Saturday, March 19, 2016

13 - நேஷனல் தியேட்டர்ஸும் ஆர்.எஸ்.மனோகரும்

                                 

பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்ததும் அஞ்சல்துறையில் வேலையில் அமர்ந்தார் லட்சுமி நரசிம்மன்.படிக்கும் போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார்.

திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த ஒட்டலில் , தங்கியிருந்த மற்ற இளைஞர்கள் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்ததைக் கண்டார் , லட்சுமி நரசிம்மன்.1959ஆம் ஆண்டில் சென்னையில் பிரபல வழக்குரைஞராக இருந்தபடியே, அமெச்சூர் நாடகங்களை நடத்தி வந்த வி.சி.கோபாலரத்தினம் என்பவர் குழுவில் பங்கேற்று நடித்தார்.தோட்டக்கார விஸ்வனாதன் என்பவர் நடத்திய முழுவிலும் நடித்தார்.

இந்நிலையில், கே.பி.ரங்கராஜு வழியாக "ராஜாம்பாள்' என்ற படத்திற்கு புதுமுகங்கள் தேடிய போது அப்படத் தயாரிப்பாளர் லட்சுமி நரசிம்மனுக்கு, மனோகர் என்று பெயர் வைத்து திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.300 படங்களுக்கு மேல் மனோகர் நடித்துள்ளார்

முழுநேர நடிப்பை மனோகர் மேற்கொண்டப் பிறகு நேஷனல் தியேட்டர்ஸை மனோகர் துவக்கினார்.மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளை அமைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.இவரது பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்ததுண்டு.

இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில்  இராவணனாக நடித்து புகழ்பெற்ற இவர் பெயருக்குமுன் இலங்கேஸ்வரன் ஒட்டிக் கொண்டது.

இடையே...திரைப்படங்களில் பிரபலமாகி நடித்து வந்தார் மனோகர்.ஆயினும், நாடகத்தின் பால் இவருக்கான ஈர்ப்பு குறையவில்லை.சேலத்தில் கண்காட்சியில் இவரது நாடகத்தைப் பார்த்த, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், இவரது நடிப்பு, தோற்றம், வசன உச்சரிப்பு இவற்றைக் கண்டு தங்கள் தயாரிப்பில் கிட்டத்தட்ட 18 படங்களில் இவரை நடிக்க வைத்தார்.

இவரது நாடகங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி நாடகங்கள்.இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான செட் போட்டு பார்ப்போரை திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதுதான்.

தவிர்த்து, மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரங்களை ஹீரோவாக ஆக்கி நாடகமாக்கினார்.இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம்,சிசுபாலன், காடக முத்தரையன் ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்

இன்றும் என் நினைவில் நிற்கும் இவரது நாடகங்கள், இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சிசுபாலன், இந்திரஜித், சுக்கிராச்சாரியார்,நரகாசுரன், திருநாவுக்கரசர்,ஆகியவை

தமது குழுவின் மூலம் 32 நாடகங்களை 7950 முறைகள் மேடையேற்றி நாடக உலகில் ஒரு இமாலய சாதனை புரிந்துள்ளார்.

எதிரொலி எழுப்பும் "எக்கோலிட்" என்ற கருவியை முதன் முதலாகப் பயன் படுத்தியவர் மனோகர்.நாடகத்தில் சிங்கத்தையும், ஐந்து தலை நாகத்தையும் 3டி அமைப்பில் மேடையேற்றி மக்களை மிரள வைத்தவர்.நாடகத்தன்று நெருப்பாய் இருக்கும் இவர் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.சககலைஞர்கள் மீது அளவில்லா பிரியம் வைத்திருந்தார்.

இவருக்கான நாடகங்களை துறையூர் மூர்த்தி, கே.பி.அறிவானந்தம் போன்றோர் எழுதினர்.

இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம்,துரோணர்,மாலிக்காஃபீர் ஆகிய நாடகங்களை துறையூர் மூர்த்தி எழுதினார்

சூரபத்மன்,சிசுபாலன்,சுக்கிராச்சாரியார், சிவதாண்டவம்,ஒட்டக்கூத்தர் ஆகியவற்றை இரா.பழனிசாமி எழுதினார்

விஸ்வாமித்திரர் நாடகத்தை ஏ எஸ் பிரகாசம் எழுதினார்

பரசுராமர்,நரகாசுரன்,இந்திரஜித்,துர்வாசர்,திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களை அறிவானந்தம் எழுதினார்

இந்திரஜித்தை எழுதிய அறிவானந்தம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்/.....

"எம்.ஆர்.ராதாவின் குழுவில் நான் சேர்ந்து ரத்தக்கண்ணீர், தூக்குமேடை போன்ற நாடகங்களில் நடித்து வந்தேன்.ஒருநாள் மனோகரைப் பார்த்து இந்திரஜித் கதையைக் கூற அதை நாடகமாக எழுதச் சொன்னர்..பிறகு அவருடன் பணி புரிந்து....அவருக்காக

இந்திரஜித், பரசுராமர்,நரகாசுரன்,துர்வாசர், திருனாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய நாடகங்களுக்கு கதை ,வசனம் எழுதினேன் இந்திரஜித் நாடக அரங்கேற்றம் போது, பத்திரிகையாளர்கலிடம், "என்னைப் பற்றி எதுவும் எழுதாவிட்டாலும் பரவாயில்லை.வளர்ந்துவரும் இந்நாடக ஆசிரியர் அறிவானந்தம் பற்ரி எழுதுங்கள்' என்றார் .இது அவரது பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம்."

(இப்போது எழுபதுகளில் இருக்கும் அறிவானந்தம் இன்றும் நாடகங்கள் எழுதி நடித்து வருகிறார்)

மனோகர், 2006 ஜனவரி மாதம் 10ஆம் நாள் நம்மை விட்டு மறைந்தார்.

ஆனாலும், இன்றும் அவர் குழுவில் நடித்தவர்கள் நாடகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment