Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Thursday, March 17, 2016

11- அண்ணாவும்...கலைஞரும்

             

தமது பேச்சாற்றல் மூலம் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணாத்துரை,மக்களால் அன்பாக அண்ணா என அழைக்கப்பட்டவர்.இவர் தனது நாடகங்கள் வாயிலாகவும் கொள்கைகளை பரப்பியவர்.

ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார்.

"ஓர் இரவு", "சொர்க்க வாசல்","சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்","நீதிதேவன் மயக்கம்"."நல்ல தம்பி", "வேலைக்காரி","சந்திரோதயம்". ஆகியவை குறிப்பிடத்தக்க நாடகங்களாகும்.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் வி.சி.கணேசன் என்ற இளைஞர் நடித்தார்.ஒருநாள் நாடகத்தைப் பார்க்க வந்த பெரியார், கணேசனின் நடிப்பைப் பார்த்து..சிவாஜி நீதாண்டா என மனமார பாராட்டினார்.அன்று முதல் கணேசன்...மக்களால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்

ஓர் இரவு நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தாராம்.இந்நாடகத்தை கண்டுக் களித்த கல்கி அவர்கள்..

"தமிநாட்டுப் பெர்னாட்ஷா" என்றார் அண்ணாவை.. அண்ணா எழுதிய நாடகங்கள் கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபைக்கு புகழ் சேர்த்தன.

"நாடக மேடையில், இவரது அழகு தமிழ் நடனம் ஆடிற்று, உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பியது. தன்மான உணர்வைத் தூண்டியது.தமிழ் மொழியின் பெருமையைப் பேசியது.மாற்றாரை எள்ளி நகையாடியது.பிற்படுத்த பட்டவரிடையே நமக்கு ஒரு நல்லத் தலைவன் கிடைத்தான். என்ற மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது" என்கிறார் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் தனது நூல் ஒன்றில்.

கலவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரை திராவிட இயக்கத்தில் சேர்த்த பெருமை அண்ணாவின் நாடகங்களுக்கு உண்டு எனலாம்.




"திராவிடக் கழகக் கொள்கைகளை நாட்டு மக்களுக்குப் பரப்புவதில் அண்ணாவிற்கு இணையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த கலைஞரின் "பராசக்தி" மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம்.

கடவுள் பெயரைக் கூறி இழிவான செயல் புரிபவர்களின் பித்தலாட்டங்களை வெளிக் கொணர்ந்தது "பராசக்தி" நாடகம்.பின்னர் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சஹஸ்ரநாமம் நடிக்க படமாக வந்து. மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

பெண்களின் உரிமைக்காக இவரால் எழுதப்பட்ட நாடகம் "நச்சுப் பொய்கை"

கலைஞர் எழுதிய "தூக்கும் மேடை". ஒரே முத்தம்" பழக்கூடை" "வெள்ளிக் கிழமை" ,"காகிதப்பூ", போர்வாள்", ஆகிய அனைத்துமே சீர்திருத்த நாடகங்கள் ஆகும்.காகிதப் பூ நாடகத்தில் கலைஞரும் நடித்தார்.

இணையற்ற நாடக ஆசிரியர், இலக்கியவாதி, பாடலாசிரியர்,கதை வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர்,நாவலாசிரியர்,தொல்காப்பிய பூங்கா சமைத்தவர், குறளோவியம் கண்டவர், என அனைத்துத் துறையிலும் கோலோட்சி நின்றதுடன்...இணையில்லா மக்கள் தலைவராகவும் திகழ்கிறார்.

இந்த அதிசயம் வேறு எந்த எழுத்தாளர்களுக்கோ...தலைவர்களுக்கோ கிடைக்காத பேறு எனலாம்

கே ஆர் ராமசாமி
-------------------------------
                     
அண்ணா, கலைஞர் பற்றி படிக்கும் போதே நாடக உல்கில் நம் ஞாபகத்திற்கு வர வேண்டிய ஒரு நடிகர் கே ஆர் ராமசாமி ஆவார்,


மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் தனது 11 வயதிலேயே நடிக்க வந்தவர்.அந்த நாட்களில் இப்படிப்பட்ட நாடக குழுவில் நடிக்க வரவேண்டுமாயின் ஆறு தகுதிகள் இருக்க வேண்டும்.அப்படி ஆறு தகுதிகளையும் கொண்டவராகத் தகழ்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் இவராவார்.

ஆமாம்..அந்த ஆறு தகுதிகள் என்ன..

வயது,தோற்றப் பொலிவு,குரல் வளம்,பாடும் திறன்,இசை ஆர்வம்,நடிப்புத் திறன் ஆகியவையே ஆகும்

கே ஆர் ராமசாமி, அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தை பின்னாளில் கிருஷ்ணன் நாடகக் குழு என ஒரு குழுவினை ஆரம்பித்து நடத்தினார்.இந்நாடக்ம் ஓராண்டு, தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெற்றது

பின்னர், அண்ணாவின் ஓரிரவு நாடகம்.இந்நாடகப் போஸ்டர்களில் கே ஆர் .ராமசாமி, கதை-வசனம் அறிஞர் அண்ணாத்துரை என போட்டார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவரது, தந்தை காலமான அன்று கூட காலை இறுதிக்கடன் களை முடித்துவிட்டு, மாலை ராமாயணம் நாடக்த்தில் ஹனுமனாக நடித்தவர் இவர்

வி.கே.ராமசாமி-------

                   
----------------------வி கே ராகசாமி போற்றத்தக்க வேண்டிய நாடக நடிகர் ஆவார்.ருத்ர தாண்டவம், பம்பாய் மெயில் போன்ற பல நாடகங்களை நடத்தினார்.இவர் சிறு வயது முதலிலிருந்தே..வயதான பாத்திரங்களில் நடித்து வந்தார் என்பதே சிறப்பாகும் 

10- என்.எஸ்.கே., மற்றும் எம்.ஆர்.ராதா

                     

"மங்கள பால கான சபா" என்ற குழுவை நாடக ஆசிரியர் டி.பி.பொன்னுசாமி பிள்ளை நிறுவினார்."இழந்தகாதல்". விதவையின் கண்ணீர் நாடகங்களை நடத்தினார்.இந்த நாடக சபையில்தான் வி.சி.கணேசன் (பின்னாளில் சிவாஜிகணேசன்) நடித்தார்.

இந்த சபையை எ,எஸ்.கிருஷ்ணன் வாங்கி பெயரை "என்.எஸ்.கே.நாடக சபை" என மாற்றினார்.

ஒரு சமயம் ஒரு வழக்கு சம்பந்தமாய்  என்.எஸ்.கே., கைதானார்.அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமம் அச்சபையை தன் பொறுப்பில் ஏற்று. ப.நீலகண்டன் எழுதிய "நாம் இருவர்" என்ற நாடகத்தையும், தானே எழுதிய "பைத்தியக்காரன்" என்ற சமூக சீர்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.என்.எஸ்.கே., விடுதலையாகி வந்ததும் குழுவை அவரிடம் ஒப்படைத்தார்

                                   

தமிழ் நாடகமேடையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா எனப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆவார்.

இவர் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடித்தார்.வசனம் ஏதும் கிடையாது. பின்னர் பல நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார்.நடிப்பில் பல பாராட்டுகளைப் பெற்ற ராதா, தானே ஒரு நாடக சபையை ஏற்படுத்தினார்."சரஸ்வதி கான சபா" எனப் பெயரிட்டார்.

"இராஜ சேகரன்" "இலட்சுமிகாந்தன்" போன்ற நாடகங்கள் அரங்கேறின.

இவரது நாடகங்களில் பெரிய மேடை,அலங்காரங்கள் கிடையாது.நடிப்பிற்கே முதலிடம்.இவரது சீர்திருத்த நாடகங்கள் அனைவரையும் கவர்ந்தது.ஆனாலும், இன்றலவும் பேசப்படும் நாடகமாக அமைந்தது, மறக்கமுடியாத "ரத்தக் கண்ணீர்". இந்நாடகத்தி ராதாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.இந்நாடகம் மட்டுமே 5000 முறைகளுக்கு மேல் நடந்ததாகத் தெரிகிறது.

