல் இருக்க இன்று முக்கியக் காரணங்களில் ஒன்று.....ஸ்பான்சர்ஸ்....ஆம்....நாடகங்கள் நடத்துவதற்கான செலவுகளை ஏற்பவர்கள்,சில தொழில் நிறுவனங்கள் இந்த நற்பணியாற்றி வருகின்றன.அந்த நாட்களில் அரசர்கள் கலைஞர்களை ஆதரித்தனர்....இந்நாளில் அநத வேலையை ஸ்பான்சர்ஸ் செய்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல

அப்படி, நாடகங்கள் நடக்க உதவி வருகிறவர்களில், "நல்லி" குப்புசாமி செட்டியாரின் பங்கு அளப்பரியது எனலாம்.

1940 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் பிறந்த குப்புசாமி செட்டியார்....1958ல் அவரது தாத்தாவின் மறைவிற்குப் பின் அவர் செய்து வந்த ஜவுளித்துறையின் பொறுப்பை ஏற்றார்.வெறும் 200 சதுர அடியில் இருந்த வியாபாரம் குப்புசாமி செட்டியாரின் கடின உழைப்பால் 30000 சதுர அடியில் இயங்கும் நிறுவனமானது. இன்று உலகம் முழுதும் "நல்லி" சில்க்ஸ் பிரபலம்.

இவர், இன்று இசை, நாடகங்களுக்கு உதவுவதுடன்..கல்விக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி வருகிறார்,

ஸ்ரீ கிருஷ்ண கான சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, பிரம்ம கான சபா,பைரவி கான சபா, முத்ரா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை கல்சுரல் அகடெமி ஆகிய சபாக்களின் தலைவர் பொறுப்பை எற்றுள்ளார்.

தவிர்த்து, மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டியின் உப தலைவர்

பாரதீய வித்யா பவன், சென்னைக் கிளையில் நிர்வாகக்குழுவில் உள்ளார்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வருடந்தோறும் நடத்தும் கோடை நாடக விழாவில் இவரது பங்கு அளப்பரியது.

தமிழ், தெலுங்கு,ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அறிந்த நல்லி செட்டியார் பல நூல்களை எழுதியுள்ளார்.அவற்றில் இரு நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது,

தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ தேசிய விருதும் பெற்றுள்ளார்

ஈத லிசைப்பட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

(கொடைத்தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவும் இல்லை)

என்ற குறளுக்கு ஏற்ப நடந்து வருபவர் நல்லி குப்புசுவாமி செட்டியார் எனலாம் 

1 comment: