கார்த்திக் ராஜகோபால்
நாடகக் குழுக்கள் நாடகம் நடத்துவதற்கான அரங்கினைத் தேர்ந்தெடுத்து, அவர்களே டிக்கெட்டுகளை விற்று....என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று வந்த நிலைமை 1950களில் மாறத் தொடங்கியது எனலாம்.
சென்னையிலும், பிற நகரங்களிலும் சபாக்கள் தோன்ற ஆரம்பித்தன.இவற்றின் நோக்கம் இயல், இசை,நாடகங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.
இந்த சபாக்கள் அங்கத்தினர்களைச் சேர்த்தனர்.அந்த அங்கத்தினர்களுக்கு மாதா மாதம் இசை, நாடகம் என இரண்டு மூன்று நிகழ்ச்சிகளைக் காண ஏற்பாடு செய்தனர்.
நாடகங்களை நடத்தும் குழுக்களுக்கு, அவர்களது படைப்புகள் மக்களை அடைய சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தனர்.இந்த நிலை 1990வரை நீடித்தது எனலாம்.அந்தக் காலம் தமிழ் நாடக உலகின் பொற்காலம் ஆகும்.
சென்னையில் மட்டும் 130 சபாக்களும், தமிழ்நாடு முழுதும் முக்கிய நகரங்களில் சபாக்கள், தமிழ்ச் சங்கங்கள் உருவாகின.தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ் நாடகங்களுக்கு சந்தர்ப்பங்கள் வந்தன.
சாதாரண அமெச்சூர் குழுவினரின் படைப்புகளும் நூறு முறைகளுக்குமேல் நடந்தன.
இப்படிப்பட்ட சபாக்கள் பற்றி எழுதுகையில்...கடைசிவரை நாடகங்களே தன் மூச்சு என வாழ்ந்த கார்த்திக் ராஜகோபாலை மறந்துவிட முடியாது.இவரின் நாடகத்தீற்கான சேவையை அளவிட முடியாது.
மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்து வந்த ராஜகோபால் தன் நண்பர்களுடன் சேர்ந்து, 1951ல் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற சபாவினைத் தோட்ங்கி 23 ஆண்டுகள் சேவை புரிந்தார்.பின்னர், தவிர்க்க முடியா காரணங்களால் அச்சபாவிலிருந்து விலகி 1975ஆம் ஆண்டு "கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற சபாவை ஆரம்பித்தார்.இவருக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள்...எம்.ஆர்.கிருஷணமூர்த்தி, ராமானுஜம், சங்கு, ஏ.வி.ஜெயராம் ஆகியோர்.
சென்னை நகரின் முன்னணி சபாக்களில் ஒன்றாக மாறியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்.
நாடகக் குழுக்கள் , இந்த சபாவில் தங்கள் நாடகங்கள் அரங்கேறுவதையே விரும்பின.நாடகத்துறைக்கு ராஜகோபால் அளித்து வந்த ஊக்கத்தால் பல பிரபலங்கள் பின்னாளில் திரைப்படத்திலும் ஜொலித்தனர் எனலாம்.அவர்களில் சிலர், சோ, பாலசந்தர், விசு, மௌலி, கோமல் சுவாமினாதன், கிரேசி மோகன், எஸ்,வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி.
1990ஆம் ஆண்டிலிருந்து கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை நாடகவிழாவினை நடத்தி...பல பரிசுகளை நாடகங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் ராஜகோபால்.எங்களது சௌம்யா குழுவினர் சார்பில், அவருக்கு 1989ஆம் ஆன்டு..கே.பாலசந்தர் தலைமையில் நாடகப்பேரரசு என்ற பட்டத்தை அளித்த பேறு பெற்றோம்.
2014 ஆம் ஆண்டு தனது 91ஆவது வயதில் ராஜகோபால் நம்மை விட்டு மறைந்தார்.
இன்றும் அவர் விட்டுச் சென்ற பணியினை ...திரு.சபாரத்தினம்..தலைமையில், ஏ.வி.எஸ்.ராஜா, ஏ.வி.ஜெயராம், ராஜகோபால் சேகர், வெங்கடசுப்ரமணியம் ஆகியோர் தங்களது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து வருகின்றனர்.
நாரத கான சபா
சென்னை சாபாக்களில் மற்ரொரு முக்கிய சபா நாரத கான சபாவாகும்.