இந்நாடகம் அவருக்குப் பிறகும், அவரது மகன்கள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி ஆகியோரால் நடத்தப்பட்டது.

Wednesday, March 16, 2016

9 = எஸ்.வி.சஹஸ்ரநாமம்

                             

டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகக் குழுவையும், அதில் அற்புதமாக நடிக்கும் டி.கே.சண்முகம் நடிப்பையும், அதற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கை தட்டல்களும் கண்டு நாடகங்கள் மீது தீராத மோகம் கொண்டான் அந்தச் சிறுவன்.

பொள்ளாச்சியில் அவனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 வயதே ஆன அச் சிறுவன், அருகில் உள்ள கோவைக்கும் டி.கே.எஸ்., குழுவினர் வந்துள்ள சேதி கேட்டு...அவர்களைக் காண ரயிலேறினான்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம்.நாடகக் குழுவில் ஒருவன் இருக்கிறான் என்றால், அவனுக்கு மூன்று கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உயர்வு..தாழ்வு பாராதௌ எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும்.
ஊருக்கு ஊர் குழுவினர் மாறும்போது, அனைத்து காட்சிப் பொருள்களையும் மூட்டை..மூட்டையாய்க் கட்டிக் கொண்டு ஊருக்கு பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும்
இவ்வளவு செய்தாலும் நிரந்தர வருமானம் என எதுவும் கிடைக்காது என உணர்ந்திருக்க வேண்டும்

பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சேர்ந்த பையனைத் தேடி வந்த அவனது தந்தை, "உனக்கு படிப்பு வேண்டுமா? இல்லை நடிப்பா?" என வினவ..சற்றும் தயக்கம் இல்லாது பையன், "நடிப்புத்தான் வேண்டும்" என்றான்.

பையனின் உறுதியைக் கண்ட தந்தை"சரி..உன் தலையெழுத்து அப்படியெனில் அதன் படியே நடக்கட்டும்" என்று கூறி சென்றார்,

அந்தச் சிறுவனே எஸ்.வி.சஹஸ்ரநாமம் ஆவார்,கோவை சிங்கானல்லூரில் 29-11-1913ஆம் ஆண்டு பிறந்தார்.

நாடக நுணுக்கங்களை அக்குழுவில் இருந்த போது கற்றார்.தனது நாடகப் பயிற்சியின் குருநாதராக அவர் எம்.கந்தசாமி முதலியாரிடம் பயின்று மூன்றே மாதங்களில் "அபிமன்யூ சுந்தரி" என்ற நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

வீரபத்திரன் என்ற நடிகரிடமிருந்து பாடல் கற்றார்.சங்கீத மேதை சம்பந்த மூர்த்தி ஆச்சாரியரிடம் ஹார்மோனியம் கற்றார்.மேடை அமைப்பில் தேர்ச்சிபெற்றவராய் இருந்தார்.

அதனாலேயே..சென்னையில் கட்டப்பட்ட "ராஜா அண்ணாமலை மன்றம்". "ராணி சீதை ஹால்", "கலைவாணர் அரங்கம்" ஆகியவை அவரது ஆலோசனையின் படியேக் கட்டப்பட்டது.

நாடகத்திற்காகவே வாழ்ந்தவர்களில் சஹஸ்ரநாமமும் ஒருவர் ஆவார்.பாரதியாரிடம் ஈடுபாடு கொண்ட இவர்...பாரதியின் வார்த்தைகள் இப்படி மாற்றி தன்னைப் பற்றிக் கூறினார்.

"எனக்குத் தொழில் நாடகம்.நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என.

இவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் நடித்து..பின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் நீண்டது.அதில் சிலர்...

சிவாஜி, முத்துராமன்,குலதெய்வம் ராஜகோபால்,வி.கோபால கிருஷ்ணன்,சத்தியராஜ்,பி.ஆர்.துரை,எஸ்.என்.லட்சுமி,எம்.என்.ராஜம்,பண்டரிபாய்,தேவிகா, மைனாவதி,ஜி.சகுந்தலா,ஏ.கே,வீராச்சாமி,ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், காந்திமதி...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இவரது குழுவின் நாடகங்கள் சில...

என்.வி.ராஜாமணி எழுதிய "கண்கள்", "இருளும் ஒளியும்"
தி ஜானகிராமனின், "நாலு வேலி நிலம்'
பி.எஸ்.இராமய்யாவின், "மல்லியம் மங்களம்"
குஹனின் "புகழ்வழி"
கல்கி எழுதிய , "மோகினித் தீவு"
பாரதியாரின் , "பாஞ்சாலி சபதம்"(கவிதை நாடகம்)
சேவாஜ்ஸ்டேஜ் கடைசியான நாடகம் பி.எஸ்.இராமய்யா எழுதிய "தேரோட்டி மகன்" ஆகும்.

1957ல் சேவா ஸ்டேஜ் , நாடகக் கல்வி நிலையம் என ஒன்றை நிறுவி, பாடத்திட்டங்களை வகுத்து மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வி வழங்கியது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இந்த நிலையத்திற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கியது

தனது சகோதரி மகன் வி.என்.ராஜாமணியின் உதவியோடு தாகூரின் கதையை "கண்கள்" என்ற தலைப்பில் நாடகமாக்கினார்
நார்வேவைச் சேர்ந்த  ,எழ்த்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு "எனிமீஸ் ஆஃப் பீப்புள்ஸ்" என்ற நாடகத்தை மக்கள் விரோதி என்ற பெயரில் நாடகமாக்கச் சொன்னார்

1974 மார்ச் மாதம் முதல் 1988 ஃபெப்ருவரி வரை ஐந்து முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.கிருஷ்ணமணி என்பவர் எழுதிய  "நந்தாவிளக்கு" என்ற நாடகத்திற்கான ஒத்திகைக்கு 21-2-88 அன்று வரச்சொல்லி நடிகர்களுக்கு செய்தி அனுப்பியவரின் உயிர் 19-2-1988 மாலை 4-30 அளவில் பிரிந்தது,

எஸ்.வி.எஸ்., அவர்களுக்கு தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு.

இன்று இவரது மகன் எஸ்.வி.எஸ்.குமார், தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கலைப்பணியாற்றி வருகிறார். 

Monday, March 14, 2016

8 - டி.கே.எஸ்.சகோதரர்கள்

                     

டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதியருக்கு நான்கு மகன்கள். டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி., இந்த நால்வரும் நாடக உலகில், திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நுழைந்த போது பள்ளிச் சிறுவர்கள்.ஆறாவது வகுப்பு, நான்காவது வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று முறையே படித்துக் கொண்டிருந்தனர்.கடைசி மகன் பகவதி கைக்குழந்தை.

ஷண்முகம் இளமையிலேயே ,துடிப்பு, ஆர்வம்,சிந்தனைக் கூர்மை, உடையவராய் விளங்கினார்.சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த "அபிமன்யு சுந்தரி" நாடகத்தில் அபிமன்யுவாக நடித்து புகழ் பெற்றார். தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகிய நாடக ஆசிரியர்களிடம் ஷண்முகம் நடிப்புப் பயின்றார்.

1925 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" என்ற நாடகக் குழுவைத் தொடங்கி 1950 வரை தமிழ் நாட்டிலும், மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர்.

1937ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி திரு டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். 'அன்ன பூர்னிகா மந்திர்" என்ர வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது இந்நாடகம்.

பின்னர் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் முத்துசாமி அவர்களால் நாடக மாக்கப்பட்டு நடந்தது

தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர்.இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது.108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர்.

1942ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 2ஆம் தேதி மதுரையில் , பி.எத்திராஜுலு அவர்கள் எழுதிய ஔவையார் நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் கதாநாயகன் கிடையாது.கதாநாயகி உண்டு...ஆனால் கதாநாயகியும் ஒரு மூதாட்டி.காதல் காட்சிகள் இல்லை.நாடக இலக்கணப்படி தோன்றல், திரிதல் ஆகிய முறைகளை அனுசரித்து எழுதப்படாத புதுமை நாடகம்.இந்நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் நாடக உலகிற்கே மாபெரும் வெற்றி எனலாம்.இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள்.இது அவரது நாடக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு எனலாம்.இதற்கு பின்னர் ஔவையார் என்ற அடைமொழியோடு "ஔவை சண்முகம்' என்று அழைக்கப்பட்டார் அவர்.

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, டி.கே,எஸ். சண்முகத்தின் ஔவையார் நடிப்பைப் பாராட்டி கவி ஒன்று புனைந்தார்

மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஔவையைநாம்
இன்று கண்ட காட்சி இது

ஔவையின் நடிப்பை விமரிசித்த கல்கி அவர்கள்-

"நடிப்புத் திறமையை பொறுத்த வரையில் இந்நாடகத்தில் ஔவைப்பாட்டியாக நடிக்கும் திரு டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.வேஷம்,பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம்.நடிப்பு அபாரம்" என்று கல்கியில்  (3-6-42)விமரிசித்தார்

திரு ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய பில்ஹணன், டி.கே.முத்துசாமி எழுதிய காளமேகப் புலவர்,கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, ப.நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜா, ஆகிய நாடகங்களை அரங்கேற்றினர்.

நாடு சுதந்திரம் அடைந்தபின், முதல் வரலாற்று நாடகமாக ரா.வெங்கடாசலம் எழுதிய இமயத்தில் நாம் நாடகமும், (இது சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது),, தொடர்ந்து திரு நாரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் என்ற தமிழ்ச்சுவையும்.நகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் அரங்கேறின.

"மனுஷ்யன்" எனற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

அடுத்ததாக இவர்கள் அரங்கேற்றிய நாடகம் அகிலன் எழுதிய "புயல்".தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.

திரு ரா.வெங்கடாச்சலம் எழுதிய முதல் முழக்கம் என்ற நாடகத்தை நடத்தி னர் 1950ல் டிகேஎஸ் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை"  நாடகக் குழு தன் நிறைவு விழாவை நடத்தியது.

அதற்கான காரணம் என்ன? பின்னர் என்ன செய்தார்கள் சகோதரர்கள் என  பார்ப்போம்

தொலைக்காட்சி வந்தப் பிறகு நாடகங்கள் அழிந்துவிடும் என ஆங்காங்கே கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது போல....அன்று..பேசும்படம் வந்த காலகட்டத்தில்..நாடக மேடை அழிந்துவிடும் என்றனர்.

இது குறித்து திரு சண்முகம் அவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.அவர் சொன்னார்....

"நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விடவில்லை.திரைப்பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய நுணுக்கங்கள் பலவற்றை கையாண்டு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது" என்றார்

இன்றும் அது பொருந்துகிறது அல்லவா? ஆனால் என்ன ஒன்று...

"அந்த நாட்களில் நாடகக் கொட்டகை எல்லாம்...திரைப்பட கொட்டகைகளாக மாற்றிவிட்டனர்.ஆகவே நாடகம் நடத்துபவர்களுக்கு அரங்குகள் கிடைக்கவில்லை.அப்படியே கிடைத்தாலும் பலமடங்கு வாடகை அதிகமாக கொடுக்க வேண்டியிருந்தது.அது நாடக வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது.டி.கே,சண்முகம் அவர்களின் நாடகசபையும் இந்த காரணத்தினாலேயே மூடுவிழா கண்டது.

பின்னர் 1950ல் நாடகக் கழகம் தோன்றியது.நாடக அரங்குகள் இல்லாத குறையைத் தீர்க்க திறந்தவெளி அரங்குகள் தோன்றின.கலைவிழாக்கள் நடந்தன.ஐயாயிரம் நாற்காலிகள் போடப்பட்டு....முதல் வகுப்பு எட்டணா...இரண்டாம் வகுப்பு நாண்கனா என்று குறைந்த கட்டணத்தில் நாடகங்கள் நடந்தன.பம்மல் முதலியார், டி.கே.எஸ்., ஆகியவர்கள் முயற்சியால் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கிடத்தது.

மீண்டும் டி.கே.எஸ்., குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர்.நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்". ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி". கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் :'எது வாழ்வு', ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர்.தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார்.

இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "இராஜ ராஜ சோழன்" எழுதிய நாடகத்தையும் டி.கே.எஸ்.நடத்தினார்.(பின்னர் இன்றுவரை பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை மேடையேற்றி வருகின்றனர்)தஞ்சையில் நடந்த இந்நாடகம் காண 21000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனராம்.

பின்னர் அகிலன் எழுதிய"வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம்.இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார்.

டி.கே.சண்முகத்தின் நண்பர் பொதுவுடமைக் கட்சி ஜீவானந்தம்.அவருடன் சேர்ந்து பாரதியாரின் பாடல்களை நாட்டுடமையாக்க முயன்று வென்றார்.

இனி டி.கே.சண்முகம் அடைந்த பொறுப்புகளும், விருதுகளும்-

1950ல் நாடகக் கழகம் அமைக்கப்பட்டு...முதல் தலைவர் ஆனார்.நாடகங்களுக்கு கேளிக்கைவரி பெற்று தந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திவந்த "நடிகன் குரல்" பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்

தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளராக நான்காண்டுகள் இருந்தார்.

தவிர்த்து, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், தில்லி சங்கீத நாடக அகடெமி ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்

1941ல் மதுரை தமிழ்ச் சங்கத்தின் "முத்தமிழ்க் கலாவித்துவ ரத்தினம்" , 1944ல் ஈரோட்டில் நாடகக் கலை மகாநாட்டில் "ஔவை" பட்டம்,புதுவை ராமகிருஷ்ணா பாடசாலை வழங்கிய "நாடக வேந்தர்:" பட்டம்,குன்றக்குடி அடிகளாரால், "நாடகக் கோ" பட்டம்,1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகக் கழகம் வழங்கிய,"சிறந்தத் தமிழ் நாடக நடிகர்" பட்டம்,1962ல். புதுதில்லி சங்கீத நாடக அகடெமி வழங்கிய , "சிறந்த நாடக நடிகர்" விருது, 1966ல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில்"தமிழ் நாடக வரலாறு" என்னும் தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையை வழங்கினார்.

திரு அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வர் ஆனபோது சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி அளித்தார்

1971ல் இந்திய அரசின் தேசிய விருதான "பத்மஸ்ரீ" விருது பெற்றார்.

தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடக வாழ்க்கை ஆகிய நூல்களை எழுதினார்.

1973 ஃபெப்ருவரி 15ல் மறைந்தார்.

இவரது நூற்றாண்டை இவரது மகன்கள் டி.கே.எஸ்.கலைவாணன், புகழேந்தி ஆகியோர் 26-4-2012 அன்று சிறப்பாகக் கொண்டாடினர்.இன்று நாடக உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூறு கலைஞர்களுக்கு "நாடகச் செல்வம்" என்று விருது கொடுத்து கௌரவித்தனர்.

அன்று விருது பெறும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது.



7 - கதரின் வெற்றி


1922ல் சென்னையில் சதாவதானம் திரு தெ.பொ.கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள் பால மனோகர சபாவை நடத்தி வந்தார்.டி.கே.எஸ்., சகோதரர்களும், இவரது நாடகங்கள் சிலவற்றில் பங்கேற்றனர்.

"ராஜா பர்த்ஹரி" என்ற சரித்திர கற்பனை நாடகத்தையும்,, "கதரின் வெற்றி" என்ற சமூக நாடகத்தையும் இவரே எழுதி தயாரித்து நடித்தார்.இவர் ஒரு தேசியவாதி.

"கதரின் வெற்றி" என்ற நாடகம்தான் முதன் முதலாக நடைபெற்ற தேசிய சமுதாய நாடகம்.இந்நாடகம் பல எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது.

நாக்பூர் கொடிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, "தேசியக் கொடி" என்ற நாடகத்தையும் அரங்கேற்றினார்.

கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள், பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயின்றவர்.இவர் தமிழ் நாடகக் குழுவை அழைத்துக் கொண்டு லண்டன் சென்று நாடகங்களை நடத்தி வெற்றி கண்டவர்..மகத்தான நெஞ்சுறுதியும்,புலமையும் கொண்டவர்

இவரது பால மனோகர சபை சில ஆண்டுகளே நீடித்தது.பின்னர் மதுரை பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராக அமர்ந்து, "பதிபக்தி', பம்பாய் மெயில்', :கதர் பக்தி", "கவர்னர்ஸ் கப்" ஆகிய நாடகங்களை நடத்தினார்.டிகேஸ் சகோதரர்களை தவிர்த்து இவர் குழுவில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.எம்.சிதம்பரநாதன் ஆவார்.

சுதந்திரப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்கள்
----------------------------------------------------------------------------------

விடுதலை முழக்கம்
--------------------------------

நாட்டில் விடுதலை முழக்கம் ஏற்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே நாடகங்கள் தெருக்கூத்துப் பாணியில் அமைந்திருந்தது.இந்த நாடகக் கூத்துகள் மக்களிடம் விடுதலை வேட்கையைத் தூண்டியது.

பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் அமைந்த பாடல்கள் தெருவெங்கும் முழங்கின

"வாராண்டா வாராண்டா வெள்ளைக்காரன்
வரட்டும் பார்க்கிறேன் தொப்பிக்காரன்
போராண்ட மன்னர் பிறந்த மண்ணில் - அவன்
பொட்டை அதிகாரம் பண்ண வாரான்
வெள்ளைக்காரன் போட்ட வெள்ளிப்பணம் - இங்கே
வேடிக்கைக் காட்டுதாம் நொள்ளைப்பணம் - அந்த்
வெள்ளைப் பணத்துக்கு ஆசைப்பட்டு - நீ
வேஷங் குலையாதே ஆண்டியப்பா"

வெள்ளைககரனின் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு காலம் அடைமையாய்க் கிடப்பது.கிளர்ந்து எழுவீர் என்னும் விடுதலை வேட்கையை இப்பாடல் உணர்த்துகிறது

வீரக்கனல் தெறிக்கும் பாடல்களைப் பாடி மக்களை உணர்ச்சி பிழம்புகளாக மாற்றினர்.மற்றொரு பாடல் இதோ...

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்
யாரோ ஒழைச்சி பாடுபட்டான் - இவன்
யாரு வந்து வரி கேக்கறது - இங்கே
நேரா வரட்டும் பாத்துக்கிறேன்
சங்கை நெறிச்சு உசிரே மாய்ச்சுடுறேன்

இப்படி பல பாடல்களை நாடக மேடைகளில் பாடி, மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டினர் நாடகக் கலைஞர்கள்.

பாஸ்கரதாஸ் என்பவர் நாடகமேடையில் தாமே தோன்றி நடிகர்களுக்குப் பயிற்சி அளித்தார்.அந்த நாளிலேயே ஆங்கில ஆட்சியைக் கடுமையாகத் தாக்கி நாடகமேடையை விடுதலை இயக்கச் சாதனையாக மாற்றினார். காந்திஜியின் சிறப்புகளை அடுக்கடுக்காகக் கூறி மக்களை காந்தியத்தில் ஈர்த்த பெருமை இவருக்கு உண்டு .

Sunday, March 13, 2016

6 - குறுஞ்செய்திகள்



1) புளியமாநகர் திரு சுப்பா ரெட்டியார் என்பவர் பாலர் சபை ஒன்றை நடத்தினார்.அவர்கள், இலங்கை,மலேயா,போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நாடகம் நடத்தினர்.நெடுங்காலம் இயங்கி வந்த இந்தக் குழுவில் நடித்தவர்களில் திரு பி.எஸ்.கோவிந்தன் என்ற நடிகர் குறிப்பிடத்தக்கவர்

2)திருச்சி பால பாரதி சபை "பட்டினத்தார்" நாடகத்தை மேடையேற்றினர்

30எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வனாத பாண்டியன்  சிறுவர் நாடகக் குழு என்ற பெயரில் நாடகங்கள் நடத்தினார்.இவர் நுண்கலைகளில் ஆரவமிக்கவர்.நாடகம் எழுதுவதிலும் திறமைசாலி..இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு'தயாளன்" என்ற பெயரிலொரு நாடகம் நடத்தினார்.

4)நாடகாசிரியர் டி.பி.பொன்னுசாமி பிள்ளை, "ஸ்ரீ மங்கள பால கானசபா" என்ற குழுவைத் தொடங்கினார்.இவர்கள், "இழந்த காதல்". விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய அரிய சமூக நாடகங்களை நடத்தினர்.இந்த நாடக சபையில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.இந்த நாடக சபையை திரு என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கி, என்.எஸ்.கே., நாடக சபை எனப் பெயரை மாற்றி நாடகங்களை நடத்தினார்.இந்த நாடக சபையின் பொறுப்பை ஏற்ற எஸ்.வி.சஹஸ்ரநாமம், ப.நீலகண்டன் எழுதிய "நாம் இருவர்" என்ற நாடகத்தையும்,"பைத்தியக்காரன்" என்ற பெயரில் தானே எழுதிய சமுதாய சீர்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.

5)1944ல் நவாப் ராஜமாணிக்கம் குழுவிலிருந்து விலகிய திரு டி.கே.கிருஷ்ணசாமி, சக்தி நாடக சபையைத் தோற்றுவித்தார்.எஸ்.டி.சுந்தரம் எழுதிய "கவியின் கனவு" என்ற சரித்திர கற்பனை நாடகத்தை அரங்கேற்றினார்.காட்சியமைப்பில் பல புதுமைகளைச் செய்தார்.விதி, தோழன், ஜீவன் ஆகிய நாடகங்களை தங்கள் குழுவிற்காக தயாரித்தார்

6)காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார், "ஸ்ரீராம பால கான சபா"வைத் தோற்றுவித்தார்.திருமழிசையாழ்வார்,பக்த சாருகதாசர்,தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை முதலிய சில புதிய நாடகங்களை அரங்கேற்றினார்.இதன் மூலம் பல புதிய நடிக, நடிகைகளை உருவாக்கினார்

7)திரு கே.என்.ரத்தினம் தேவி நாடக சபையை உருவாக்கி, கலைஞர் கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி" நாடகத்தையும், திரு ஏ,கே.வேலனின் "சூறாவளி" நாடகத்தையும் அரங்கேற்றினார்

8)இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "கீசகன்""பிருதிவி ராஜன்", ஆகிய நாடகங்களை கா.நமசிவாய முதலியார் எழுதினார்

9)காந்திஜி பார்த்த ஒரே தமிழ் நாடகம் நந்தனார்.அதில் கூறியிருந்த தீண்டாமை அவரது மனதைத் தொட்டது

10)நவாப் ராஜமாணிக்கம் தனது இன்பசாகரன் என்ற நாடகத்தில் மேடையில் சர்க்காவில் நூல் நூற்பதைக் காட்டினார்

11)எஸ்.வி.ஸகஸ்ரநாமம் தன் சேவா ஸ்டேஜ் மூலம் ரபீந்திர நாத் தாகூரின் 'விஷன்" என்ற சிறுகதையை கண்கள் என்ற பெயரில் நாடகமாக்கினார்

12)அந்த நாளில் புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படமாவத்ர்கு முன் நாடகங்களாக நடத்தப்பட்டன.தி.ஜானகிராமனின் , நாலு வேலி நிலம், கு.அழகிரிசாமியின் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள், கல்கியின் கள்வனின் காதலி ஆகியவைஅவற்றுள் சில

13) சுதந்திர போராட்ட காலத்தில் நாடகங்கள் பெரும் பங்கு பெற்றன."கதரின் வெற்றி" தேசபக்தி" ஆகிய நாடகங்கள் தேசிய உணர்வைச் சொல்லின.

இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Thursday, March 10, 2016

5) தமிழ் நாடக முன்னோடிகள்



1)சி.கன்னையா

                     

தமிழ் நாடகத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களுள் திரு சி.கன்னையா குறிப்பிடத்தக்கவர்"

இவர் ஸ்ரீகிருஷ்ண விநோத சபா என்ற பெயரில் நாடகக் குழுவினை அமைத்திருந்தார்."சம்பூர்ண ராமாயணம்"."அரிச்சந்திரா". "தசாவதாரம்',"கிருஷ்ணலீலா"."ஆண்டாள் திருக்கல்யாணம்", "துருவன்","சக்கு பாய்". "பக்த குசேலா","சாகுந்தலா","பகவத் கீதை", முதலான நாடகங்களை நடத்தினார்.

