Tuesday, March 29, 2016

22 - கிரேசி மோகன்

                       

நடிகர், நாடக எழுத்தாளர், திரைக்கதை வசனம் எழுதுபவர், நாடகத்தயாரிப்பாளர்...இப்படி பன்முகம் கொண்ட திரு ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.சுந்தரம் கிளேட்டனில் சில காலம் வேலைசெய்து வந்தார்.அத்தருணத்தில் கேபி அவரைத் திறமையைக் கண்டு திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக ஒப்புக் கொள்ள இயலவில்லை.

மோகன் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே...1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக Great Bank Robbery என்ற நாடகம் எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதை அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்றுக் கொண்டார்.

பின்னர் தனது தம்பிக்காக ..பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரி விழாவிற்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவிற்காக, "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.நாடகத்தின் வெற்றியே பின்னாளில் கிரேசி என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது.ஆம்..இனி அவர் கிரேஸி மோகன்.பின்னர் அவர் சேகரின் நாடகப்பிரியாவிற்காக "டெனண்ட்ஸ் கம்மேண்ட்மெண்ட்ஸ்"  எழுதினார்.
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் எழுதினார்.பின்னர் டிவி வரதராஜன்-சீனா குழுவிற்கு, 36 பீரங்கி லேன் நாடகமும், காத்தாடி ராமமூர்த்திக்கு அப்பா அம்மா அம்மம்மா போன்ற நாடகங்களை எழுதினார்.

1979ல் தான் ஒரு சொந்தக்குழுவை ஆரம்பித்து...இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றினார்.இவரது நாடகங்கள் ஆயிரக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.இவரது நாடகங்களில் சாக்லேட் கிருஷ்ணா என்ற நாடகம் மட்டும் இதுவரை 900 முறைகள் நடந்துள்ளது.இவர் நாடகங்களில் இவரது தம்பி பாலாஜி, தொடர்ந்து மாது என்ற கதாநாயகன் பெயரிலேயே நடித்து வருவதால் மாது பாலாஜி ஆனார்.ரமேஷ் என்னும் நடிகர் அப்பா வேடத்திலேயே நடித்து வருவதால் அப்பா ரமேஷ் ஆனார், சுந்தரராஜன் என்பவர் பாட்டி வேடத்திலேயே நடிப்பதால் பாட்டி சுந்தர்ராஜன் ஆனார்.ஒருவர் நடிக்கும் பாத்திரம் அவர் பெயருடன் சேரும் பெருமையை இவரது நாடகத்தில் நடித்தவர்கள் பெற்றது...கிரேசியின் பாத்திர படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இவரது வெற்றி நாடகங்களில் சில..

அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மாது மிரண்டால், மீசை ஆனாலும் மனைவி, கிரேசி கிஷ்கிந்தா, ஒரு பேபியின் டயரிக் குறிப்பு, ஜுராசிக் பேபி. இவரது சமீபத்திய நாடகம் "கூகுள் கடோத்கஜன்:

நாடகங்கள் நடத்திவந்த போதே, கிளேட்டன் வேலையை விட, மீண்டும் பாலசந்தர் அழைக்க இம்முறை இவரது மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தை இயக்குநர் சிகரம் திரைப்படமாக எடுத்தார்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து கிரேசி 'சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள்,ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வேடங்களில் நடிக்கவும் செய்தார்.

இதனிடையே 7 தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதினார்.

இவரது நாடகங்களை தொடர்ந்து மௌலி அவர்களின் சகோதரர் எஸ்.பி.காந்தன் இயக்கி வருகிறார்.இவரையும் கிரேசி "ஜெர்ரி" என்னும் திரைப்படத்தில் இயக்குநர ஆக்கினார்

இவரது நாடகங்கள் மூலம், மக்களை கவலைகள் மறந்து சிரிக்க வைப்பது கிரேசின் மாபெரும் சாதனை எனலாம்.
இவர் நாடக உலகில் பெற்ற வெற்றியைப் போல வேறு கலைஞர்கள் பெற்றிருப்பார்களா? என்பதற்கான பதில்...கன்டிப்பாக இல்லை என்பதாகவே இருக்கும்.

