Monday, March 14, 2016

7 - கதரின் வெற்றி


1922ல் சென்னையில் சதாவதானம் திரு தெ.பொ.கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள் பால மனோகர சபாவை நடத்தி வந்தார்.டி.கே.எஸ்., சகோதரர்களும், இவரது நாடகங்கள் சிலவற்றில் பங்கேற்றனர்.

"ராஜா பர்த்ஹரி" என்ற சரித்திர கற்பனை நாடகத்தையும்,, "கதரின் வெற்றி" என்ற சமூக நாடகத்தையும் இவரே எழுதி தயாரித்து நடித்தார்.இவர் ஒரு தேசியவாதி.

"கதரின் வெற்றி" என்ற நாடகம்தான் முதன் முதலாக நடைபெற்ற தேசிய சமுதாய நாடகம்.இந்நாடகம் பல எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது.

நாக்பூர் கொடிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, "தேசியக் கொடி" என்ற நாடகத்தையும் அரங்கேற்றினார்.

கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள், பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயின்றவர்.இவர் தமிழ் நாடகக் குழுவை அழைத்துக் கொண்டு லண்டன் சென்று நாடகங்களை நடத்தி வெற்றி கண்டவர்..மகத்தான நெஞ்சுறுதியும்,புலமையும் கொண்டவர்

இவரது பால மனோகர சபை சில ஆண்டுகளே நீடித்தது.பின்னர் மதுரை பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராக அமர்ந்து, "பதிபக்தி', பம்பாய் மெயில்', :கதர் பக்தி", "கவர்னர்ஸ் கப்" ஆகிய நாடகங்களை நடத்தினார்.டிகேஸ் சகோதரர்களை தவிர்த்து இவர் குழுவில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.எம்.சிதம்பரநாதன் ஆவார்.

சுதந்திரப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்கள்
----------------------------------------------------------------------------------

விடுதலை முழக்கம்
--------------------------------

நாட்டில் விடுதலை முழக்கம் ஏற்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே நாடகங்கள் தெருக்கூத்துப் பாணியில் அமைந்திருந்தது.இந்த நாடகக் கூத்துகள் மக்களிடம் விடுதலை வேட்கையைத் தூண்டியது.

பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் அமைந்த பாடல்கள் தெருவெங்கும் முழங்கின

"வாராண்டா வாராண்டா வெள்ளைக்காரன்
வரட்டும் பார்க்கிறேன் தொப்பிக்காரன்
போராண்ட மன்னர் பிறந்த மண்ணில் - அவன்
பொட்டை அதிகாரம் பண்ண வாரான்
வெள்ளைக்காரன் போட்ட வெள்ளிப்பணம் - இங்கே
வேடிக்கைக் காட்டுதாம் நொள்ளைப்பணம் - அந்த்
வெள்ளைப் பணத்துக்கு ஆசைப்பட்டு - நீ
வேஷங் குலையாதே ஆண்டியப்பா"

வெள்ளைககரனின் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு காலம் அடைமையாய்க் கிடப்பது.கிளர்ந்து எழுவீர் என்னும் விடுதலை வேட்கையை இப்பாடல் உணர்த்துகிறது

வீரக்கனல் தெறிக்கும் பாடல்களைப் பாடி மக்களை உணர்ச்சி பிழம்புகளாக மாற்றினர்.மற்றொரு பாடல் இதோ...

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்
யாரோ ஒழைச்சி பாடுபட்டான் - இவன்
யாரு வந்து வரி கேக்கறது - இங்கே
நேரா வரட்டும் பாத்துக்கிறேன்
சங்கை நெறிச்சு உசிரே மாய்ச்சுடுறேன்

இப்படி பல பாடல்களை நாடக மேடைகளில் பாடி, மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டினர் நாடகக் கலைஞர்கள்.

பாஸ்கரதாஸ் என்பவர் நாடகமேடையில் தாமே தோன்றி நடிகர்களுக்குப் பயிற்சி அளித்தார்.அந்த நாளிலேயே ஆங்கில ஆட்சியைக் கடுமையாகத் தாக்கி நாடகமேடையை விடுதலை இயக்கச் சாதனையாக மாற்றினார். காந்திஜியின் சிறப்புகளை அடுக்கடுக்காகக் கூறி மக்களை காந்தியத்தில் ஈர்த்த பெருமை இவருக்கு உண்டு .

No comments:

Post a Comment