Tuesday, March 8, 2016

3) தமிழ் நாடகத் தலைமையாசிரியர்



19ஆம் நூற்றாண்டு இறுதியில் கும்பகோணம் நடேச தீட்சிதர் என்பவர் துவக்கிய கல்யாணராமய்யர் நாடகக் குழுவினர்தான் நாடகத்துறையில் புதிய பாதை கண்டவர்கள் எனலாம்.

தமிழ் நாடகக் கலைக்கு மகத்தானபணி ஆற்றிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இக்குழுவில்தான் நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில், நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட, தமிழ்நாட்டு நாடகக் குழுக்கள் அனைத்திலும் பெரும்பாலும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களே நடந்தன எனலாம்.

"ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும், நியதியும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும்"..இப்படிக் குரல் கொடுத்தவர் சுவாமிகள்

சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட நுணுக்கம்,காணப்பட்ட அழகு,நாடக பாத்திரங்கள் வாயிலாகப் பாடல்களிலும், உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்து...அதனால் நாடகம் பார்த்தோர் அடைந்த பயன்.இவற்றின் மூலம் சுவாமிகளின் புலமை நன்கு வெளிப்பட்டது.

அவர் சுமார் நாற்பது நாடகங்கள் எழுதியுள்ளார்.அவர் எடுத்துக் கொண்ட கதைகள் பெரும்பாலும் பழங்கதைகளே ஆகும்.

"அபிமன்ய சுந்தரி,பவளக்கொடி,சீமந்தினி,சதி அனுசியா,பிரகலாதா,சிறுத்தொண்டர்,வள்ளித்திருமணம்,சத்தியவான் சாவித்திரி,சுலோசன சதி" இப்படிப்பட்ட கதைகள் ஆகும்.
வடமொழி நாடகமாகிய "மிருச்சகடி" யையும்ஷேக்ஸ்பியரின் "ரோமியோ ஜூலியட்' "சிம்பலைன்" ஆகிய நாடகங்களையும், "மணிமேகலை","பிரபுலிங்க லீலை" ஆகிய நாடகங்களயும்...தமிழில் நாடகமாக்கித் தந்தார் சுவாமிகள்.இவர் எழுதிய நாடகங்கள் ஆயிரக் கணக்கில் நடிக்கப்பட்டவைகளாகின.

இவரது நாடகங்களில், வெண்பா,கலித்துகை,விருத்தம்,சந்தம், சிந்து,வண்ணம், ஓரடி,கும்பி,கலிவெண்பா, தாழிசை,கீர்த்தனை இப்படி பலவகைப்பட்ட பாடல்களும், சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்திருக்கும்.அப்போது உரைநடை அதிகமாக நாடகங்களில் வராத காலமாதலால், பெரும்பகுதி பாடல்களாகவே இருந்தன.

நாடகங்களில் பாட்டா...என இளைய தலைமுறையினர் நினைக்கக்கூடும்.

அந்நாட்களில் குறைந்தது நூறு பாடல்களாவது ஒரு நாடகத்தில் இருக்கும்.இரவல் குரலில் பாடும் வழக்கம் இல்லை.நாடகத்தில் நடிப்பவர்களே பாடியும் நடிக்க வேண்டும்.சிரித்தால், அழுதால், கோபித்தால், சண்டை போட்டால் எல்லமே பாட்டுகள்தான்..உரையாடல்கள் என ஏதேனும் இருந்தால், அவை பாட்டின் பொருளை விளக்குவதாகவே இருக்கும்.

இந்நிலையில் , நடிப்பைத் தொழிலாகக் கொண்ட குழுக்களுக்கு, உரையாடல்களாக எழுதிக் கொடுத்து நடிக்கும் முறையைக் கொணர்ந்தார் சுவாமிகள்.இதனால் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றப்பட்டார்.

ஒரு காலகட்டத்தில் நாடகத்தில் நடித்த பெரிய நடிகர்கள்...யாருக்கும் கட்டுப்படாமல் வசந்ங்ளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேசும் நிலை ஏற்பட சங்கரதாஸ் சுவாமிகள் "சமரச சன்மார்க்க சபை" என்ற ஒரு சபையை 1910 ஆம் ஆண்டு தொடங்கினார்.இதில், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா ஆகியோர் நடிகர்களாக விளங்கினர்.

இதைத் தொடர்ந்து பல நாடகசபைகள் தோன்றின. இவற்றில் எல்லாம் சிறுவர்களே நடிகர்களாகத் திகழ்ந்தனர்

மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபை
மதுரை ஒரிஜினல் பாய்ஸ்
மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா

ஆகியவை குறிப்பிடத்தக்கன..

தமிழ் நாடகக் கலையை வளர்த்த பெருமையில் முக்கிய இடம் பெற்றவர்கள் பலர் பாலர் நாடக சபையினர் எனலாம்.

எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமசந்திரன்,காளி என்.ரத்தினம்,பி.யூ.சின்னப்பா மற்றும் கே.பி.காமாட்சி, கே.பி.கேசவன்,எம்.கே.ராதா,பக்கிரிசாமி பிள்ளை முதலியோர் இவர்களில் சிலர் ஆவர்.

மதுரை பலமீன ரஞ்சனி சபா மூலம், கே.சாரங்கபாணி,நவாப் ராஜமாணிக்கம்,பி.டி.சம்பந்தம், பொன்னுசாமி பிள்ளை, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.வெங்கட்ராமன், சிதம்பரம் ஜெயராமன் ஆகியவர்கள் வந்தனர்

1914ல் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைக்கு சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்களுக்கு உரையாடல்களை முறையாக எழுதினார்.இவரது அனைத்து நாடகங்களும் தருமநெறியை வலியுறுத்தப் பெற்றிருக்கும்.இவரது நாடகப் பாடல்களில் உணர்ச்சி முதன்மை பெற்றிருக்கும்

ஒரேநாள் இரவில் நான்கு மணி நேரம் நாடகம் முழுவதையும், அடித்தல், திருத்தல் இல்லாமல் .பாடல்கள் வசனங்களுடன் எழுதும் தெய்வீக ஆற்றல் பெற்றவர் சுவாமிகள்.

பின்னாளில், என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சுவாமிகள் நினைவு நாள் ஒன்றில்,"சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகின் இமயமலை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 1867ல் பிறந்து , நாடக உலகின் இமயமாகத் திகழ்ந்த சுவாமிகள் 1922ல் அமரர் ஆனார். 

No comments:

Post a Comment