Saturday, March 19, 2016

12 - சிவாஜி நாடக மன்றம்

                                               
                                             
                                                 சிவாஜி கட்டபொம்மனாக

1928ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் சின்னைய்யா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் கணேசன். பள்ளிக் கூடத்தில் படிக்கையிலேயே நடிப்பதிலும், பாடுவதிலும் கணெசனுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.ஏழுவயதிலேயே நாடகக் கமெபெனியில் சேர்ந்து நடிகரானார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் "மதுரை ஸ்ரீ பால கான சபா" அப்போது நாடகங்களை நடத்தி வந்தது.இந்தக் குழுவில், தான் ஒரு அனாதை என்று கூறி சேர்ந்தார் கணேசன்.இந்த சபையில்தான் காகா ராதாகிருஷ்ணனும் இருந்தார்.புது நடிகர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாத்தியாராக பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார்.அவர், கணேசனுக்கு, நடிப்புப் பயிற்சியை அளித்தார்.பின்னாளில் கணேசன், "சின்ன பொன்னுசாமிதான் என் நாடகக் குரு" என்றுள்ளார்.

கணேசன் நடித்த முதல் நாடகம் "ராமாயணம்". அதில், அவர் போட்ட வேடம் சீதை."யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்று பாட்டுப் பாடி...ஆட்டம் ஆடி நடித்தார்.நாட்கள் ஆக..ஆக.. பலப்பல புது வேடங்களை ஏற்றார்.இப்படி சிறுவனாக இருந்த போதே பல வேடங்களில் நடிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது.பின்னர், எம்.ஆர்.ராதாவும் இக்குழுவில் இணைய "பதிபக்தி" என்ற நாடகத்தில், கணேசன் "சரஸ்வதி" என்ற பெண் வேடத்திலும்...எம்.ஆர்..ராதா வில்லனாகவும் நடித்தனர்.

பன்னிரெண்டு வயதில் நாடகக் குழுவிலிருந்து வீடு வந்தார் கணேசன்.அப்போது ஒருநாள், இவரைத் தேடி எம்.ஆர்.ராதா வந்தார்.பொன்னுசாமி பிள்ளை கம்பெனியிலிருந்து , தான் விலகி விட்டதாகவும், சொந்தமாக நாடகக் கம்பெனி ஆரம்பிக்கப் போவதாகவும், அதில் கணேசன் சேர வேண்டும் என்றும் கூறினார்.

"சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் குழு ஆரம்பிக்கப் பட்டது..அதில் , "லட்சுமிகாந்தன்","விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்கள் நடந்தன.ஈ,வெ.ரா.பெரியாரின் வீட்டருகே நாடகக் கம்பெனி இருந்ததால், கணேசனுக்கு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர்  அறிமுகமாயினர்.

இந்நிலையில் ராதா தன் நாடகக் கம்பெனியை பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு விலகினார்.கணேசனோ, அக்கம்பெனியிலேயே தொடர வேண்டியிருந்தது.
"மனோகரா" நாடகத்தில் மனோகரனாக நடித்தார்.

மீண்டும் சில காலம் இடைவெளி..

பின், "பால கான சபா",  என்ற யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார்..இதில்,கணேசன் நடிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே இதில் கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி ஆகியோரும் நடித்துவர, கணேசனுக்கு பெண் வேடமே கிடைத்து வந்தது.

இவ்வேலையில், என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு வழக்கில் கைதானார்.தன் குழுவை கே.ஆர்.ராமசாமியில் ஒப்படைக்காமல், எஸ்.வி.சஹஸ்ரநாமத்திடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார் கிருஷ்ணன்.அதனால் கம்பெனியில் பிளவு ஏற்பட, கணேசன் கே.ஆர்.ராமசாமியுடன் சென்றார்.

1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக 7ஆவது சுய மரியாதை மாநாடு நடந்தது.அதில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" நாடகம் நடந்தது.இந்நாடகத்தைக் கண்ட பெரியார் சிவாஜியாகவே மாறியதுபோன்ற கணேசனின் நடிப்பைப் பாராட்டி "சிவாஜி" என்ற பட்டத்தையும் அவருக்கு அளிக்க....அந்நாள் வரை வி.சி.கணேசனாகவே அறியப்பட்டவர்...சிவாஜி கணேசன் என்று புகழப்பட்டார்.