Sunday, March 27, 2016

21 - எஸ்.வி.சேகரும்...நாடகங்களும்

                 


எஸ்.வி.சேகரும்...நாடகங்களும்

இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவை நாடகங்கள் என்றாலே...எஸ்.வி.சேகரும்,கிரேசி மோகனும் தான்.

எஸ்.வி.சேகரின் நாடகங்களில், நகைச்சுவையும்...அந்தந்த நாளுக்கு ஏற்ப அரசியல் நையாண்டியும் இருக்கும்.இவரது குறிக்கோளே..நாடகம் நடக்கும் 100 மணித்துளிகளில் 200 சிரிப்புகள்.

இதனிடையே, பல சமூக சேவைகள், மக்கள் நலப் பணிகள் என சேகர் செய்து கொண்டிருந்தார்.யாருக்கும் பயப்படாது மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிடுவதுதான்..இவரின் பிளஸ் மற்றும் மைனஸ் பாயிண்டுகள். முதல் காரணமாகவே  அதிமுகவில் மைலாப்பூர் தொகுதியில் சட்டசபைக்கு வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இரண்டாவது காரணத்தாலேயே அதிமுக விலிருந்து வெளியேறினார்.

மெக்கானிக்கல் இஞ்சினீரிங் பட்டயப் படிப்பும், ஏர்கண்டிஷன் மற்றும் ரெஃப்ரிஜெரேஷன் பட்டய படிப்பும் முடித்த சேகர் பிரபல இசை மேதையான ஜி.ராமனாதனின் பேத்தி உமாவை மணந்தார்.

​1960 ல் இவரது நாடகப்பணி ஆரம்பமானது. 70 களில் தன தந்தை திரு எஸ் வி வெங்கடராமன் அவர்களின் கற்பகம் கலா மந்திர் நாடகக்குழுவில் மேடை நிர்வாகியாகவும்,ஸ்பெஷல் ஒலி அமைப்பாளராகவும் பணியாற்றினார். திரு வி.கோபாலகிருஷ்ணன் இவருக்கு பொட்டு வைத்து நடிகராக்கினார். 1973இல் தன் சொந்த நாடக்குழு 'நாடகப்ப்ரியா'' என்று ஆரம்பித்தார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் கிரேசி மோகன் ,கோபு பாபு, கிருஷ்ணகுமார் ,நிலா ஆகியோர்.

இவரது நாடகங்கள் பல வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு...காலை 7-47 முதல் இரவு 1-49 வரை இவரது நாடகங்கள் தொடர்ந்து சென்னையில் நடந்து, லிம்கா புக் ஆஃப் ரிகார்ட்ஸில் சாதனையாகியுள்ளது

மைலாப்பூர் அகடெமி. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இவரை சிறந்த நகைச்சுவை நடிகராகத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழக அரசின் "கலைவாணர் விருதும்" கலைமாமணி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.தவிர்த்து, சென்னை சபாக்கள் பல இவருக்கு பலபட்டங்கள் அளித்து கௌரவித்துள்ளன.

​(2003) + ​2015ல் மத்திய அரசு சினிமா தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இவரை நியமித்துள்ளது.இவரது திறமையைப் பார்த்து கே.பாலசந்தர் , "வறுமையின் நிறம் சிவப்பு", "நினைத்தாலே இனிக்கும்" ஆகிய படங்களில் நடிக்க ​இவரை அறிமுகப்புடுத்தினார்..

சேகர் இதுவரை கிட்டத்தட்ட​95 படங்கள் நடித்துள்ளார். இவரது நாடகப்பிரியா நடத்தியுள்ள நாடகங்களில் சில...

கண்ணாமூச்சி, காதுல பூ, ஒன் மோர் எக்சார்சிட், காட்டுல மழை, 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, யாமிருக்க பயமேன், தத்துப்பிள்ளை. மகாபாரதத்தில் மங்காத்தா" வால் பையன், 'யாமிருக்க பயமேன், ​'​​​சிஎம்​'​ ஆ ​'​பிஎம்​'​ ஆ"
​இது வரை 24 நாடகங்களும் 6200 காட்சிகளும் நடத்தியுள்ளார்.​

இவருக்கான நாடகங்களை இவரைத் தவிர்த்து,  கே.கே.ராமன்​ சாரதி, வெங்கட், , ஆகியோர் எழுதியுள்ளனர்.

தொலைக்காட்சிக்கான இவரது நாடகங்கள் வண்ணக்கோலங்கள் பாகம் 1 ,பாகம்-2, நம் குடும்பம்​,டாக்சி டாக்சி ​ ஆகியவை.

சபாக்களின் வசூல் சக்கரவர்த்தியானவர் ​எஸ்.வி.​சேகர் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.



Saturday, March 26, 2016

20 - மௌலி அண்ட் ஃப்ரண்ட்ஸ்

                               

பிரபல புகழ் பெற்ற ஹரிகதா உபாசகர் திரு டி.எஸ்,பாலகிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.

மகன்களில் மூத்தவரான சந்திரமௌலிக்கு, சிறு வயது முதலே கலை ஆர்வம் மேலிட...பள்ளியில் ஆண்டு விழா நாடகங்களில் நடித்து வந்தார்.அப்படி அவர் சிறு வயதில் நடித்த நாடகம், தமிழாசிரியர் திரு ஸ்ரீனிவாசன் பிள்ளை என்பவர் சொல்லித்தர..அரு.ராமநாதனின், "இராஜ ராஜ சோழன்' நாடகமும் ஒன்றாகும்.

பின்னர் நண்பர்கள் (என்னையும் சேர்த்து) , நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த போது அம்பத்தூரில் பாராட்டு விழா நடத்தினோம். சிவாஜிகணேசன் முன்னிலையில் அன்று சந்திரமௌலி எழுதிய "காதலுக்குக் கண்ணில்லை" என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தினோம்.சிவாஜிகணேசன் அவர்கள் நாடகத்தை மிகவும் ரசித்தார்.

அடுத்து சி.வி.ஸ்ரீதர் , டிகேஏஸ் நாடகக் குழுவிற்கு எழுதிய ரத்தபாசம்  நாடகத்தை அனுமதி பெற்று அம்பத்தூரில் நடத்தினோம்.அடுத்து மௌலியாய் மாறிய சந்திரமௌலி  எழுத "bon voyage" என்ற நகைச்சுவை நாடகத்தை வாணிமகாலில் நடத்தினோம்.அன்று அந்நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் திரு ஏ.எல்.ஸ்ரீனிவாசன் அவர்கள்.மௌலியின் எழுத்தையும், நடிப்பையும் பாராட்டிய அவர், பின்னாளில் இவர் திரைப்படத்தில் பிரகாசிப்பார் என்றார்.அது உண்மையாகியது.

மௌலி, பி.டெக்., படிக்கும் போதே கல்லூரியிலும் பல நாடகங்கள் போட்டார்.பின்னர் ஒய் ஜி பி குழுவினருக்காக ஃபிளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" பத்மவியூகம் ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்ததுடன் முக்கிய வேடம் எற்று நடித்தார்.நவரசா குழுவிற்காக நாகேஷ் நடிக்க "அந்தப்புரம்" நாடகம் எழுதினார்.

பின்னர் அக்குழுவிலிருந்து விலகி மௌலி அண்ட் ஃபிரண்ட்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து,"ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது" , "அம்மி மிதிக்க போலீஸ் வந்தது" ஆகிய நாடகங்களையும் அரங்கேற்றினார்.இவர் நாடகத்தில் நடித்தவர்களில் மணிமாலாவும் ஒருவர்.

பின்னர் வெள்ளித்திரை இவரை கைநீட்டி அழைக்க கை நிறைய காசு என்ற படம் வந்தது.பின்ன சிவாஜி நடித்த "ஹிட்லர் உமானாத" படத்திற்கு வசனம் எழுதினார். பின் தெலுங்கில் கிட்டத்தட்ட 32 படங்களை இயக்கினார்.

தமிழில் இவர்கள் வித்தியாசமானவர்கள்,அண்ணே அண்ணே,புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என படங்கள் தொடர்ந்தது.

