Saturday, March 26, 2016

20 - மௌலி அண்ட் ஃப்ரண்ட்ஸ்

                               

பிரபல புகழ் பெற்ற ஹரிகதா உபாசகர் திரு டி.எஸ்,பாலகிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.

மகன்களில் மூத்தவரான சந்திரமௌலிக்கு, சிறு வயது முதலே கலை ஆர்வம் மேலிட...பள்ளியில் ஆண்டு விழா நாடகங்களில் நடித்து வந்தார்.அப்படி அவர் சிறு வயதில் நடித்த நாடகம், தமிழாசிரியர் திரு ஸ்ரீனிவாசன் பிள்ளை என்பவர் சொல்லித்தர..அரு.ராமநாதனின், "இராஜ ராஜ சோழன்' நாடகமும் ஒன்றாகும்.

பின்னர் நண்பர்கள் (என்னையும் சேர்த்து) , நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த போது அம்பத்தூரில் பாராட்டு விழா நடத்தினோம். சிவாஜிகணேசன் முன்னிலையில் அன்று சந்திரமௌலி எழுதிய "காதலுக்குக் கண்ணில்லை" என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தினோம்.சிவாஜிகணேசன் அவர்கள் நாடகத்தை மிகவும் ரசித்தார்.

அடுத்து சி.வி.ஸ்ரீதர் , டிகேஏஸ் நாடகக் குழுவிற்கு எழுதிய ரத்தபாசம்  நாடகத்தை அனுமதி பெற்று அம்பத்தூரில் நடத்தினோம்.அடுத்து மௌலியாய் மாறிய சந்திரமௌலி  எழுத "bon voyage" என்ற நகைச்சுவை நாடகத்தை வாணிமகாலில் நடத்தினோம்.அன்று அந்நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் திரு ஏ.எல்.ஸ்ரீனிவாசன் அவர்கள்.மௌலியின் எழுத்தையும், நடிப்பையும் பாராட்டிய அவர், பின்னாளில் இவர் திரைப்படத்தில் பிரகாசிப்பார் என்றார்.அது உண்மையாகியது.

மௌலி, பி.டெக்., படிக்கும் போதே கல்லூரியிலும் பல நாடகங்கள் போட்டார்.பின்னர் ஒய் ஜி பி குழுவினருக்காக ஃபிளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" பத்மவியூகம் ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்ததுடன் முக்கிய வேடம் எற்று நடித்தார்.நவரசா குழுவிற்காக நாகேஷ் நடிக்க "அந்தப்புரம்" நாடகம் எழுதினார்.

பின்னர் அக்குழுவிலிருந்து விலகி மௌலி அண்ட் ஃபிரண்ட்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து,"ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது" , "அம்மி மிதிக்க போலீஸ் வந்தது" ஆகிய நாடகங்களையும் அரங்கேற்றினார்.இவர் நாடகத்தில் நடித்தவர்களில் மணிமாலாவும் ஒருவர்.

பின்னர் வெள்ளித்திரை இவரை கைநீட்டி அழைக்க கை நிறைய காசு என்ற படம் வந்தது.பின்ன சிவாஜி நடித்த "ஹிட்லர் உமானாத" படத்திற்கு வசனம் எழுதினார். பின் தெலுங்கில் கிட்டத்தட்ட 32 படங்களை இயக்கினார்.

தமிழில் இவர்கள் வித்தியாசமானவர்கள்,அண்ணே அண்ணே,புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என படங்கள் தொடர்ந்தது.

கமலின் "பம்மல் கே.சம்பந்தம்" மற்றும் 'நள தமயந்தி" ஆகிய படங்களுக்கான திரைக்கதை, வசனம் இயக்கம் இவருடையதே

தொலைக்காட்சித் தொடரான, நாதஸ்வரம், குலதெய்வம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

இவரது சகோதரர் திரு எஸ்.பி.காந்தன்..ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.கிரேசி மோகனின் நாடகங்களை இயக்கி வருகிறார்

No comments:

Post a Comment