இவர், மேடை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் பல சீர்த்திருத்தங்களையும், சிறப்புகளையும் செய்தார்.

அந்நாட்களில், பின்திரைப் பற்றியும், அரங்கப் பொருட்கள் குறித்தும் கவலைப் படாமல் இருந்தனர்."திரௌபதி வஸ்திரா பஹரணம்'நாடகத்தில்,மன்னன் துரியோதனனும், சகுனியும் உரையாடும் காட்சியில், பின்னணித் திரையாக சென்னை போஸ்ட் ஆஃபீசும், மின்சார..டிராம் வண்டிகள் அடங்கிய திரைச்சீலை தொங்க விடப்பட்டிருந்தது.
சுப்பிரமணியன், அரிச்சந்திரன், விதூஷகன் முதலான பாத்திரங்களுக்கு உடைகள் பொருத்தமாக இல்லை.இவற்றையெல்லாம் கன்னையா மாற்றியமைத்தார்.

இவரது நாடகக் காட்சிகளில், குதிரை,யானை,தேர், காளை என அனைத்தையும் கொண்டு வந்தார்.அரச சபையில் இரண்டு தூதர்கள் நின்றுக் கொண்டிருக்க...அவர்களுக்குப் பின்னால் ஐம்பதிற்கும் மேலானோர் நிற்பது போல வெட்டுரு ("கட் அவுட்" )களை வைத்துக் காட்டினார்.

"அரிச்சந்திரா:" நாடகத்தில், மயானக் காட்சியில் பிணம் போல உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார்.

இவரது குழுவில் நாற்பதற்கும் மேற்பட்ட அரங்கக் கலைஞர்களும், பத்து லாரிகளுக்கும் மேற்பட்ட அரங்கப் பொருட்களும் இருந்தன.காட்சிச் சிறப்பைப் பார்ப்பதற்கே இவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதும்.டிக்கட் கிடைக்காமல் திரும்பிச் செல்வர் மக்கள். அதைத் தவிர்க்க முன்பதிவு முறையையும் அறிமுகப் படுத்தினார்.

இவரது "தசாவதாரம்" நாடகம் 1008 நாட்கள் நடைபெற்றது.சென்னையில் நடந்த நாடகத்திற்கு , 700 கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்த திருநெல்வேலியில் விளம்பரம் செய்யப்பட்டது.மக்கள் அவ்வளவு தொலைவிலிருந்தும் நாடகம் பார்க்க வந்தனர் என இதன் மூலம் தெரிகிறது.

இவரைப் பார்த்து, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி", "பால மீன ரஞ்சனி சங்கீத சபை", "ஸ்ரீபால ஷண்முகானந்த சபா", முதலிய நாடக சபைகளும் காட்சியமைப்பில் தங்களது கவனத்தைச் செலுத்தின எனலாம்.

காட்சிகளை பொறுத்தவரை தமிழ் நாடக மேடைக்கு திரு சி.கன்னையா அவர்கள் முன்னோடியாய் திகழ்ந்தார் எனலாம்.

2)நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
                                   
மதுரை பாலமீனரஞ்சனி சபா என்றும், மதுரை தேவி பால விநோத சங்கீத சபா என்றும் பால நாடக சபைகளை நடத்தியவர் ராஜ மாணிக்கம் பிள்ளை ஆவார்.

"பக்த ராமதாஸ்" நாடகத்தில் நவாப் ஆக நடித்ததால் நவாப் ராஜமாணிக்கம் அன அழைக்கப்பட்டார்.இவரும் நாடகக் காட்சி அமைப்புகளில் சாதனை புரிந்தவர் எனலாம்.

"கிருஷ்ண லீலா", "தசாவதாரம்"."இராமாயணம்"."ஐயப்பன்","ஏசுநாதர்", "பக்த ராமதாஸ்","குமார விஜயம்","சக்தி லீலா", என புராண நாடகங்களை நடத்தியவர்.

மேடையில் இவர் உருவாக்கிக் காட்டிய தந்திரக் காட்சிகள் பல ரசிகர்களைக் கவர்ந்தன.

"குமார விஜயம்" என்ற நாடகத்தில் முருகன் பிறப்பைக் காட்டுகையில்  ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார்.

"கிருஷ்ண லீலா" நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துக் கொண்டு வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதையும் காட்டினார்

யமுனை நதி பிளந்து  வழி விடுவதையும், நதிநீர் அலம்புவதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது.

தசாவதாரம் நாடகத்தில் சிறைக் காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும்,கதவு தானாக திறந்து கொள்வதும் காட்டப்பட்டது

இந்தத் தந்திர முறைகளே பின்னாட்களில், ஆர்.எஸ்,மனோகரும், ஹெரான் ராமசாமியும் தங்கள் நாடகங்களில் பின்பற்றினர் எனலாம்.

தந்திரக் காட்சிகளின் சிறப்புக்காகவே இவரது நாடகங்கள் ஆயிரம் முறைகளுக்கு மேல் நடத்தப் பட்டன.

இவரது ஐயப்பன் நாடகம் நடத்திய போது ஐயப்ப ஊர்வலம் நடத்தப் பட்டது.ஐயப்ப பக்தியும் பரவத் தொடங்கியது எனலாம்.

இவரது ராமாயணம் நடந்த காலகட்டத்தில், அது நடந்த இடத்தில் இருந்த பஸ் நிறுத்த இடம் ராமாயணம் ஸ்டாப் என்றே சொல்லப்பட்டது

திரு எஸ் எஸ் வாசன் அவர்கள் தனது ஔவையார் திரைப்படத்தின் வெளியீட்டை  ராமாயணம் நாடகக் கூட்டத்தைப் பார்த்து தள்ளி வைத்தார் என்றும் சொல்வர்.

3) எம்.கந்தசாமி முதலியார்

தொழில்முறைநாடகக் குழுக்களுக்கு ஆசிரியராகக் கிடைத்த மற்றொரு மேதை திரு எம்.கந்தசாமி முதலியார் ஆவார்கள்.இவர் எம்.கே.ராதா அவர்களின் தந்தை ஆவார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு ஆசிரியராக வந்த இவர், திரு ஜே.ஆர்.ரங்காராஜு அவர்களின் புகழ் பெற்ற நாவல்களான "இராஜாம்பாள்", "இராஜேந்திரா","சந்திரகாந்தா",ஆனந்தகிருஷ்ணன்","மோகனசுந்தரம்", ஆகிய நாவல்களை நாடகமாக்கினார்.

1925ஆம் ஆண்டு இறுதியில் திரு.எம்.கந்தசாமி முதலியார் தன் மகன் எம்.கே.ராதாவுடன் டி.கே.எஸ்., சகோதரர்கள் நடத்தி வந்த நாடகக்குழுவிற்கு ஆசிரியராக வந்தார்.

புகழ்பெற்ற நாவலாசிரியராய் திகழ்ந்து கொண்டிருந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய, "மேனகா" என்னும் நாவலை அவர்களுக்காக நாடகமாக்கித் தந்தார்.

நடிப்புக் கலையைப் பயிற்றுவிப்பதில் கந்தசாமி முதலியார் நிபுணராய்த் திகழ்ந்தார்.மாதக் கணக்கில் ஒத்திகைப் பார்த்த பின்னரே நாடகங்கள் அரங்கேறின.

பம்மல் சம்பந்த முதலியார் நடத்தி வந்த "சுகுண விலாச சபையில்" இவர் முதன் முதலாய் பெண் வேடத்தில் இவர் நடித்தார் எனலாம்.பின்னர் பாலாமணி அம்மையார் நாடக சபையில் ஆசிரியரான இவர் "மனோகரா" நாடகத்தைத் தயாரித்தார்

பின் இதே நாடகத்தை திரு பி.எஸ்.வேலு நாயர் நாடக சபையினருக்கு பயிற்றுவித்தார்.