கமலின் "பம்மல் கே.சம்பந்தம்" மற்றும் 'நள தமயந்தி" ஆகிய படங்களுக்கான திரைக்கதை, வசனம் இயக்கம் இவருடையதே

தொலைக்காட்சித் தொடரான, நாதஸ்வரம், குலதெய்வம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

இவரது சகோதரர் திரு எஸ்.பி.காந்தன்..ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.கிரேசி மோகனின் நாடகங்களை இயக்கி வருகிறார்

Thursday, March 24, 2016

19- விசுவின் நாடகங்கள்

                         

எம் ஆர்,விஸ்வநாதன், எம்.ஆர்.ராஜாமணி, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,ஆகிய மூன்று சகோதரர்கள், பி.சந்திர மௌலி, கணேஷ், நான் ஆகிய அனைவரும் நண்பர்கள்.அம்பத்தூர்வாசிகள்.

 அனைவரும் ஒன்று சேர்ந்து, யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அகடெமி என்ற சபையை ஆரம்பித்தோம்..சிவாஜிகணேசன் பத்மஸ்ரீ விருது பெற்ற போது அவருக்கு பாராட்டுவிழா நடத்தினோம்.அதில், மௌலி முதன் முதலாக எழுதிய
காதலுக்கு கண்ணில்லை நாடகம் நடத்தினோம்.

பின், ரத்தபாசம் நாடகத்தை அனுமதி பெற்று வாங்கி  நடத்தினோம்

முதல் மூவர் தான் பின் திரைப்படத்திலும் பிரகாசித்த விசு, ராஜாமணி, கிஷ்மூ ஆவர்.

சந்திரமௌலி, மௌலி ஆகி நாடகம், திரைப்படம் என வெற்றிக் கொடி நாட்டினார்.

கணேஷ், பிரியதரிஷினி என்ற நாடகக் குழு ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டினார்.

நான், வங்கி ஒன்றில் வேலை செய்து வந்ததால்...முழு வீச்சுடன் இயங்க முடியவில்லை.ஆனாலும், பின்னர் ஒரு சபாவும், ஒரு நாடகக் குழுவையும் ஆரம்பித்தேன்..வெள்ளித் திரைக்கு ஆசைப்படவில்லை.

இனி, விசு அவர்களின் நாடகப்பணியைப் பார்ப்போம்...

இயக்குநர் கே.பாலசந்தரிடம் பயின்ற அனைவரும் சோடைபோகாதவர்கள்.விசு மட்டும் விதி விலக்கா என்ன..

விஸ்வசாந்தி என்ற பெயரில் நாடகக் குழு ஆரம்பித்து பலவெற்றி நாடகங்களை நடத்தினார். "உறவுக்குக் கை கொடுப்போம்", "ஈஸ்வர அல்லா தேரே நாம்", "பாரத மாதாவுக்கு ஜே", 'குடும்பம் ஒரு கதம்பம்"அவர்களுக்கு வயது வந்துவிட்டது", "அவள் சுமங்கலிதான்""மோடி மஸ்தான்" ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.

பிறநாடகக் குழுக்களுக்கும் விசு சில நாடகங்களை எழுதினார்.அவற்றில் காத்தாடி ராமமூர்த்திக்கு எழுதிய "பட்டிணப்பிரவேசம்" டௌரிகல்யாணம் 'நாடகங்களும்,ஏ,ஆர்.எஸ் நடித்துக்கொண்டிருந்த வாணி கலா மந்திருக்கு  எழுதிய:தேவியர் இருவரும்..குறிப்பிட வேண்டியவை,

இவரது நாடகங்களைப் பார்த்த கேபி இவரை தன் யூனிட்டில் வசனகர்த்தாவாக சேர்த்தார்.பின், இவர் தன் திறமையால், நடிப்பால், வசனத்தா;' ஆபாசமற்ற நகைச்சுவை வசங்களால் மக்களைக் கவர்ந்தார்.

இவரது சகோதரர்கள் ராஜாமணியும், கிஷ்மூ வும்..இவர் நாடகங்களில் நடித்தனர்.ராஜாமணி தனிக்குழு ஆரம்பித்து, குரிய கோஸ் ரங்கா எழுதிய "கீழ்வானம் சிவக்கும்" நாடகத்தை நடத்தினார்.பின்னர் அது சிவாஜி நடிக்க திரைப்படமானது.

