Thursday, March 10, 2016

5) தமிழ் நாடக முன்னோடிகள்



1)சி.கன்னையா

                     

தமிழ் நாடகத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களுள் திரு சி.கன்னையா குறிப்பிடத்தக்கவர்"

இவர் ஸ்ரீகிருஷ்ண விநோத சபா என்ற பெயரில் நாடகக் குழுவினை அமைத்திருந்தார்."சம்பூர்ண ராமாயணம்"."அரிச்சந்திரா". "தசாவதாரம்',"கிருஷ்ணலீலா"."ஆண்டாள் திருக்கல்யாணம்", "துருவன்","சக்கு பாய்". "பக்த குசேலா","சாகுந்தலா","பகவத் கீதை", முதலான நாடகங்களை நடத்தினார்.

இவர், மேடை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் பல சீர்த்திருத்தங்களையும், சிறப்புகளையும் செய்தார்.

அந்நாட்களில், பின்திரைப் பற்றியும், அரங்கப் பொருட்கள் குறித்தும் கவலைப் படாமல் இருந்தனர்."திரௌபதி வஸ்திரா பஹரணம்'நாடகத்தில்,மன்னன் துரியோதனனும், சகுனியும் உரையாடும் காட்சியில், பின்னணித் திரையாக சென்னை போஸ்ட் ஆஃபீசும், மின்சார..டிராம் வண்டிகள் அடங்கிய திரைச்சீலை தொங்க விடப்பட்டிருந்தது.
சுப்பிரமணியன், அரிச்சந்திரன், விதூஷகன் முதலான பாத்திரங்களுக்கு உடைகள் பொருத்தமாக இல்லை.இவற்றையெல்லாம் கன்னையா மாற்றியமைத்தார்.

இவரது நாடகக் காட்சிகளில், குதிரை,யானை,தேர், காளை என அனைத்தையும் கொண்டு வந்தார்.அரச சபையில் இரண்டு தூதர்கள் நின்றுக் கொண்டிருக்க...அவர்களுக்குப் பின்னால் ஐம்பதிற்கும் மேலானோர் நிற்பது போல வெட்டுரு ("கட் அவுட்" )களை வைத்துக் காட்டினார்.

"அரிச்சந்திரா:" நாடகத்தில், மயானக் காட்சியில் பிணம் போல உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார்.

இவரது குழுவில் நாற்பதற்கும் மேற்பட்ட அரங்கக் கலைஞர்களும், பத்து லாரிகளுக்கும் மேற்பட்ட அரங்கப் பொருட்களும் இருந்தன.காட்சிச் சிறப்பைப் பார்ப்பதற்கே இவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதும்.டிக்கட் கிடைக்காமல் திரும்பிச் செல்வர் மக்கள். அதைத் தவிர்க்க முன்பதிவு முறையையும் அறிமுகப் படுத்தினார்.

இவரது "தசாவதாரம்" நாடகம் 1008 நாட்கள் நடைபெற்றது.சென்னையில் நடந்த நாடகத்திற்கு , 700 கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்த திருநெல்வேலியில் விளம்பரம் செய்யப்பட்டது.மக்கள் அவ்வளவு தொலைவிலிருந்தும் நாடகம் பார்க்க வந்தனர் என இதன் மூலம் தெரிகிறது.

இவரைப் பார்த்து, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி", "பால மீன ரஞ்சனி சங்கீத சபை", "ஸ்ரீபால ஷண்முகானந்த சபா", முதலிய நாடக சபைகளும் காட்சியமைப்பில் தங்களது கவனத்தைச் செலுத்தின எனலாம்.

காட்சிகளை பொறுத்தவரை தமிழ் நாடக மேடைக்கு திரு சி.கன்னையா அவர்கள் முன்னோடியாய் திகழ்ந்தார் எனலாம்.

2)நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
                                   
மதுரை பாலமீனரஞ்சனி சபா என்றும், மதுரை தேவி பால விநோத சங்கீத சபா என்றும் பால நாடக சபைகளை நடத்தியவர் ராஜ மாணிக்கம் பிள்ளை ஆவார்.

"பக்த ராமதாஸ்" நாடகத்தில் நவாப் ஆக நடித்ததால் நவாப் ராஜமாணிக்கம் அன அழைக்கப்பட்டார்.இவரும் நாடகக் காட்சி அமைப்புகளில் சாதனை புரிந்தவர் எனலாம்.

"கிருஷ்ண லீலா", "தசாவதாரம்"."இராமாயணம்"."ஐயப்பன்","ஏசுநாதர்", "பக்த ராமதாஸ்","குமார விஜயம்","சக்தி லீலா", என புராண நாடகங்களை நடத்தியவர்.

மேடையில் இவர் உருவாக்கிக் காட்டிய தந்திரக் காட்சிகள் பல ரசிகர்களைக் கவர்ந்தன.

"குமார விஜயம்" என்ற நாடகத்தில் முருகன் பிறப்பைக் காட்டுகையில்  ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார்.

