Monday, March 21, 2016

16 - திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸும்...கலாநிலையமும்

                                   

திருவல்லிக்கேணி இளைஞர்கள் சிலர் சேர்ந்து 1946ல் Triplicane Fine Arts என்ற குழுவைத் தொடங்கினர்.இக்குழுவை ஆரம்பிக்க முக்கியமாய் இருந்த இரு இளைஞர்கள் கே.எஸ்.நாகராஜனும், என்.எஸ்.நடராஜனும் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து பல நாடகங்கள் நடத்தினர்.பல நடிகர்கள் இவர்கள் மூலம் நாடகக் குழுக்களுக்குக் கிடைத்தனர்.

கே எஸ் நாகராஜன் முன்னதாக பம்மல் சம்பந்த முதலியாரின், "வேதாள உலகம்" மனோகரா" ஆகிய நாடகங்களில் நடித்தவர்.அரசுப்பணியிலும் இருந்தார்.பின்னர் கலாநிலையம் என்ற நாடகக்குழுவையும் ஆரம்பித்தவர்.

 தேவன், சாண்டில்யன்,சாவி,வித்வான் லட்சுமணன்,மெரினா, கல்கி தாசன்,அனுராதா ரமணன், சுஜாதா ஆகியோர்கள் எழுதிய நாடகங்கள் அரங்கேறின.வாஷிங்டனில் திருமணம், தனிக்குடித்தனம்,ஊர் வம்பு,கால்கட்டு, வட பழனியில் வால்மீகி ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

வீரராகவன், (மேஜர்)சுந்தரராஜன்,பூர்ணம் விஸ்வநாதன்,ஜெமினி மகாலிங்கம், மணக்கால் மணி, கூத்தபிரான்,கரூர் ரங்கராஜன்,சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோர் இவர்களால் உருவாகியவர்கள் எனலாம்.

இந்நிலையில் இக்குழுவிலிருந்து பிரிந்து மெரினா, பூர்ணம் விஸ்வநாதன், கோவை பத்மநாபன், கூத்தபிரான் ஆகியோர் தனித்தனி குழுவாகினர்.ஆனாலும் மெரினாவின் நாடகங்களையும், வாஷிங்டனில் திருமணத்தையும் அனைவரும் நடத்தினர்.

கிட்டத்தட்ட 70 நாடகங்களுக்கு மேல் கலாநிலையம் அரங்கேற்றியுள்ளது.இவர்களது "குறிஞ்சி மலர்" நாடகத்தில் 113 கலைஞர்கள் நடித்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.கல்கிதாசனின் அம்பிகையின் கல்யாணம் மாபெரும் வெற்றி நாடகம்.

1996க்குப் பிறகு கே.எஸ்.நாகராஜனின் மகன் கே.எஸ்.சுந்தர் கலாநிலையம் பொறுப்பை ஏற்றார்.

சுந்தர், 1958ஆம் ஆண்டே, அவருக்கு பத்து வயதாய் இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர்.தேவனின் துப்பறியும் சாம்புவில் என்.எஸ்.நடராஜன் சாம்புவாய் நடிக்க சுந்தர் சாம்புவின் மகன் சுந்துவாய் நடித்தவர்.

சுந்தர் "கலாநிலையத்திற்காக எழுதியுள்ள சில நாடகங்கள், "காதல் கல்யண வைபோகமே" வி ஆர் எஸ்ஸோ வி ஆர் எஸ்., ஆயிரம் காலத்துப் பயிர்< யார் பையன், அனுபவ ஆராதனை.

தவிர்த்து இவர் சில நாடகக் குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்துள்ளார்.

கலாநிலையத்திலிருந்து வந்த கூத்தபிரான் (நடராஜன். என்ற பெயருள்ள இவர்அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தவர்) நவபாரத் தியேட்டர்ஸ் என்ற பெயரில் குழு தொடங்கி பல நாடகங்கள் நடத்தினார்.ஜெயசங்கர் இவரது நாடகங்களில் நடித்துள்ளார். இப்போது இக்குழுவை இவரது மகன் என்.ரத்தினம் நடத்தி வருகிறார். இவர் எழுதிய "ரோபோவின் டயரி" ஓடி விளையாடு தாத்தா, சொப்பனக்குழந்தை. காளீஸ்வரபவன் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

பூர்ணம் விஸ்வநாதன் தனியே வந்து பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தினார்.பல வெற்றி நாடகங்களைத் தந்த இவரது நாடகங்கள் சில சுஜாதா எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார்.

பூர்ணம் குறித்து இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய மற்றொரு செய்தி....தில்லியில் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராய் இருந்த இவர்தான் நாம் நாடு சுதந்திரம் அடைந்த செய்தியை வாசித்தவர்.

மெரினா, மெரினா தியேட்டர்ஸ் என்ற பெயரில் தனது நாடகங்களை நடத்தி வந்தார்

நாகராஜனுடன்..திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த என்,எஸ்.நடராஜன்...அவர்கள் நடத்திய தேவனின் நாடகங்களில் நடித்து வந்தார்.துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக அவர் நடிக்க பின்னர் சாம்பு நடராஜன் என்றே அழைக்கப்பட்டார்.இவர் பின்னர் என்.எஸ்.என்., தியேட்டர்ஸ் என் ஆரம்பித்து நாடகங்களை நடத்தினார்.இவர் நாடகங்களில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.பின், வீரராகவன் தன் உறவினர் (மேஜர்) சுந்தரராஜனை அறிமுகப்படுத்த அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.டைகர் வரதாச்சாரி  நாடகம் குறிப்பிடத்தக்க நாடகம் ஆகும். நடராஜனுக்கு வயதான காரணத்தால் அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார். குழுவிற்கும் பத்மம் ஸ்டேஜ் எனப் பெயரிட்டார்.இவர்கள் குழுவில், சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களால் மேடையேற்றப்பட்ட சில நாடகங்கள்...அப்பாவி, சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி. தீர்ப்பு ஆகியவை ஆகும்.

வியட்நாம் விடு சுந்தரம் இவர்களுக்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.பின்னாளில் நாடகத்தில் சுந்தரராஜன் ஏற்ற பாத்திரத்தை சிவாஜி ஏற்க...வீரராகவன் நடித்த இன்ஸ்பெக்டர் பாத்தைரத்தை திரைப்படத்தில் சுந்தரராஜன் ஏற்றார்.

திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸும்...கலாநிலையமும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் என்றால் அது மிகையல்ல

திரு கே.எஸ்.நாகராஜன் அவர்களின் நூறு வயது பூர்த்தியானதை சென்னையில் பிரம்மாண்டமாய் சமீபத்தில் கொண்டாடினர்.எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு.. 

No comments:

Post a Comment