சக்தி நாடக சபா ஆதரவில் "சக்தி கிருஷ்ணசாமி' என்பவர் எழுதிய வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம்  சேலம் கண்காட்சியில் அரங்கேற...சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்தார்.இந்நாடகம் 116 முறைகளுக்கு மேல் நடந்தது.பி.ஆர்.பந்தலு இதைத் திரைப்படமாக எடுக்க நினைத்ததால் நாடகம் நிறுத்தப்பட்டு திரைப்படமானது.லண்டனிலும் இந்நாடகம் நடந்தது.

கட்டபொம்மன் நாடகக் காட்சி ஒவ்வொரு நாளும் நடந்து முடிந்த பின்னர் , களைப்பு,சிரமம் ஏற்பட்டாலும் மக்கள் பாராட்டை நேரடியாகப் பெரும் பாக்கியம் கிடைத்தது.இம்மகிழ்ச்சிக்கு ஈடு இணை யில்லை என்றார் சிவாஜி.

உண்மை...ஒரு கலைஞனுக்கு...தன் திறமைக்கு எந்த விருது கிடைத்தாலும் அது தரும் மகிழ்ச்சியைவிட...தன் நடிப்பிற்கு, ஆற்றலுக்கு மக்கள் அளிக்கும் கரவொலி மூலம் கிடைக்கும் ஆதரவுக்கு சமம் வேறு ஒன்றுமில்லை

ஆகவேதான் திரையுலகில் மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை விடவில்லை சிவாஜி.

பின்னர் தனது நாடக நீண்டநாள் நண்பர் எஸ்.ஏ.கண்ணன் இயக்க, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில், "தேன் கூடு", ஜகாங்கீர்" நாடகங்களும், தஞ்சைவாணன் எழுதிய "களம் கண்ட கவிஞன்" கவிதை நாடகமும் நடந்தது.

அம்பத்தூர் டன்லப் கம்பெனியில் சுந்தரம் என்ற இளைஞர் வேலை செய்து வந்தார்.இவர் தன் நண்பர்களுடன் ஒரு நாடகத்தை நடத்தினார்.அந்நாடக் கதையைப் பற்றி அறிந்த சிவாஜி ,அந்த இளைஞரைக் கூப்பிட்டு அந்நாடகத்தை "வியட்நாம் வீடு" என்ற பெயரில் அரங்கேற்றினார்.
மகேந்திரன் என்பவர் நடிகர் செந்தாமரைக்காக 'இரண்டில் ஒன்று" என்று ஒரு நாடகம் எழுத, அதைப் பார்த்த சிவாஜி அந்நாடகத்தை தான் நடந்த விரும்புவதாகக் கூறினார்.அதுவே எஸ்.பி.சௌத்ரி என்ற போலீஸ் அதிகாரியாக   சிவாஜி நடித்த :"தங்கப் பதக்கம்" நாடகம்.

வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 நாடகங்கள் திரைப்படமாக ஆக அதில் சிவாஜி நடித்தார் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை மறக்காத சிவாஜி கணேசன், ஒவ்வொரு நாடக தினத்தன்றும் மிகவும் சிரத்தையாக நடித்தார்.நாடகத்தன்று மாலை ஏழு மணி நாடகத்திற்கு 3 மணிக்கே வந்து சரிபார்த்துக் கொள்வார்.

தனது நடிப்புத் தொழிலுக்கு இவரைப் போல மரியாதைக் கொடுத்தவர்கள் மிகச்சிலரே !

இதேபோன்று மக்கள் திலகம் அவர்களும் பல நாடகங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்த "இன்பக் கனவு" "அட்வகேட் அமரன்" ஆகிய நாடகங்கள் சிறப்பானவையாகும்.
இருமாபெரும் நடிகர்களின் நடிப்பின் மீதான பக்தியை சொல்ல வார்த்தையில்லை எனலாம். 

No comments:

Post a Comment