விசுவின் நாடகங்கள் அனைத்தும் படமாயின.மோடிமஸ்தான் நாடகமே "மணல்கயிறாக" திரைப்படமாகியது.உறவுக்குக் கை கொடுப்போம், சம்சாரம் ஒரு மின்சாரம் என்ற பெயரில் படமாகி தேசிய விருது பெற்று சாதனை படத்தது.குடும்பம் ஒரு கதம்பம் நாடகம் திரைப்படமாகி விசு சிறந்த நடிகர் என்பதை உறுதிச் செய்தது.

பின்னர்...நாடகம் போடுவதை நிறுத்தினார்..பட வாய்ப்புகளும் சற்று குறைய , சன் டீவியில் அரட்டை அரங்கம் என்ற விவாத நிகழ்ச்சியைத் துவக்கி பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தினார்.

நாடகப் பற்று குறையாத இவர் சமீபத்தில் "கொஞ்சம் யோசிங்க பாஸ்" என்ற நாடகத்தை அரங்கேற்றினார்

 நண்பர் கணேஷ், பிரசன்னாவுடன் சேர்ந்து பிரியதர்ஷினி என்றொரு குழுவை ஆரம்பித்து, வெங்கட் எழுதிய "தாம்பத்யம் ஒரு சங்கீதம்", வேதம் புதிது கண்ணன் எழுதிய சுப முகூர்த்தப் பத்திரிகை, ரமணி எழுதிய, "நவீன சுயம்வரம்" ஆகிய நாடகங்களை நடத்தினார்

Wednesday, March 23, 2016

18 - "கோமல்" சுவாமினாதன்

                           
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தனது வாழ்நாளைத் தொடங்கியவர்.1935ல் பிறந்தவர்.

பின்னர், "கோமல் சுவாமிநாதன்" என அறியப்பட்ட இவரை புதுமைப்பித்தனின் எழுத்துகள் கவர்ந்தன.எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில் சேர்ந்த இவர் அவர்களுக்காக எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை"

பின்னர், 1971ல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்றுக் கொண்டவர் கோமல்.
1979களில் நான் எனது சௌம்யா நாடக்குழுவை ஆரம்பித்தேன்.அது முதல் அவரிடம் எனக்குப் பழக்கம் உண்டு.நாடகம் நடைபெறும் நாட்களில் சைக்கிள் ரிக்க்ஷாவில் வருவார்.இதுபற்றி ஒருமுறை நான் கேட்ட போது "சைக்கிள் ரிக்க்ஷா தொழிலாளி வாழ்க்கையை ஓட்ட உழைத்து சம்பாதிக்கிறான்.அவன் சம்பாதியத்திற்கு ,அவனது தன்மான உணர்வுக்கு என்னால் ஆன உதவி இது" என்றார்.எப்படிப்பட்ட சிந்தனை!

தவிர்த்து, ஐசிஎஃப் அரங்கில் அவரது "செக்கு மாடுகள்" நாடகம் நடந்த போது  இரு வெளிநாட்டவர் வந்திருந்தனர்.அவர்களுக்கு புரியாத இடத்தில் ஆங்கிலத்தில் விளக்கும் வேலையை அன்று நாடகம் பார்க்க வந்த எனக்குக் கொடுத்ததை என் வாழ்நாளில் கிடைத்த பேறாகவே கருதுகிறேன்.

இவர் எழுதிய 33 நாடகங்களில் சில...

"சன்னதி தெரு","பெருமாளே சாட்சி", "யுத்த காண்டம்".கோடு இல்லாத கோலங்கள்",ஆட்சி மாற்றம்", செக்கு மாடுகள்", "ஒரு இந்திய கனவு"

1980ல் இவர் எழுதிய, "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும் 250 முறைகளுக்கு மேல் நடந்துள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்"  பின்னாளில், கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்."வாத்தியார் ராமன்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.கோமலின் நாடகக் குழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள்"ராஜ் மதன், ஏ.கே.வீராச்சாமி, சாமிக்கண்ணு ஆகியோர்.