1958ல் ஆரம்பித்த இந்த சபா, முதலில், மைலாப்பூர் வி.எம்.தெருவில் ஒரு தற்கால அரங்கிலும் பின்னர் மியூசிக் அகடெமி அரங்கிலும் அங்கத்தினர்களுக்காக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பின்னர் 1972ல் ஆள்வார்பேட்டையில் இடம் வாங்கி, தங்களுக்கான குளிர்பதன அரங்கை 1988ல் கட்டி முடித்தனர்.அக்காலகட்டத்தில் செயலர் ஆர்.கிருஷ்ணசுவாமியின் பங்கு அளவிடமுடியாது.இன்று...பல கலாசார விழாக்களும், நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கான நிகழ்வுகளும், உபந்யாசங்களும் இந்த அரங்கில் நடைபெறுகின்றன.சென்னையின் பெயர் சொன்னால் உடனே நினைவிற்கு வரும் கட்டிடங்களில் இந்த அரங்கமும் ஒன்றாக ஆகிப்போனது.
இயல், இசை, நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த சபா இயங்கி வருகிறது.
இந்த அரங்கிற்கு சத்குரு ஞானானந்த ஹால் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
-------------------------------------------------------
இந்திய கலை ,கலாச்சாரததைப் போற்றிப் பேணவும், பிரபலப்படுத்தவும் மணி திருமலாச்சாரியார் என்ற கலை ஆர்வலர் 1896ல் சங்கீத வித்வத் சபையை ஆரம்பித்தார்.
இச்சபை, 1990ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பள்ளி கொண்டுள்ல பார்த்தசாரதி பெருமாள் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
முதன் முதலில் தோன்றிய சபா இதுவே எனலாம்.மைசூர் திவாங்களும், திருவாங்கூர் அரசவையைச் சேர்ந்தோரும், உயர் நீதி மன்ற நீதிபதிகளும் இதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஜி.என்.பாலசுப்பிரமணியனின் தந்தை நாராயனசுவாமி முதல் செயலாளராக இருந்தார்.
கர்னாடக சங்கீதம் மட்டுமன்றி ஹரிகதை,நாடகம், நாட்டியம் ,ஆன்மீக உபந்நியாசங்கள் நடந்தன.
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எஸ்.வி.ஸகஸ்ரநாமம்,சிவாஜி கணேசன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகங்கள் நடத்தப்பட்டன.
திருமதி ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் "காவிரி தந்த கலைச்செல்வி" முதலில் இந்த சபாவில்தான் நடந்தது.
இன்றும் பல நாடகக் குழுக்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறந்த பணியாற்றி வருகிறார்.
பிரம்ம கான சபா
--------------------------------
தொழிலதிபர் சித்ரா நாராயணசாமியை தலைவராகக் கொண்டு 1969ல் ஆரம்பிக்கப் பட்டது இந்த சபா.திருவாளர்கள், முத்து, சேதுராமன் ஆகியோர்கள் அன்றைய செயலாளர்கள்.இயல், இசை, நாடகம் ஆகிய
வற்றிற்கு இன்றளவும் ஆதரவளித்து வரும் இந்தசபாவின் இன்றைய காரியதரிசியாக ரவிசந்திரன் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.இன்றைய தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆவார்
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்
-----------------------------------------------------
1951ல் ஆரம்பித்தது இந்த சபா. இந்த சபாவிலும் நாடகங்கள் அரங்கேற்ற குழுக்கள் விரும்பின.திரு ராஜகோபால், வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் நாடகங்கள் நடந்தன.
இன்றும் நாடக விழாக்கள் மூலமும், அங்கத்தினர் மாத நிகழ்ச்சியாகவும் நாடகத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
திரு வரதராஜன், பத்மனாபன் ஆகியோர் இன்றைய செயலாளர்கள் ஆவர்.
