Sunday, March 20, 2016

15 - ஒய்ஜிபி என்ற ஆலமரம்

                           
   


அரசு அதிகாரியாய் இருந்த ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள், தன் நண்பர் பத்மநாபன் (பட்டு) என்பவருடன் சேர்ந்து 1952ல் ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தார்.அக்குழுவிற்கு, யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்று பெயரிட்டார்.

பெற்றால் தான் பிள்ளையா? இம் பர்ஃபெக்ட் மர்டெர், போன்ற நாடகங்களை நடத்தினார்.பின், வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய கண்ணன் வந்தான் என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.ஒரு பாரிஸ்டரின் கதை.அடடா...ஒய்.ஜி.பி., அந்த பாத்திரமாகவே மாறிவிட்டார்.அவரது ஜூனியர் ஆக திரு ஏ.ஆர்.ஸ்ரீனிவாசன் (ஏஆர் எஸ்) நடித்தார்.
(இந்நாடகமே பிறகு சிவாஜி இரு வேடங்களில் நடிக்க கௌரவம் என்ற திரைப்படமாக வந்தது).நாடகத்தில் கோர்ட் காட்சிகள் , விசாரணை யெல்லாம் மிகவும் தத்ரூபமாக அமைந்தது.அடுத்து, சுந்தரம் எழுதிய "நலந்தானா" என்ற நாடகம்.

மௌலி இவர்கள் குழுவில் நடித்து வந்தவர்.அவர் எழுதிய, ஃபிளைட் 172, பத்ம வியூகம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா , வெங்கட் எழுதிய ரகசியம் பரம ரகசியம்,ஆகிய நாடகங்களும் அரங்கேறின.அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்கள்.ஃபிளைட் 172 இன்றும் பேசப்படும் நாடகமாக உள்ளது.பின்னர்..மௌலி தனியாகக் குழு அமைக்க யுஏஏ வெங்கட் எழுதிய பல நாடகங்களை அரங்கேற்றியது.

யுஏஏ வில் பல பிரபல நடிகர்கள் நடித்து புகழ் பெற்றனர்.

நாகேஷ்,ஏ ஆர் எஸ்., சோ, மௌலி, விசு, ராதாரவி,சந்தியா (ஜெயலலிதாவின் தாயார்)
ருக்மணி (லட்சுமியின் தாயார்), லட்சுமி, ஐஸ்வர்யா (லட்சுமியின் மகள்) ( மூன்று ஜெனெரேஷன்),, வைஷ்ணவி, ஸ்ரீகாந்த் ஆகியோர் இவர்களில் சிலர்.
ஜெயலலிதா முதன் முதல் இவர்கள் நாடகத்தில் தான் நடித்தார்.(பின்புதான் வெள்ளித்திரை)
தவிர்த்து...ஒய்,ஜி.பி., ஒய்.ஜி.எம்., இவர்களுடன் ஒய்ஜிஎம் மனைவி சுதா மஹேந்திராவும் ஒன்றாக நாடகத்தில் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளராக இருந்த காமேஷ்-ராஜாமணி குழுவினருடன் தேவா வும் சேர்ந்து இவரது நாடகங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
இப்படி பலப்பல சாதனைகள்



ஆமாம்...ஒய்ஜி மகேந்திரனை இவர்கள் லிஸ்டில் ஏன் சேர்க்கவில்லை. ஏனென்றால் அவரது சிறு வயதிலிருந்தே நாடக ஆர்வம் மிக்கவராய் இருந்தார்.மீன்குஞ்சு..நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்ன?

ஒய்ஜிபியின் மறைவிற்குப் பின் நாடகக் குழுவின் பொறுப்பை ஒய்ஜிஎம் ஏற்றார்.ஏசி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக்., பட்டம் பெற்றபின் எம்பிஏ வும் முடித்த இவர்...தந்தையின் நாடகக் குழுவில் சிறு வயதிலிருந்தே நடித்து வந்தார்.

நாடகக் குழுவின் பொறுப்பை ஏற்றது முதல் இன்றுவரை திறம்பட நடத்தி வருகிறார்.இவரது சிறந்த நாடகங்கள்..

இது நியாயமா சார்,வெங்கடா3 (இந்நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்தார்),சுதேசி ஐயர்,தந்திரமுகி,காதலிக்க நேரமுண்டு, சொப்பன வாழ்வில்  ..

எல்லா நாடகங்களும் நூற்றுக் கணக்கன முறை நடந்துள்ளன.

நாடகக் கலைஞர்களின் துன்பங்கள், நாடகம் அரங்கேறும் முன் இருக்கும் படபடப்பு என அனைத்தையும் ஒரு கலைப்படத்திற்கான இலக்கணத்துடன் "நாடகம்" என்ற பெயரிலேயே ஒரு நாடகத்தையும் அரங்கேற்றி சாதனைப் படைத்தார்.

இவருக்கான நாடகங்களை வெங்கட், கோபு-பாபு, சித்ராலயா ஸ்ரீராம் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஒய்ஜிபி ,நடித்து பின்னர் சிவாஜி நடிக்க திரைப்படமாக வந்த நாடகம் பரீட்சைக்கு நேரமாச்சு .இதில் ஒய்ஜிபியின் மகனாக வருவார் ஒய்ஜிஎம்.,

சமீபத்தில் இந்நாடகத்தை மீண்டும் மேடையேற்றினார் ஒய்ஜிஎம்.தந்தை ஒய்ஜிபி நடித்த தந்தை பாத்திரத்தை தான் ஏற்றார்.(திரைப்படத்தில் சிவாஜி ஏற்ற பாத்திரம்)

வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி, சிவாஜி நாடகமாக நடித்து, திரைப்படமும் ஆன "வியட்நாம் வீடு" நாடகத்தை
 திரும்ப மேடையேற்றி சிவாஜி பாத்திரத்தில் ஒய்ஜிஎம் நடித்தார்.

சித்ராலயா கோபு எழுதி..யூனிடி கிளப் சார்பில் முத்துராமன் நடித்த காசேதான் கடவுளடா 1970களில் வெற்றிநாடகம்.பின்பு, வெள்ளித்திரையிலும் வெற்றி பெற்றது.அந்நாடகத்தை மீண்டும் ஒய்ஜிஎம் அரங்கேற்றி மீண்டும் அதை வெற்றி நாடகம் ஆக்கினார்

இயக்குநர் சிகரம் கேபி யின் திரைக்காவியம் "சிந்து பைரவி" யின் இரண்டாம் பாகத்தை "சகானா" என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக்கினார் கேபி.அதில் திரைப்படத்தில் சிவகுமார் நடித்த ஜேகேபி பாத்திரத்தை   ஒய்ஜிஎம் ஏற்றார்.

சாதனை மேல் சாதனை....எந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் இந்த பேறு.

ஒய்ஜிஎம் (நாடகத்) தந்தைஒய்ஜிபிக்கும் நடிப்பின் தந்தைசிவாஜிக்கும் காணிக்கையாக பரீட்சைக்கு நேரமாச்சு 100ஆவது நாடகவிழாவைக் கண்டது.

தன் நாடகம், தன் குழு என சுயநலமில்லாமல்"பாரத் கலாச்சார்" என்ற சபாவைத் தொடங்கி அனைத்துக் குழுக்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு அவரது படைப்புகளை மக்கள் காணும் வாய்ப்பைத் தந்து வருகிறார்.

250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், உறவுக்குக் கை கொடுப்போம், கதை கதையாம் காரணமாம்" ஆகிய இரு படங்களை இயக்கியும் உள்ளார்

தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைவாணர் விருது.சிறந்த ஆல் ரவுண்டருக்கான மயிலாப்பூர் அகடெமியின் (மூன்று முறை) விருது ஆகியவை இவர் பெற்ற பல விருதுகளில் சில.

ஒய்ஜிஎம்மின் மகள் மதுவந்தியும் மகம் எண்டெர்பிரைஸஸ் என்ற குழைத் தொடங்கி நாடகங்கள் நடத்தி வருகிறார்,.இவரது 'பெருமாளே" நாடகம் நூறுமுறைகளுக்கு மேல் நடந்துள்ளது.

இவ்வளவு குறிப்பிட்ட நான் இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

இவரது தாயார் திருமதி ராஜலக்ஷ்மி பார்த்தசாரதி (ராஷ்மி) ஒரு கல்வியாளர்.பத்ம சேஷாத்ரி பள்ளிகளின் தாளாளர்.பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

ஆமாம்...ஒய்ஜிபி ஒரு ஆலமரம் என்ற தலைப்பு ஏன்....

ஏனென்றால்...இன்று நாடகமேடையில் பல நாடகக்குழுக்களின் மூலாதாரத்தில் ஏதோ ஒருவகையில் ஒய்ஜிபி இருப்பார்.அந்த அலமரத்தின் விழுதுகளே இவர்கள்

No comments:

Post a Comment