தண்ணீர் இல்லா ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் இது.  அரசியல் தலைவர்களாலும், அரசு அதிகாரிகளாலும் கிராமத்து மக்கள் படும் துயரம்...தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை நயம்பட இந்நாகத்தில் சொல்லியுள்ளார்.

1981ல் இந்நாடகத்தை கே.பாலசந்தர், திரைப்படமாக எடுத்தார்.இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது

பின் 1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்திய கனவு" நாடகமும் திரைப்படமானது.இப்படத்தை கோமலே இயக்கினார்.

முன்னதாக இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கோமல், "கற்பகம்", கைகொடுத்த தெய்வம் "பேசும் தெய்வம்"ஆகிய படங்களில் கதை வசனத்தில் பெரும் பங்காற்றினார்.
தண்ணீர் தண்ணீர் " நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கிலப் பேராசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டு. பி.சி.ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் நாடகமாக நடத்தப்பட்டது.

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்துள்ளார் கோமல்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த, "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று.

தவிர்த்து, "என் விடு என் கணவன் என் குழந்தை;' நாடகம் தொலைக்காட்சியில் மனோரமாவில் நடிக்கப்பட்டு புகழ் பெற்றதாகும்.

சுபமங்களா என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் கோமல் சிறிது காலம் பணியாற்றினார்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் இவர்.

1995ல் கோமல் நம்மைவிட்டுப் பிரிந்தார். 

Tuesday, March 22, 2016

17 - கேபி யின் ராகினி ரெக்ரியேஷன்ஸ்

                           



கே.பாலசந்தர் 1953ஆம் ஆண்டிலிருந்தே  நாடகங்கள் எழுதி நடித்து இருக்கிறார்.இவர் ஏ ஜி ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நேரத்திலேயே அங்கு இருந்த அலுவலர்   சங்கத்திற்காக இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்...ஆங்கில நாடகங்களை எழுதி நடித்து..இயக்கி இருக்கிறார்.

புஷ்பலதா....என்றொரு நாடகம்.இந்நாடகத்தில் புஷ்பலதா என்றொரு கதாபாத்திரம்.அது பற்றி அனைவரும் பேசுவர்.ஆனால் அந்த பாத்திரம் மேடைக்கே வராது,அந்தப் பாத்திரத்தின் வெற்றியே பாலசந்தரை தன் மகளுக்கு புஷ்பா என்ற பெயரை வைக்க வைத்தது என்றால்....அவரின் நாடகப் பற்றை என்னவென்று சொல்வது?

பின், மேஜர்  சந்திரகாந்த் என்ற நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதினார்.அந்த நேரத்தில், தமிழ் நாடகங்களுக்கு இருந்த ஆதரவைப் பார்த்து..அந்த நாடகத்தை தமிழில் எழுதி..தன் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழு சார்பில் அரங்கேற்றினார்.

கேபியின் நண்பரும், தோலைபேசி நிலையத்தில் அதிகாரியாய் வேலை பார்த்தவருமான  சுந்தரராஜன் என்ற நண்பரை..அந்நாடகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ  அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்தார்.இந்நாடகத்திற்குப் பிறகு, அந்த நண்பர் அனைவராலும் மேஜர் சந்திரகாந்த் என்றே அழைக்கப்பட்டார்.ஒன் செட்   நாடகமான இதில் செட் டிசைன் பண்ணும் வேலையை ரங்கநாதன் என்ற ரங்கண்ணா அமைத்தார்.பின் பல நாடகங்களில் இவர் கைத்திறன் போற்றப்பட்டது.இந்நாடகத்தில் பெண் கதாபாத்திரமே கிடையாது.நாடகம் சூபர் ஹிட்

பின்னர் தொடர்ந்து சர்வர் சுந்தரம்,மெழுகுவர்த்தி,நீர்க்குமிழி,நாணல்,எதிர் நீச்சல் என வெற்றி நாடகங்கள் அரங்கேறிய வண்ணம்  இருந்தது.இவரது நாடகங்கள் அனைத்தும் திரைப்படமானது.

