Wednesday, March 23, 2016

18 - "கோமல்" சுவாமினாதன்

                           
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தனது வாழ்நாளைத் தொடங்கியவர்.1935ல் பிறந்தவர்.

பின்னர், "கோமல் சுவாமிநாதன்" என அறியப்பட்ட இவரை புதுமைப்பித்தனின் எழுத்துகள் கவர்ந்தன.எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில் சேர்ந்த இவர் அவர்களுக்காக எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை"

பின்னர், 1971ல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்றுக் கொண்டவர் கோமல்.
1979களில் நான் எனது சௌம்யா நாடக்குழுவை ஆரம்பித்தேன்.அது முதல் அவரிடம் எனக்குப் பழக்கம் உண்டு.நாடகம் நடைபெறும் நாட்களில் சைக்கிள் ரிக்க்ஷாவில் வருவார்.இதுபற்றி ஒருமுறை நான் கேட்ட போது "சைக்கிள் ரிக்க்ஷா தொழிலாளி வாழ்க்கையை ஓட்ட உழைத்து சம்பாதிக்கிறான்.அவன் சம்பாதியத்திற்கு ,அவனது தன்மான உணர்வுக்கு என்னால் ஆன உதவி இது" என்றார்.எப்படிப்பட்ட சிந்தனை!

தவிர்த்து, ஐசிஎஃப் அரங்கில் அவரது "செக்கு மாடுகள்" நாடகம் நடந்த போது  இரு வெளிநாட்டவர் வந்திருந்தனர்.அவர்களுக்கு புரியாத இடத்தில் ஆங்கிலத்தில் விளக்கும் வேலையை அன்று நாடகம் பார்க்க வந்த எனக்குக் கொடுத்ததை என் வாழ்நாளில் கிடைத்த பேறாகவே கருதுகிறேன்.

இவர் எழுதிய 33 நாடகங்களில் சில...

"சன்னதி தெரு","பெருமாளே சாட்சி", "யுத்த காண்டம்".கோடு இல்லாத கோலங்கள்",ஆட்சி மாற்றம்", செக்கு மாடுகள்", "ஒரு இந்திய கனவு"

1980ல் இவர் எழுதிய, "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும் 250 முறைகளுக்கு மேல் நடந்துள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்"  பின்னாளில், கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்."வாத்தியார் ராமன்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.கோமலின் நாடகக் குழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள்"ராஜ் மதன், ஏ.கே.வீராச்சாமி, சாமிக்கண்ணு ஆகியோர்.

தண்ணீர் இல்லா ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் இது.  அரசியல் தலைவர்களாலும், அரசு அதிகாரிகளாலும் கிராமத்து மக்கள் படும் துயரம்...தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை நயம்பட இந்நாகத்தில் சொல்லியுள்ளார்.

1981ல் இந்நாடகத்தை கே.பாலசந்தர், திரைப்படமாக எடுத்தார்.இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது

பின் 1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்திய கனவு" நாடகமும் திரைப்படமானது.இப்படத்தை கோமலே இயக்கினார்.

முன்னதாக இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கோமல், "கற்பகம்", கைகொடுத்த தெய்வம் "பேசும் தெய்வம்"ஆகிய படங்களில் கதை வசனத்தில் பெரும் பங்காற்றினார்.
தண்ணீர் தண்ணீர் " நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கிலப் பேராசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டு. பி.சி.ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் நாடகமாக நடத்தப்பட்டது.

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்துள்ளார் கோமல்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த, "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று.

தவிர்த்து, "என் விடு என் கணவன் என் குழந்தை;' நாடகம் தொலைக்காட்சியில் மனோரமாவில் நடிக்கப்பட்டு புகழ் பெற்றதாகும்.

சுபமங்களா என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் கோமல் சிறிது காலம் பணியாற்றினார்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் இவர்.

1995ல் கோமல் நம்மைவிட்டுப் பிரிந்தார். 

No comments:

Post a Comment