"கிருஷ்ண லீலா" நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துக் கொண்டு வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதையும் காட்டினார்

யமுனை நதி பிளந்து  வழி விடுவதையும், நதிநீர் அலம்புவதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது.

தசாவதாரம் நாடகத்தில் சிறைக் காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும்,கதவு தானாக திறந்து கொள்வதும் காட்டப்பட்டது

இந்தத் தந்திர முறைகளே பின்னாட்களில், ஆர்.எஸ்,மனோகரும், ஹெரான் ராமசாமியும் தங்கள் நாடகங்களில் பின்பற்றினர் எனலாம்.

தந்திரக் காட்சிகளின் சிறப்புக்காகவே இவரது நாடகங்கள் ஆயிரம் முறைகளுக்கு மேல் நடத்தப் பட்டன.

இவரது ஐயப்பன் நாடகம் நடத்திய போது ஐயப்ப ஊர்வலம் நடத்தப் பட்டது.ஐயப்ப பக்தியும் பரவத் தொடங்கியது எனலாம்.

இவரது ராமாயணம் நடந்த காலகட்டத்தில், அது நடந்த இடத்தில் இருந்த பஸ் நிறுத்த இடம் ராமாயணம் ஸ்டாப் என்றே சொல்லப்பட்டது

திரு எஸ் எஸ் வாசன் அவர்கள் தனது ஔவையார் திரைப்படத்தின் வெளியீட்டை  ராமாயணம் நாடகக் கூட்டத்தைப் பார்த்து தள்ளி வைத்தார் என்றும் சொல்வர்.

3) எம்.கந்தசாமி முதலியார்

தொழில்முறைநாடகக் குழுக்களுக்கு ஆசிரியராகக் கிடைத்த மற்றொரு மேதை திரு எம்.கந்தசாமி முதலியார் ஆவார்கள்.இவர் எம்.கே.ராதா அவர்களின் தந்தை ஆவார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு ஆசிரியராக வந்த இவர், திரு ஜே.ஆர்.ரங்காராஜு அவர்களின் புகழ் பெற்ற நாவல்களான "இராஜாம்பாள்", "இராஜேந்திரா","சந்திரகாந்தா",ஆனந்தகிருஷ்ணன்","மோகனசுந்தரம்", ஆகிய நாவல்களை நாடகமாக்கினார்.

1925ஆம் ஆண்டு இறுதியில் திரு.எம்.கந்தசாமி முதலியார் தன் மகன் எம்.கே.ராதாவுடன் டி.கே.எஸ்., சகோதரர்கள் நடத்தி வந்த நாடகக்குழுவிற்கு ஆசிரியராக வந்தார்.

புகழ்பெற்ற நாவலாசிரியராய் திகழ்ந்து கொண்டிருந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய, "மேனகா" என்னும் நாவலை அவர்களுக்காக நாடகமாக்கித் தந்தார்.

நடிப்புக் கலையைப் பயிற்றுவிப்பதில் கந்தசாமி முதலியார் நிபுணராய்த் திகழ்ந்தார்.மாதக் கணக்கில் ஒத்திகைப் பார்த்த பின்னரே நாடகங்கள் அரங்கேறின.

பம்மல் சம்பந்த முதலியார் நடத்தி வந்த "சுகுண விலாச சபையில்" இவர் முதன் முதலாய் பெண் வேடத்தில் இவர் நடித்தார் எனலாம்.பின்னர் பாலாமணி அம்மையார் நாடக சபையில் ஆசிரியரான இவர் "மனோகரா" நாடகத்தைத் தயாரித்தார்

பின் இதே நாடகத்தை திரு பி.எஸ்.வேலு நாயர் நாடக சபையினருக்கு பயிற்றுவித்தார்.

பொதுவாக பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள், மற்றும் ஏனைய சமுதாய நாவல் நாடகங்களையும் தொழில் முறை நாடக சபைகளிடம் பரப்பியவர் இவர்.1939ல் இயற்கை எய்தினார்.
இவரை நாடக மறுமலர்ச்சித் தந்தை எனக் கூறுவர்

4) பாலாமணி அம்மாள்

                         

பெண்களைக் கொண்டே நாடகக் குழுவை நடத்தியவர் பாலாமணி அம்மையார். ஆவார்.தனது நாடகக் குழுவிற்கு"பாலாமணி அம்மாள் நாடகக் குழு" என்றே பெயரிட்டார்.
கும்பகோணத்தில் நடைபெறும் இவர் நாடகத்திற்கு மாயவரத்திலிருந்து சிறப்பு ரயிலே விடப்பட்டது.இந்த ரயிலுக்கு, "பாலாமணி ஸ்பெஷல்" என்று பெயர்.

இவரைத் தவிர்த்து, பி.பி.ஜானகி அம்மாள், பி.இரத்தினாம்பாள்,வேதவல்லித் தாயார்,விஜயலக்ஷ்மி கண்ணாமணி,பி.இராஜத்தம்மாள் முதலான பெண்மணிகளும் நாடகத் துறையில் சாதனைப் படைத்த பெண்கள் ஆவர்.

No comments:

Post a Comment