ஸ்ரீகிருஷ்ண கான சபா
1953ல் திரு யக்னராமன் முயற்சியில் தியாகராய நகர் கிரிஃப்ஃபித் தெருவில் (இன்று மகராஜபுரம் சந்தானம் சாலை) உருவானது.தொடர்ந்து அங்கத்தினர்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.இன்றைய செயலர் ஒய்.பிரபு ஆவார்
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா
1945ல் தியாகராய நகரில், ஜி.என்.செட்டி சாலையில் துவங்கப் பட்டது இந்த சபா.வாணிமகால் என அனைவராலும் அழைக்கப்பட்டது.இச்சபா ஆரம்பிக்க மூல காரணமாகவும், உதவியாகவும் இருந்தவர் திரைப்பட நடிகர் அமரர் ஸ்ரீ சி.வி.நாகையா ஆவார்.இன்றும் திரு டெக்கான் கிருஷ்ணமூர்த்தி, திரு எஸ்,வி.எஸ்.மணி ஆகியோர் சாபவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்
ஆர்.ஆர்.சபா- சென்னை
----------------------------------------------
சென்னை மைலாப்பூரில் . ஏ.கே.ராமசந்திர ஐயர், லோகநாத நுதலியார், நடேச ஐயர் ஆகியோரால் 1929ல் துவக்கப்பட்டது ஆர்.ஆர்.சபா என அனைவராலும் அறியப்பட்ட ரசிக ரஞ்சனி சபா.இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறையினருக்கும் வாய்ப்பளித்து கலைச்செவையை இன்றும் தொடர்ந்து வருகிறது
முத்ரா
----------------
பாஸ்கர் தன்மனைவி திருமதி ராதா பாஸ்கருடன் இணைந்து முத்ரா என்ற சபாவை 1995ல் ஆரம்பித்தனர். இயல், இசை,நாடகம் என அனைத்து கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்து வருகின்றனர்.இசை விழா, நாடக விழா வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
இவற்ரை தவிர்த்து, ரிகார்டிங்,பிரிண்டிங், ஸமுத்ரா என்ற பத்திரிகை, வெப் டெலிகாஸ்டிங் என அனைத்துத் துரையிலும் பாஸ்கர் மாஸ்டராகத் திகழ்கிறார் எனலாம்
பாரத் கலாச்சார்
-----------------------------
திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி வழிகாட்டலின் படி, ஒய்.ஜி.மகேந்திரன், திருமதி சுதா மகேந்திரன் பாரத்கலாச்சார் என்ற சாபா மூலம் கலை நிகழ்ச்சிகளை அளித்து வருகின்றனர்.இதில், ஒய்.ஜி.மதுவந்தியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி
----------------------------------------------------------------
சென்னையில் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டையில் திரு சிவகுமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி என்ற சாபவை ஆரம்பித்தனர்.நிகழ்ச்சிகளை நடத்த கூடவே "காமாக்ஷி கலை அரங்கம்" என்ற அரங்கு/ கல்யாண மண்டபத்தையும் நிறுவினர்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இயல், இசை, நாடக சேவையை அங்கத்தினர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றனர்.
பாபு, வெங்கட்ராமன் இருவரும் இன்றைய முக்கிய நிர்வாகிகள் ஆவர்
சென்னை கல்சுரல் அகடெமி
-----------------------------------------------------
லயன் நடராஜன் வழிகாட்டலில், இச்சபா பல ஆண்டுகளாக நாடகங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம்
--------------------------------------------------
தொழிலதிபரும் ஆன்மீகவாதியுமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஆதரவுடன் பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம் 45 ஆண்டுகலூக்கு முன் தன் கலைச்சேவையைத் துவக்கியது.இன்றுவரை அநேக குழுக்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி வருகிறது .ஆரம்பநாள் ,முதல் இன்றுவரை தமிழ்ச் சங்கத்திற்கு தனது அயராத உழைப்பைத் த்ந்து கொண்டிருப்பவர் இராம.வெள்ளையப்பன் ஆவார்.இவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது
திருச்சி ரசிக ரஞ்சனி சபா
---------------------------------------------
1914ல் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி ரசிக ரஞ்சனி சபா, இன்றும் நாடகக் கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து நாடக நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது.இதன் நிறுவனர் நடேச ஐயர் ஆவார்.இன்று சேகர் கௌரவச் செயலாளராய் இர்டுந்து சபையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்த சபாக்களைத் தவிர்த்து, மதுரை தமிழ்ச் சங்கம், காலாசாகரம் ஹைதராபாத், வாசி ஃபைன் ஆர்ட்ஸ் மும்பை, ஷண்முகானந்த சபா மும்பை, கல்கத்தா ஃபைன் ஆர்ட்ஸ், தில்லி தமிழ்ச் சங்கம், நாரதகான சபா கரூர் போன்றவையும் அவ்வப்போது நாடக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்