இவரது நாடகங்களில் மேஜர் சுந்தரராஜனைத் தவிர, நாகேஷ்,ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, மனோரமா, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் நடித்தனர்.

இவரது நாடகங்களைக் காண வந்த ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காது திரும்பினர்.தவிர்த்து...இவரது நாடகங்களுக்கு பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்பது..இங்கு பதிவு செய்யப் பட வேண்டியது அவசியம்.

வி.எஸ்.ராகவன் அவர்களுக்கும் பாலசந்தர் நாடகங்களை எழுதிக் கொடுத்துள்ளார்.

பாலசந்தரின் அனைத்து நாடகங்களுமே மனித உறவுகளிடையே ஆன சிக்கல்கள், பிரச்னைகள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்தன எனலாம்.

நாடகம், நாடகக் கலைஞர்கள் என்றால் பாலசந்தருக்குக் கடைசிவரை பிரியம் இருந்தது.

மௌலி. விசு ஆகியவர்களின் நாடகங்களைப் படமாக்கியதுடன்...அவர்களை திரைப்பட இயக்குநர்களாகவும் ஆக்கினார்.

தனது 80ஆவது வயதிலும் இவர் எழுதி மேடையேற்றிய நாடகங்கள் பௌர்ணமி, ஒரு கூடை பாசம்.

ஷ்ரத்தா நாடகக் குழுவிற்காக எழுதிக் கொடுத்த நாடகம் இடியுடன் கூடிய மழை

தமிழ் நாடக உலகம் மறக்கமுடியா கலைஞன் கே.பாலசந்தர். 

Monday, March 21, 2016

16 - திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸும்...கலாநிலையமும்

                                   

திருவல்லிக்கேணி இளைஞர்கள் சிலர் சேர்ந்து 1946ல் Triplicane Fine Arts என்ற குழுவைத் தொடங்கினர்.இக்குழுவை ஆரம்பிக்க முக்கியமாய் இருந்த இரு இளைஞர்கள் கே.எஸ்.நாகராஜனும், என்.எஸ்.நடராஜனும் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து பல நாடகங்கள் நடத்தினர்.பல நடிகர்கள் இவர்கள் மூலம் நாடகக் குழுக்களுக்குக் கிடைத்தனர்.

கே எஸ் நாகராஜன் முன்னதாக பம்மல் சம்பந்த முதலியாரின், "வேதாள உலகம்" மனோகரா" ஆகிய நாடகங்களில் நடித்தவர்.அரசுப்பணியிலும் இருந்தார்.பின்னர் கலாநிலையம் என்ற நாடகக்குழுவையும் ஆரம்பித்தவர்.

 தேவன், சாண்டில்யன்,சாவி,வித்வான் லட்சுமணன்,மெரினா, கல்கி தாசன்,அனுராதா ரமணன், சுஜாதா ஆகியோர்கள் எழுதிய நாடகங்கள் அரங்கேறின.வாஷிங்டனில் திருமணம், தனிக்குடித்தனம்,ஊர் வம்பு,கால்கட்டு, வட பழனியில் வால்மீகி ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

வீரராகவன், (மேஜர்)சுந்தரராஜன்,பூர்ணம் விஸ்வநாதன்,ஜெமினி மகாலிங்கம், மணக்கால் மணி, கூத்தபிரான்,கரூர் ரங்கராஜன்,சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோர் இவர்களால் உருவாகியவர்கள் எனலாம்.

இந்நிலையில் இக்குழுவிலிருந்து பிரிந்து மெரினா, பூர்ணம் விஸ்வநாதன், கோவை பத்மநாபன், கூத்தபிரான் ஆகியோர் தனித்தனி குழுவாகினர்.ஆனாலும் மெரினாவின் நாடகங்களையும், வாஷிங்டனில் திருமணத்தையும் அனைவரும் நடத்தினர்.

கிட்டத்தட்ட 70 நாடகங்களுக்கு மேல் கலாநிலையம் அரங்கேற்றியுள்ளது.இவர்களது "குறிஞ்சி மலர்" நாடகத்தில் 113 கலைஞர்கள் நடித்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.கல்கிதாசனின் அம்பிகையின் கல்யாணம் மாபெரும் வெற்றி நாடகம்.

