Tuesday, March 29, 2016

22 - கிரேசி மோகன்

                       

நடிகர், நாடக எழுத்தாளர், திரைக்கதை வசனம் எழுதுபவர், நாடகத்தயாரிப்பாளர்...இப்படி பன்முகம் கொண்ட திரு ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.சுந்தரம் கிளேட்டனில் சில காலம் வேலைசெய்து வந்தார்.அத்தருணத்தில் கேபி அவரைத் திறமையைக் கண்டு திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக ஒப்புக் கொள்ள இயலவில்லை.

மோகன் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே...1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக Great Bank Robbery என்ற நாடகம் எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதை அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்றுக் கொண்டார்.

பின்னர் தனது தம்பிக்காக ..பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரி விழாவிற்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவிற்காக, "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.நாடகத்தின் வெற்றியே பின்னாளில் கிரேசி என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது.ஆம்..இனி அவர் கிரேஸி மோகன்.பின்னர் அவர் சேகரின் நாடகப்பிரியாவிற்காக "டெனண்ட்ஸ் கம்மேண்ட்மெண்ட்ஸ்"  எழுதினார்.
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் எழுதினார்.பின்னர் டிவி வரதராஜன்-சீனா குழுவிற்கு, 36 பீரங்கி லேன் நாடகமும், காத்தாடி ராமமூர்த்திக்கு அப்பா அம்மா அம்மம்மா போன்ற நாடகங்களை எழுதினார்.

1979ல் தான் ஒரு சொந்தக்குழுவை ஆரம்பித்து...இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றினார்.இவரது நாடகங்கள் ஆயிரக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.இவரது நாடகங்களில் சாக்லேட் கிருஷ்ணா என்ற நாடகம் மட்டும் இதுவரை 900 முறைகள் நடந்துள்ளது.இவர் நாடகங்களில் இவரது தம்பி பாலாஜி, தொடர்ந்து மாது என்ற கதாநாயகன் பெயரிலேயே நடித்து வருவதால் மாது பாலாஜி ஆனார்.ரமேஷ் என்னும் நடிகர் அப்பா வேடத்திலேயே நடித்து வருவதால் அப்பா ரமேஷ் ஆனார், சுந்தரராஜன் என்பவர் பாட்டி வேடத்திலேயே நடிப்பதால் பாட்டி சுந்தர்ராஜன் ஆனார்.ஒருவர் நடிக்கும் பாத்திரம் அவர் பெயருடன் சேரும் பெருமையை இவரது நாடகத்தில் நடித்தவர்கள் பெற்றது...கிரேசியின் பாத்திர படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இவரது வெற்றி நாடகங்களில் சில..

அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மாது மிரண்டால், மீசை ஆனாலும் மனைவி, கிரேசி கிஷ்கிந்தா, ஒரு பேபியின் டயரிக் குறிப்பு, ஜுராசிக் பேபி. இவரது சமீபத்திய நாடகம் "கூகுள் கடோத்கஜன்:

நாடகங்கள் நடத்திவந்த போதே, கிளேட்டன் வேலையை விட, மீண்டும் பாலசந்தர் அழைக்க இம்முறை இவரது மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தை இயக்குநர் சிகரம் திரைப்படமாக எடுத்தார்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து கிரேசி 'சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள்,ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வேடங்களில் நடிக்கவும் செய்தார்.

இதனிடையே 7 தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதினார்.

இவரது நாடகங்களை தொடர்ந்து மௌலி அவர்களின் சகோதரர் எஸ்.பி.காந்தன் இயக்கி வருகிறார்.இவரையும் கிரேசி "ஜெர்ரி" என்னும் திரைப்படத்தில் இயக்குநர ஆக்கினார்

இவரது நாடகங்கள் மூலம், மக்களை கவலைகள் மறந்து சிரிக்க வைப்பது கிரேசின் மாபெரும் சாதனை எனலாம்.
இவர் நாடக உலகில் பெற்ற வெற்றியைப் போல வேறு கலைஞர்கள் பெற்றிருப்பார்களா? என்பதற்கான பதில்...கன்டிப்பாக இல்லை என்பதாகவே இருக்கும்.

No comments:

Post a Comment