பொதுவாக பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள், மற்றும் ஏனைய சமுதாய நாவல் நாடகங்களையும் தொழில் முறை நாடக சபைகளிடம் பரப்பியவர் இவர்.1939ல் இயற்கை எய்தினார்.
இவரை நாடக மறுமலர்ச்சித் தந்தை எனக் கூறுவர்

4) பாலாமணி அம்மாள்

                         

பெண்களைக் கொண்டே நாடகக் குழுவை நடத்தியவர் பாலாமணி அம்மையார். ஆவார்.தனது நாடகக் குழுவிற்கு"பாலாமணி அம்மாள் நாடகக் குழு" என்றே பெயரிட்டார்.
கும்பகோணத்தில் நடைபெறும் இவர் நாடகத்திற்கு மாயவரத்திலிருந்து சிறப்பு ரயிலே விடப்பட்டது.இந்த ரயிலுக்கு, "பாலாமணி ஸ்பெஷல்" என்று பெயர்.

இவரைத் தவிர்த்து, பி.பி.ஜானகி அம்மாள், பி.இரத்தினாம்பாள்,வேதவல்லித் தாயார்,விஜயலக்ஷ்மி கண்ணாமணி,பி.இராஜத்தம்மாள் முதலான பெண்மணிகளும் நாடகத் துறையில் சாதனைப் படைத்த பெண்கள் ஆவர்.

Wednesday, March 9, 2016

4) தமிழ் நாடகத் தந்தை



தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என சங்கரதாஸ் சுவாமிகள் போற்றப் பட்டார் என்றால்....தமிழ் நாடகத் தந்தை என போற்றப் பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரை நடையில் எழுதிய வழக்கறிஞர்,நீதியரசர்,நாடக ஆசிரியர், மேடை நாடக நடிகர்,எழுத்தாளர்,நாடக இயக்குநர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் பம்மல் சம்பந்த உதலியார்.

சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும், மாணிக்க வேலு அம்மையாருக்கும் 1873ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 9ஆம் நாள் சம்பந்தம் பிறந்தார்,விஜயரங்க முதலியார், அரசுப் பணியில் இருந்தாலும், தானே செலவு செய்து பல தமிழ் புத்தகங்களை வெளியிட்டு வந்தார்.அதன் காரணமாக அவரது வீட்டில் தமிழ், ஆங்கிலம் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.சம்பந்தம் எல்லாப் புத்தகங்களையும் ஆர்வத்துடன் படித்தார்.சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 ஆம் ஆண்டு முதல்1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி புரிந்தார்

சிறுவயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், அதன் நினைவாகவே இருந்தார்.1891ல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்களை பார்த்து இவர் தமிழ் நாடகப் பற்று அதிகரித்தது.அவரது நாடகக் குழுவில் படித்தவர்கள் எல்லாம் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்தம் தாமும் அப்படி ஒரு குழுவை ஆரம்பிக்க எண்ணினார்.அதில் உருவானதுதான் "சுகுண விலாச சபா".1891 ஜூலை முதல் நாள் இந்த சபா ஆரம்பிக்கப்பட்டது.

இதில் பலதரப்பட்ட அறிஞர்களையும் சேர்த்து, நாடகங்களில் நடிக்கச் செய்தார்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், சிர் சி.பி.ராமசுவாமி ஐயர்,எஸ்.சத்திய மூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே ராதாவின் தந்தை),சிர் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீநிவாச ஐயங்கார்,வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் ஆவர்.

சம்பந்த முதலியார், 90க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்த்துள்ளார்.

As You like it
macbeth
Cymbeline
Merchant of Venice

ஆகிய நாடகங்களை சுவைகுன்றாமல் முறையே, "அமலாதித்யன்". :"நீ விரும்பியபடியே", "மகபதி","சிம்மளநாதன்","வணிபுர வாணிகன்" என்ற பெயர்களில் மொழி பெயர்த்துள்ளார்.

தவிர்த்து, வடமொழியிலிருந்து காளிதாசரின், "மாளவிகாக்னிமித்திரம்", ஹர்ஷவர்த்தனரின், "இரத்தினாவளி" ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்தார்..

தன் கற்பனையிலிருந்து பல நாடகங்களை எழுதினார்.குறிப்பாக, "மனோகரன்" , "இரண்டு நண்பர்கள்". சபாபதி" ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இன்றும் போற்றப்படும், மனோகரன் நாடகத்திற்கு, சுவாமி சங்கரதாஸ் சுவாமிகளும், உடுமலை முத்துசுவாமி கவிராயரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என நாடகங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,ஐந்து மணி நேரத்தில் நாடகம் முடியும்படி மாற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

எதிர்க்கதை நாடகம் என்ற வகையை உருவாக்கியவர் இவர்.சமுதாயத்தில் பரவலாக வழங்கிவரும் பழைய கதையின் மூலக்கருத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டு நகைச்சுவையாகவே எழுதப்படுவது எதிர்க்கதை நாடகம் எனலாம்.இதற்காக அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என மாற்றி எழுதினார்.

எந்நிலையிலும் பொய் பேசாத ஒருவனைப் பற்றியது அரிச்சந்திரன் கதை. எந்நிலையிலும் பொய்யே பேசும் ஒருவனைப் பற்றிய வேடிக்கைக் கதை சந்திரஹரியாகும்.

பின்னர்...இதையே என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் திரைப்படமாக்கினார். ;

இவரைப் பற்றி மேலும் சில குறிப்புகள்_

22 வயதில் இவர் எழுதிய முதல் நாடகம், "லீலாவதி சுலோசன"
சங்கீத நாடக விருது 1959ல் பெற்றார்
1916ல் நாடகப் பேராசிரியர் விருது பெற்றார்
1963ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றார்.

இவரது நூல்கள் பல நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.அவற்றுள் சில

இந்தியனும் ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
ஒன்பது குட்டி நாடகங்கள்
கள்வர் தலைவன்
சபாபதி
நான் குற்றவாளி
மனோகரா

இன்றும் தமிழ் நாடகங்கள் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்பிற்குரியவனாய்த் திகழ இவர் முதல் காரணமாகும்.ஆகவேதான் "நாடகக் கலைப் பிதாமகர்" எனப் போற்றப்பட்டார்.

1967ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் அமரர ஆனார்.இவரது இழப்பு தமிழ் நாடக மேடைக்கு ஈடுசெய்ய முடியா இழப்பாகும்.

Tuesday, March 8, 2016

3) தமிழ் நாடகத் தலைமையாசிரியர்



19ஆம் நூற்றாண்டு இறுதியில் கும்பகோணம் நடேச தீட்சிதர் என்பவர் துவக்கிய கல்யாணராமய்யர் நாடகக் குழுவினர்தான் நாடகத்துறையில் புதிய பாதை கண்டவர்கள் எனலாம்.

தமிழ் நாடகக் கலைக்கு மகத்தானபணி ஆற்றிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இக்குழுவில்தான் நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில், நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட, தமிழ்நாட்டு நாடகக் குழுக்கள் அனைத்திலும் பெரும்பாலும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களே நடந்தன எனலாம்.

"ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும், நியதியும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும்"..இப்படிக் குரல் கொடுத்தவர் சுவாமிகள்

சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட நுணுக்கம்,காணப்பட்ட அழகு,நாடக பாத்திரங்கள் வாயிலாகப் பாடல்களிலும், உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்து...அதனால் நாடகம் பார்த்தோர் அடைந்த பயன்.இவற்றின் மூலம் சுவாமிகளின் புலமை நன்கு வெளிப்பட்டது.

அவர் சுமார் நாற்பது நாடகங்கள் எழுதியுள்ளார்.அவர் எடுத்துக் கொண்ட கதைகள் பெரும்பாலும் பழங்கதைகளே ஆகும்.

"அபிமன்ய சுந்தரி,பவளக்கொடி,சீமந்தினி,சதி அனுசியா,பிரகலாதா,சிறுத்தொண்டர்,வள்ளித்திருமணம்,சத்தியவான் சாவித்திரி,சுலோசன சதி" இப்படிப்பட்ட கதைகள் ஆகும்.
வடமொழி நாடகமாகிய "மிருச்சகடி" யையும்ஷேக்ஸ்பியரின் "ரோமியோ ஜூலியட்' "சிம்பலைன்" ஆகிய நாடகங்களையும், "மணிமேகலை","பிரபுலிங்க லீலை" ஆகிய நாடகங்களயும்...தமிழில் நாடகமாக்கித் தந்தார் சுவாமிகள்.இவர் எழுதிய நாடகங்கள் ஆயிரக் கணக்கில் நடிக்கப்பட்டவைகளாகின.