1996க்குப் பிறகு கே.எஸ்.நாகராஜனின் மகன் கே.எஸ்.சுந்தர் கலாநிலையம் பொறுப்பை ஏற்றார்.

சுந்தர், 1958ஆம் ஆண்டே, அவருக்கு பத்து வயதாய் இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர்.தேவனின் துப்பறியும் சாம்புவில் என்.எஸ்.நடராஜன் சாம்புவாய் நடிக்க சுந்தர் சாம்புவின் மகன் சுந்துவாய் நடித்தவர்.

சுந்தர் "கலாநிலையத்திற்காக எழுதியுள்ள சில நாடகங்கள், "காதல் கல்யண வைபோகமே" வி ஆர் எஸ்ஸோ வி ஆர் எஸ்., ஆயிரம் காலத்துப் பயிர்< யார் பையன், அனுபவ ஆராதனை.

தவிர்த்து இவர் சில நாடகக் குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்துள்ளார்.

கலாநிலையத்திலிருந்து வந்த கூத்தபிரான் (நடராஜன். என்ற பெயருள்ள இவர்அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தவர்) நவபாரத் தியேட்டர்ஸ் என்ற பெயரில் குழு தொடங்கி பல நாடகங்கள் நடத்தினார்.ஜெயசங்கர் இவரது நாடகங்களில் நடித்துள்ளார். இப்போது இக்குழுவை இவரது மகன் என்.ரத்தினம் நடத்தி வருகிறார். இவர் எழுதிய "ரோபோவின் டயரி" ஓடி விளையாடு தாத்தா, சொப்பனக்குழந்தை. காளீஸ்வரபவன் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

பூர்ணம் விஸ்வநாதன் தனியே வந்து பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தினார்.பல வெற்றி நாடகங்களைத் தந்த இவரது நாடகங்கள் சில சுஜாதா எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார்.

பூர்ணம் குறித்து இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய மற்றொரு செய்தி....தில்லியில் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராய் இருந்த இவர்தான் நாம் நாடு சுதந்திரம் அடைந்த செய்தியை வாசித்தவர்.

மெரினா, மெரினா தியேட்டர்ஸ் என்ற பெயரில் தனது நாடகங்களை நடத்தி வந்தார்

நாகராஜனுடன்..திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த என்,எஸ்.நடராஜன்...அவர்கள் நடத்திய தேவனின் நாடகங்களில் நடித்து வந்தார்.துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக அவர் நடிக்க பின்னர் சாம்பு நடராஜன் என்றே அழைக்கப்பட்டார்.இவர் பின்னர் என்.எஸ்.என்., தியேட்டர்ஸ் என் ஆரம்பித்து நாடகங்களை நடத்தினார்.இவர் நாடகங்களில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.பின், வீரராகவன் தன் உறவினர் (மேஜர்) சுந்தரராஜனை அறிமுகப்படுத்த அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.டைகர் வரதாச்சாரி  நாடகம் குறிப்பிடத்தக்க நாடகம் ஆகும். நடராஜனுக்கு வயதான காரணத்தால் அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார். குழுவிற்கும் பத்மம் ஸ்டேஜ் எனப் பெயரிட்டார்.இவர்கள் குழுவில், சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களால் மேடையேற்றப்பட்ட சில நாடகங்கள்...அப்பாவி, சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி. தீர்ப்பு ஆகியவை ஆகும்.

வியட்நாம் விடு சுந்தரம் இவர்களுக்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.பின்னாளில் நாடகத்தில் சுந்தரராஜன் ஏற்ற பாத்திரத்தை சிவாஜி ஏற்க...வீரராகவன் நடித்த இன்ஸ்பெக்டர் பாத்தைரத்தை திரைப்படத்தில் சுந்தரராஜன் ஏற்றார்.

திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸும்...கலாநிலையமும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் என்றால் அது மிகையல்ல

திரு கே.எஸ்.நாகராஜன் அவர்களின் நூறு வயது பூர்த்தியானதை சென்னையில் பிரம்மாண்டமாய் சமீபத்தில் கொண்டாடினர்.எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு..