Wednesday, March 9, 2016

4) தமிழ் நாடகத் தந்தை



தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என சங்கரதாஸ் சுவாமிகள் போற்றப் பட்டார் என்றால்....தமிழ் நாடகத் தந்தை என போற்றப் பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரை நடையில் எழுதிய வழக்கறிஞர்,நீதியரசர்,நாடக ஆசிரியர், மேடை நாடக நடிகர்,எழுத்தாளர்,நாடக இயக்குநர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் பம்மல் சம்பந்த உதலியார்.

சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும், மாணிக்க வேலு அம்மையாருக்கும் 1873ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 9ஆம் நாள் சம்பந்தம் பிறந்தார்,விஜயரங்க முதலியார், அரசுப் பணியில் இருந்தாலும், தானே செலவு செய்து பல தமிழ் புத்தகங்களை வெளியிட்டு வந்தார்.அதன் காரணமாக அவரது வீட்டில் தமிழ், ஆங்கிலம் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.சம்பந்தம் எல்லாப் புத்தகங்களையும் ஆர்வத்துடன் படித்தார்.சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 ஆம் ஆண்டு முதல்1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி புரிந்தார்

சிறுவயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், அதன் நினைவாகவே இருந்தார்.1891ல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்களை பார்த்து இவர் தமிழ் நாடகப் பற்று அதிகரித்தது.அவரது நாடகக் குழுவில் படித்தவர்கள் எல்லாம் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்தம் தாமும் அப்படி ஒரு குழுவை ஆரம்பிக்க எண்ணினார்.அதில் உருவானதுதான் "சுகுண விலாச சபா".1891 ஜூலை முதல் நாள் இந்த சபா ஆரம்பிக்கப்பட்டது.

இதில் பலதரப்பட்ட அறிஞர்களையும் சேர்த்து, நாடகங்களில் நடிக்கச் செய்தார்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், சிர் சி.பி.ராமசுவாமி ஐயர்,எஸ்.சத்திய மூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே ராதாவின் தந்தை),சிர் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீநிவாச ஐயங்கார்,வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் ஆவர்.

சம்பந்த முதலியார், 90க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்த்துள்ளார்.

As You like it
macbeth
Cymbeline
Merchant of Venice

ஆகிய நாடகங்களை சுவைகுன்றாமல் முறையே, "அமலாதித்யன்". :"நீ விரும்பியபடியே", "மகபதி","சிம்மளநாதன்","வணிபுர வாணிகன்" என்ற பெயர்களில் மொழி பெயர்த்துள்ளார்.

தவிர்த்து, வடமொழியிலிருந்து காளிதாசரின், "மாளவிகாக்னிமித்திரம்", ஹர்ஷவர்த்தனரின், "இரத்தினாவளி" ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்தார்..

தன் கற்பனையிலிருந்து பல நாடகங்களை எழுதினார்.குறிப்பாக, "மனோகரன்" , "இரண்டு நண்பர்கள்". சபாபதி" ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இன்றும் போற்றப்படும், மனோகரன் நாடகத்திற்கு, சுவாமி சங்கரதாஸ் சுவாமிகளும், உடுமலை முத்துசுவாமி கவிராயரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என நாடகங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,ஐந்து மணி நேரத்தில் நாடகம் முடியும்படி மாற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

எதிர்க்கதை நாடகம் என்ற வகையை உருவாக்கியவர் இவர்.சமுதாயத்தில் பரவலாக வழங்கிவரும் பழைய கதையின் மூலக்கருத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டு நகைச்சுவையாகவே எழுதப்படுவது எதிர்க்கதை நாடகம் எனலாம்.இதற்காக அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என மாற்றி எழுதினார்.

எந்நிலையிலும் பொய் பேசாத ஒருவனைப் பற்றியது அரிச்சந்திரன் கதை. எந்நிலையிலும் பொய்யே பேசும் ஒருவனைப் பற்றிய வேடிக்கைக் கதை சந்திரஹரியாகும்.

பின்னர்...இதையே என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் திரைப்படமாக்கினார். ;

இவரைப் பற்றி மேலும் சில குறிப்புகள்_

22 வயதில் இவர் எழுதிய முதல் நாடகம், "லீலாவதி சுலோசன"
சங்கீத நாடக விருது 1959ல் பெற்றார்
1916ல் நாடகப் பேராசிரியர் விருது பெற்றார்
1963ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றார்.

இவரது நூல்கள் பல நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.அவற்றுள் சில

இந்தியனும் ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
ஒன்பது குட்டி நாடகங்கள்
கள்வர் தலைவன்
சபாபதி
நான் குற்றவாளி
மனோகரா

இன்றும் தமிழ் நாடகங்கள் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்பிற்குரியவனாய்த் திகழ இவர் முதல் காரணமாகும்.ஆகவேதான் "நாடகக் கலைப் பிதாமகர்" எனப் போற்றப்பட்டார்.

1967ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் அமரர ஆனார்.இவரது இழப்பு தமிழ் நாடக மேடைக்கு ஈடுசெய்ய முடியா இழப்பாகும்.

No comments:

Post a Comment