இவரது நாடகங்களில், வெண்பா,கலித்துகை,விருத்தம்,சந்தம், சிந்து,வண்ணம், ஓரடி,கும்பி,கலிவெண்பா, தாழிசை,கீர்த்தனை இப்படி பலவகைப்பட்ட பாடல்களும், சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்திருக்கும்.அப்போது உரைநடை அதிகமாக நாடகங்களில் வராத காலமாதலால், பெரும்பகுதி பாடல்களாகவே இருந்தன.

நாடகங்களில் பாட்டா...என இளைய தலைமுறையினர் நினைக்கக்கூடும்.

அந்நாட்களில் குறைந்தது நூறு பாடல்களாவது ஒரு நாடகத்தில் இருக்கும்.இரவல் குரலில் பாடும் வழக்கம் இல்லை.நாடகத்தில் நடிப்பவர்களே பாடியும் நடிக்க வேண்டும்.சிரித்தால், அழுதால், கோபித்தால், சண்டை போட்டால் எல்லமே பாட்டுகள்தான்..உரையாடல்கள் என ஏதேனும் இருந்தால், அவை பாட்டின் பொருளை விளக்குவதாகவே இருக்கும்.

இந்நிலையில் , நடிப்பைத் தொழிலாகக் கொண்ட குழுக்களுக்கு, உரையாடல்களாக எழுதிக் கொடுத்து நடிக்கும் முறையைக் கொணர்ந்தார் சுவாமிகள்.இதனால் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றப்பட்டார்.

ஒரு காலகட்டத்தில் நாடகத்தில் நடித்த பெரிய நடிகர்கள்...யாருக்கும் கட்டுப்படாமல் வசந்ங்ளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேசும் நிலை ஏற்பட சங்கரதாஸ் சுவாமிகள் "சமரச சன்மார்க்க சபை" என்ற ஒரு சபையை 1910 ஆம் ஆண்டு தொடங்கினார்.இதில், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா ஆகியோர் நடிகர்களாக விளங்கினர்.

இதைத் தொடர்ந்து பல நாடகசபைகள் தோன்றின. இவற்றில் எல்லாம் சிறுவர்களே நடிகர்களாகத் திகழ்ந்தனர்

மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபை
மதுரை ஒரிஜினல் பாய்ஸ்
மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா

ஆகியவை குறிப்பிடத்தக்கன..

தமிழ் நாடகக் கலையை வளர்த்த பெருமையில் முக்கிய இடம் பெற்றவர்கள் பலர் பாலர் நாடக சபையினர் எனலாம்.

எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமசந்திரன்,காளி என்.ரத்தினம்,பி.யூ.சின்னப்பா மற்றும் கே.பி.காமாட்சி, கே.பி.கேசவன்,எம்.கே.ராதா,பக்கிரிசாமி பிள்ளை முதலியோர் இவர்களில் சிலர் ஆவர்.

மதுரை பலமீன ரஞ்சனி சபா மூலம், கே.சாரங்கபாணி,நவாப் ராஜமாணிக்கம்,பி.டி.சம்பந்தம், பொன்னுசாமி பிள்ளை, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.வெங்கட்ராமன், சிதம்பரம் ஜெயராமன் ஆகியவர்கள் வந்தனர்

1914ல் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைக்கு சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்களுக்கு உரையாடல்களை முறையாக எழுதினார்.இவரது அனைத்து நாடகங்களும் தருமநெறியை வலியுறுத்தப் பெற்றிருக்கும்.இவரது நாடகப் பாடல்களில் உணர்ச்சி முதன்மை பெற்றிருக்கும்

ஒரேநாள் இரவில் நான்கு மணி நேரம் நாடகம் முழுவதையும், அடித்தல், திருத்தல் இல்லாமல் .பாடல்கள் வசனங்களுடன் எழுதும் தெய்வீக ஆற்றல் பெற்றவர் சுவாமிகள்.

பின்னாளில், என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சுவாமிகள் நினைவு நாள் ஒன்றில்,"சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகின் இமயமலை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 1867ல் பிறந்து , நாடக உலகின் இமயமாகத் திகழ்ந்த சுவாமிகள் 1922ல் அமரர் ஆனார். 

Sunday, March 6, 2016

2) நாடக வரலாறு

தமிழ் நாடகங்களின் தோற்றம்
--------------------------------------------------------

தமிழ் நாடகங்களின் தோற்றத்தை விவரிக்கும், தலைச் சங்ககாலத்து நூல் அகத்தியம். நாடகம் என்பது பாட்டும், நடிப்பும் கொண்டது என்று தமிழ்மரபு வழி கூறுகிறது.சங்கக் காலத்தில் குணநூல், கூத்த நூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது.

மேலும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன.

நாடகத் தோற்றம்
-----------------------------------

இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை.ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும்,அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் சொல்லப்படுகிறது.இவாறு பிறந்த நாடகம் தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ் பெற்றது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்,
"பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்கிறார். இவ்வரிகள், தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும்,நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம்.நாடக வழக்கைப் பற்றி மேலும் தொல்காப்பியம் கூறுகிறது....

"நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர்"

சுவைபடவருவதெல்லாம் ஓரிடத்தில் வந்தன.பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி, வடிவம் உணர்த்தபடாதது.
பொருளின் தன்மையினையும் உணர்த்தி, வடிவத்தையும் உணர்த்துவது என பொருள்கள் இருவகைப் படும்.
பொருளின் த்ன்மையினை உணர்த்தி, வடிவம் உணர்த்தப்படாதது...காமம், வெகுளி(சினம்),மயக்கம்,இன்பம்,துன்பம் முதலியன.இவையே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக , அனைத்து நாடுகளின் மொழி,நாடகம், திரைப்படம் போன்ற கலைவடிவங்களில் காணப்படுகின்றன.

இப்படி நாடகச்சுவைகளைக் கூறுவதால்...நாடகக்கலை தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது எனலாம்.

நாடக அரங்கம்
---------------------------

நாடகம் நடைபெறும் அரங்கம் இந்தந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்கிறது சிலப்பதிகாரம்

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விரலாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன்
தோன்றிய அரங்கில்"
    (சிலப்பதிகாரம்.அரங்கேற்று காதை)

அரங்கம் அளக்கப்படும் கோலானது, ஒரு சாண் மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவர் பெருவிரல் இருபத்தினான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்( அதுவே அக்கால அளவு கோலாகும்)

எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள்.எட்டு தேர்ந்துகள் ஒரு இம்மி.எட்டு இம்மிகள் ஒரு எள்.எட்டு எள் கொண்டது ஒரு நெல்.எட்டு நெல் ஒரு பெருவிரல்.

இதன்படி சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும்..நீளம் எட்டு கோலாகவும்..உயரம் ஒரு கோலாகவும் அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்திரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச்செய்து அரங்கினுள் செல்லவும், வெளியேறவும் இருவாயில்கள் அமைத்துத், தூண்களின் நிழல்கள் ஆடும் இடத்தில் விழாமல்நிலை விளக்கினைப் பொறுத்தினராம்.

நாடகத்திரைகள்
--------------------------

மூன்றுவகையான திரைகள் பண்டைகாலந் தொட்டு பழக்கத்தில் உள்ளன.அவை...

1) ஒருமுக எழினி -  ஒருமுகமாக சுரிக்கிக் கட்டப்பெற்ற திரையாகும் (இன்றும் சென்னை நாடகக் குழுக்களால் நாடகமேடைகளில் பயன்படுத்தப் படுகின்றன)

2)பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு  ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும் (இம்முறை இப்பொழுது தட்டி என அழைக்கப் படுகிறது.இம்முறை பயிற்றுமுறை நாடகக் குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்களால் பயன்படுத்தப் படுகிறது)

3)கந்து வரல் எழினி- மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும்,பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப் பெற்றுள்ள திரை..

இவற்றைத் தவிர்த்து, முத்து மாலைகள்,பூமாலைகளை வளைவாகத் தொங்கவிட்டு நாடக ரங்கினை அலங்கரித்தனர்

அரங்கைப் பயன் படுத்தும் முறை
-----------------------------------------------------------------

இன்றும் நாடக மேடையில், ஒரு நடிகர் வீட்டின் உள்ளே செல்ல வலப்புறமும், வெளியே செல்ல இடப்புறமும் பயன்படுத்துகின்றனர்.இம்முறை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வருவதை இப்பாடலால் காணமுடிகிறது

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

இப்பாடலில், குயிலுவர் என்பது இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்.நிலையிடம் ஒருகோல் என்ற ஒழுங்குபடி நின்றனர்.அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி தன் வலதுகாலை முன் வைத்து....பொருமிக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள்.ஒருமிக எழினியுள்ள இடதுத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற...ஆடி மூத்தவர்,நாட்டியத்திற்கு துணை செய்பவர் , மாதவி வந்தபடியே வலக்காலை முன்வைத்து வந்து நின்றனர் "என்கின்றது இப்பாடல் வரிகள்.

நடிப்பும், இசையும்
---------------------------------------

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாடலும், கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை,
பாண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை பிண்டியில் களைதலும்
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும்
                     (அரங்கேற்ற காதை)
இப்பாடல் வரிகளின் பொருள் வருமாறு-

கூத்து வகைகள் இரண்டு
அகக்கூத்து - அரசனுக்காக ஆடும் கூத்தை "வேத்தியலை:" அகக்கூத்து என்பர்
புறக்கூத்து- பிறருக்காக ஆடும் பொதுவியல்

நாடகம், நாட்டியம் இரண்டும் கூத்து என்றே அழைக்கப் பெற்றது.அகக்கூத்து இரு வகைகளைக் கொண்டிருந்தது.சாந்திக் கூத்து, மற்றும் விநோதக் கூத்து.

சாந்திக் கூத்து நான்கு வகைப்படும்

சாக்கம்- தாளத்தின் அடைப்படையைக் கொண்டது
மெய்க் கூத்து- அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்டது
அபிநயக்கூத்து- பாட்டின் பொருளை அபிநயத்து கதையை தழுவாது வருவது
நாடகக் கூத்து- கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்
விநோதக் கூத்து- பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது...இந்த விநோதக் கூத்து ஏழு வகைப்படும்
குரவைக் கூத்து- ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கை கோர்த்து ஆடும் கூத்தாகும்
கழாய்க்கூத்து- கலை நடனம் என அழைக்கப்படும் கூத்தாகும்
குடக்கூத்து- கரகம் எனாழைக்கப்படும் கூத்து
கரணம்- பாய்ந்து ஆடப்படும் கூத்தாகும்
பார்வைக்கூத்து- கண்களினால் நோக்கப்படும் கூத்தாகும்
வசைக்கூத்து- நகைச்சுவை உணர்வுகளை மையமாகக் கொண்ட கூத்தாகும்
சாமியாட்டம் அல்லது வெறியாட்டம்
வென்றிக் கூத்து- மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உணர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக் கூடிய கூத்தாகும்
இந்தக் கூத்தில் தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது நாடகம் எனப்பட்டது

கடைச்சங்கக் காலத்தில் நாடகத்தழிழ்
----------------------------------------------------------------------

கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
விளைவுகள விறலியிற் தோன்று நாடன்

என்ற கபிலரின் அகநாநூற்றுப் பாடல், "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்கிறது இவ்வரிகள்

:படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்"

என்ற வரிகளில் ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து கடைச்சங்கக் காலத்தில் தமிழ் நாடகம் செழுமைப் பெற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது

பின்னர், கடைச்சங்கக் காலம் வரை செழுமையுடன் இருந்தது நாடகக்கலை. கிபி 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 5ஆம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன.அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.ஆகவே, இக்காலக்கட்டத்தில் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் போனது.

பின் கிபி 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்ச்யடையத் தொடங்கின.

கிபி 846ஆம் ஆண்டு விஜயாலய சோழனால் எழுச்சிப் பெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது.கிபி1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகங்கள் மக்கள் மன்றங்களில் நடத்தப்பட்டன. சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துகள் போலவே நாடகக்கலை மக்களின் கலையாக வளர்ச்சிப் பெற்றது.

பின்பள்ளு,குறவஞ்சி,நொண்டி, போன்ற நாடகங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றின

இன்றைய தமிழ் நாடகங்களுக்கு வித்திட்டவர்கள்
---------------------------------------------------------------------------------------------

கிபி 19ஆம் நூற்றாண்டில் "தெருக்கூத்து" என்ற நாடக வடிவம் தோன்றியது.இதற்கு கோவிந்தசாமி ராவ் என்பவர் வித்திட்டார்.நாடகத்தின் நேரத்தையும் காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தார்.1891ல் பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நாடகங்கள் தமிழ் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது.நாடகமேடையில் கட்டிடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் கீழும், மேலும் ஏறுவது, இறங்குவது போன்ற யுக்திகள் அறிமுகமாகின

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்,  மின்விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய விஷயங்களை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக மைப்பாளர் ஆனார்.இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்குகளை நடிக்க வைத்து புதுமை படைத்தார்.

நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்ததை சி.கன்னையா அவர்கள் முக்கோண கனபரிமாண அமைப்பின் மூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த அரங்கில் அடுத்தக் காட்சிக்கான தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருக்கும் முறையினைத் தோற்றுவித்தார்.காட்சியமைப்புகளின் வழிகாட்டி கன்னையா எனலாம்.

இருபதாம் ஆண்டின் தொடக்கம் முதல் ஐம்பது ஆண்டுகள், தமிழ் வரபுமொழி நாடகங்கள் வளர்ச்சி பெற்றன.

இவற்றை இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்

தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என மூவகையாக முன்னோர் வகுத்ததையும், நம் தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுவதையும், இசைத் தமிழ் கேட்டு இன்புறத்தக்கது  என்றும், நாடகத் தமிழ் பார்த்து மகிழத்தக்கது என்றும் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

இவ்வாறு ஒரு மொழியை மூன்று கூறாகப் பாகுப்படுத்திப் பாராட்டிய பெருமை உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.


இந்தக் காலக் கட்டத்தில், இராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை சிலர் நாடகமாக்கினர்.அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், சுவாமினாத பிள்ளையின் இராம நாடகம் ஆகியவை இராமாயணத்தை ஒட்டித் தோன்றிய நாடகங்கள் ஆகும்.

அல்லி நாடகம், அர்ச்சுன நாடகம்,அபிமன்யூ நாடகம், அதிரூப அமராவதி ஆகிய நாடகம் பாரதத்தினின்று தோன்றின.

தவிர்த்து, 'அரிச்சந்திர விலாசம்", "மதுரை வீரன் விலாசம்". "வள்ளித் திருமணம்" ஆகிய நாடகங்களும் நடத்தப்பட்டன.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஷேக்ஸ்பியர்,காளிதாசர், பவபூதி ஆகியோரின் ஆங்கில, வடமொழி நாடகங்களைத் தழுவியும், மொழி பெயர்த்தும் தமிழ் நாடகங்கள் இயற்றப்பட்டன.பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் நாடகம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒப்பும், உயர்வும் பெற்று விளங்கியது.

ஆங்கிலப் புலவர் லார்ட் லிட்டன் என்பவர் எழுதிய "இரகசிய வழி" என்ற கதையைத் தழுவியது "மனோன்மணீயம்".இது ஒரு தழுவல் நாடகமாக இருந்தாலும், மூல நாடகத்தை மிஞ்சும் வகையில் இருந்தது எனலாம்..ஆனாலும் "மனோன்மணீயம்" படிக்க எழுதிய நாடகமாகவே இருந்ததே தவிர, நடிக்க எழுதிய நாடகமாக இல்லை.

மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தை வடமொழியிலிருந்து தமிழில் அழகாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் மறைமலையடிகள் அவர்கள்.

பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை தமிழின் பால் கொண்ட மையலால் மாற்றிக் கொண்ட வி.கே.சூரிய நாராயண சாஸ்திரியார் ,நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டும் சிறப்பானது..நாடகம் அமையும் முறைகளை விளக்கும் வகையில் அரிய "நாடகவியல்" என்னும் நூலை இவர் எழுதியுள்ளார்.

தவிர்த்து, "கலாவதி:", மான விஜயம்" "ரூபாவதி" ஆகிய நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

அடுத்து, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்  எனலாம்.