Sunday, March 6, 2016

நாடகக் கலை என்றால் என்ன?


இலக்கியம் என்றால் படித்து மகிழ்வது.
நாடக இலக்கியம் என்றால் பார்த்து மகிழ்வது.
நாடகம் கலைகளுக்கெல்லாம் அரசன்.மக்கள் பயன்படுத்தும் ஒரு மகத்தான கலை.
எது ஒருவனை மகிழ்விக்கிறதோ..அது கலை.எது சமுதாயத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ அது கலை.
மிகைப்பத்தப்படாதது எதுவோ..அது கலை.அதனால் தான் தத்ரூபமாக வரும் படங்களை art film
என்கிறோம்.நாடகங்களை நாடகக்கலை என்கிறோம்.
நாடகம்...நாடு+அகம்..நாட்டை அகத்தில் கொண்டதே நாடகம்.அதாவது நாட்டின் சென்ற காலத்தையும்,நிகழ்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால்..நாடு..அகம்..நாடகம் என பெயர் பெற்றது எனலாம்.
நாடு..அகம்..அதாவது அகம் நாடு..உன்னுள் நோக்கு,உன்னை உணர்..சுருங்க ஒரு வரியில் சொல்ல
வேண்டுமென்றால்..நாடகம் உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி எனலாம்.
நாடகக் கலை என்பது என்ன? சிந்தித்துப் பாருங்கள்..
நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்.ரசிக்கிறோம்.சில காட்சிகள்
நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
அப்படிப் பதிந்துவிட்ட காட்சியை ஒரு ஓவியன் ஓவியமாக வரைகிறான்.
நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை..மழலை பேச்சுகளை எப்படி ரசிக்கிறோம்.அந்த குழந்தையை
புகைப்படம் எடுத்து..அதைப்பார்த்து எவ்வளவு மகிழ்கிறோம்?கடைகளில் பலகாய்கறிகளைப் பார்க்கிறோம்.
ஆனால் அவற்றை அதிசயமாகவோ..ஆர்வமாகவோ..பார்ப்பதில்லை.ஆனால் அவற்றை மண்ணாலோ..
காகிதத்தாலோ..செய்து வர்ணம் பூசி பார்க்கும் போது..அடடே..நிஜ மாம்பழம் போல இருக்கிறதே
என மகிழ்கிறோம்.
இப்படி நாம் தினசரி பார்க்கும் காட்சிகளை ஓவியமாகவோ..புகைப்படமாகவோ..மண்ணால் உருவான
படைப்புகளாகவோ பார்க்கும் போது தனி மகிழ்ச்சி அடைகிறோமே..அது ஏன்? அந்த உணர்ச்சிக்குப் பெயர் என்ன?அதுதான் கலை உணர்வு.
முதன் முதலில் பண்டைக்காலத்தில் நாடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?

நம் முன்னோர்கள்..மரத்தால் பொம்மைகளை செய்து அவற்றை ஆடி..ஓடி விளையாட வைத்தார்கள்.
பின்னர் மண்ணாலும்..துணியாலும் மனிதர்களைப்போல் அழகான பொம்மைகள் செய்து அந்த பொம்மைகளின் கை..கால்..தலை..முதலியவற்றை கயிற்றால் கட்டி..பின்னர் ,,அதற்கு பொம்மலாட்டம் என பெயர் வைத்தனர்,இது பொம்மலாட்டக்கலை.நாள் பட நாள்பட இப்படி உயிரில்லா பொம்மைகளை கொண்டு நடத்துவதை விட உயிருள்ள மனிதர்களுக்கு வேடம் போட்டுஇந்த விளையாட்டை அவர்களைக் கொண்டு நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற
எண்ணம் தோன்ற..இன்று நாம் காணும் நாடக விளையாட்டு தோன்றியது.அதனால் தான் கிராமங்களில்
நாடகத்தை விளையாட்டு என்கிறார்கள்.அதன் காரணமாகத்தான் நாடகத்தை ஆங்கிலத்தில் play என்கிறோம்.
மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர்.தமிழ் மொழியில் இதை விளக்க முத்தமிழை வகுத்தார்கள்.
அதாவது....இயல்..இசை..நாடகம்
நான் இப்போது பேசிக்கொண்டிருப்பது வார்த்தைகளால்..இது இயல்
இதையே ஒரு பாட்டாக நான் பாடினால் அது இசை
இயலும்..இசையும் மேடையில் சேரும்போது..அதுதான் நாடகம்.
இயல்..இசை..இரண்டும் சேர்ந்தால் நாடகம்.
ஆகவே தான் இயல்..இசை..நாடகம்..என நாம் நாடகத்தை கடைசியில் வைத்தோம்.
ஆம்..நாடகத்தை ஏன் கலை என்கிறோம்?ருசிக்கத்தக்கது..ரசிக்கத்தக்கது..உணரத்தக்கது..மகிழத்தக்கது
எல்லாவற்றையும் நாம் கலை எங்கிறோம்.
ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் என சரஸ்வதியை ஔவை விளிக்கிறார்.
மகிழத்தக்கதான கலை-மன்மதக்கலை
ருசிக்கத்தக்கது-சமையல் கலை
பார்த்து ரசிப்பது-ஓவியக்கலை
மகிழத்தக்கது-இசை மற்றும் ஓவியக்கலை
ரசிக்கத்தக்கது-நாடகக்கலை
நாடக்கலையில் பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.

நடிகர்களிடையே ஒழுங்கும்..கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.நாடகத்தில் நடிகன் நவரசங்களையும்
காட்ட வேண்டும்.அதாவது சுபாவத்தில் சாதுவாக இருப்பவன்..நடிக்கும் போது..காதல்,வீரம்,சிரிப்பு,கோபம்,
வியப்பு,இழிப்பு,சோகம்,பயம்,சாந்தம் ..இப்படி நவரசங்களையும் காட்ட வேண்டும்.அந்தக் கலை அவனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.அதனால்தான் நாடகத்தை கலை என்கிறோம்.

பெர்னாட்ஷா...எப்போது உலகப் புகழ் பெற்றார் தெரியுமா?
நாடகங்கள் எழுதி செல்வாக்கு பெற்ற பின்னர்தான்..சிறுகதை,நாவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கடினம்.
நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பது உண்மையான கூற்று.இவ்வளவு பெருமையான
நாடகக்கலையை வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக்கூடாது.நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள்ளத்தை
உயர்த்திச் சென்ற கால சிந்தனைகளையும்,நிகழ்காலத்து உண்மைகளையும்,வருங்காலத்தின் வளமைகளையும்
எடுத்துக் காட்டுகின்றன.ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம்..உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அந்த நாடகத்தினுள்
ஒரு நாடகம் வரும்.தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க எண்ணுகிறான் ஹாம்லட்.
அதற்கு நாடகம் தான் நல்ல வழி என்று எண்ணி ..உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின்
கொலை நிகழ்ச்சியை நாடகமாக்கி நடிக்க வேண்டும்.தன் சிற்றப்பன் கிளாடியசும்,தன் அன்னையும் அதை
பார்க்கவேண்டும்.அவர்கள் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் என விரும்புகிறான்.
தானே, கதை எழுதி..நடிகர்களை நடிக்கச் சொல்கிறான்.நாடகம் பார்க்கும் சிற்றப்பன் முகம் மாற..
அவனே கொலையாளி என காண்கிறான் ஹாம்லட்.
நாடகத்தின் மூலம் ஒரு கொலையாளியையும் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நம் நாடு சுதந்திரம் அடைய..நாடகங்கள் ஆற்றிய பணியை யாரும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது.
பேசும்படம் வந்த போது..நாடக மேடை இறந்துவிடும் என்றார்கள்.இன்றும் நாடகங்கள் அழிந்து வருகிறது
என்கிறார்கள்.ஆனால்..அது அழியாது..
நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டால்..அதை யாராலும் அழிக்கமுடியாது.

நடிப்புக்கலை..
-------------------------------

வீட்டில் குழந்தைகள் நாய்,பூனை இவற்றுடன் பயமின்றி விளையாடுகின்றன.அந்த நாயும்,பூனையும் தன் கூரிய நகங்களைக் கொண்டு..குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி எப்படி விளையாடுகின்றன..அதுவும் அவற்றின் நடிப்புத்தானே?
பெண் குழந்தைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு..சமையல் செய்வது போல விளையாடுகின்றனவே..
அதுவும் நடிப்புத்தானே?
உலகம் ஒரு நாடக மேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்கிறார்களே..அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் நடிகர்கள்தானே?நடிப்புக்கலை தெரிந்தவர்கள் தானே?
ஒரு பிச்சைக்காரன்..தனது..நல்ல காலை மடக்கி முடம்பொல காட்டுகின்றானே..அது அவன் நடிப்பு.நன்கு தெரியும்
கண்களை..தெரியாதது போல குருடாக்கிக் காட்டுகின்றானே..அதுவும் நடிப்புத்தானே?
மனிதன் மொழியை உருவாக்குவதற்கு முன்..பேசத்தொடங்குமுன்..நடிப்பின் மூலம் தானே தன் எண்ணங்களை
வெளிப்படுத்தி இருப்பான்.ஹிந்தி தெரியாத நாம் இன்றும் வடக்கே சென்றால்.. நெருக்கடி சமயங்களில்..நடிப்புத்
தானே நம்மை காப்பாற்றி உதவி செய்கிறது.புரிய வைக்க வேண்டியதை கை கால்கள் அசைவு மூலம் புரிய
வைப்பது கலைதானே.நடிகனுடைய கண்கள்தான் மற்ற உறுப்புக்களை விட மிகவும் முதன்மையானது.
கண்கள் இருளிலே ஒளியாக..நடிப்பிலே உயிராக விளங்குகின்றன என்று சொல்லலாம்.சபையிலிருக்கும் மக்கள்
நடிகனின் பாத்திரத்தின்தன்மையை புரிந்துக் கொள்கிறார்கள்.ஒவ்வொரு நடிகனும் நடிப்புக் கலையில் தேர்ச்சிபெற
பேசும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மேடையில் நடிக்கும் போது நடிகன் ஒருவன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது..வேறு எங்காவது
சுழல விட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டு விடும்.பாவத்தைக் காட்டும் கலையை பயில வேண்டும்.
அழும் போது அழகாக அழுவது ஒரு கலை.கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப் பட வேண்டும்.எந்த வகையிலும்
தன்னை விகாரப்படுத்திக் கொள்ளக்கூடாது.விகாரப்படுத்திக் கொள்ளாமல் கோபப்படுவது ஒரு கலை.குரல் பயிற்சி
..மிக முக்கியமானது.வார்த்தைகளிலே ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும்.குழைவு இருக்க வேண்டும்.அன்பு காட்டி
பேசுவதும்..ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும்.அடுத்த படியாக பேச்சிலே தெளிவு இருக்க
வேண்டும்.அதுவும் ஒரு கலை.ஒரு பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வார்த்தைகளை
நன்கு கவனிக்க வேண்டும்.எந்தெந்த இடத்தில் தெளிவும்..அழுத்தமும் வேண்டும் என உணர வேண்டும்.ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்கு பேச்சு தொடங்கும்.அது போன்ற சமயங்களில் அழுத்தமாக
சொல்லாவிட்டால் மக்களுக்கு புரியாது.அழும் காட்சிகளில் உண்மையாக அழக்கூடாது.அழுதால் பேச்சு தெளிவாக
இருக்காது.அழுகை நடிப்பாக இருந்தால்தான் பேச்சு தெளிவாக இருக்கும்.அப்படி அழ தெரிந்திருக்க வேண்டியது
ஒரு கலை
எந்த ஒரு நடிகரையும்,எந்த சமயத்திலும் காப்பி அடிக்கக்கூடாது.தனக்கென தனி பாணி வேண்டும்.காப்பியடிக்கும் கலை மட்டும் வேண்டாம்.
நாடகக்கலையை பொறுத்தமட்டில்..புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது ரசிகர்களின் கை தட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது..பார்ப்பவர் உள்ளத்தில் அது பாய்ந்து நம் பண்புக்கேற்ற வகையில் அது செயலாக வெளிப்பட வேண்டும்.
கலை என்பது நன்மைக்காக வளர வேண்டும்.மனிதரின் அறிவை நல்ல வழியிலும் திருப்பலாம்.கெட்ட வழியிலும் திருப்பலாம்.நல்லதைவிட தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.ஆகவே பொழுது போக்கு என்ற பெயரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் கூட மக்களின் நலன் கருதியே வரவேண்டும்.
நாடக கலாசாலைப்போல நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ?என்றார் கவிமணி.ஆம்..நாடகத்தை நல்ல கலாசாலையாக அந்த கவிஞன் நினைத்தான்.
இக்கருத்தின்படி நாட்டில் நாடக நற்கலாசாலைகள் அமைக்க வேண்டும்..நடிப்புக்கலையை போதிக்க வேண்டும்.
அதன் மூலம் மக்களின் கண்களையும்,செவிகளையும் கவர்ந்து,அவர்களுடைய வாழ்வை வளமுடையதாக்க
வேண்டும்.தூய்மைப்படுத்த வேண்டும்.
புராண நாடகம்,இதிகாச நாடகம்,வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம்,பக்தி நாடகம்,இலட்சிய நாடகம்,சமுதாய நாடகம்,சமுதாய சீர்திருத்த நாடகம்,தேசிய நாடகம்,நகைச்சுவை நாடகம் என நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
நடிப்புக்கலைக்கு உரிய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?ஒரு ஓவியன்..தன் கலையை செய்து முடித்ததும்..அவன்
வேறாகவும்..அவன் வரைந்த ஓவியம் வேறாகவும் அமைந்து விடுகிறது.அதுபோன்றதுதான் சிற்பக்கலையும்.ஆனால்
நடிகன் நிலை முற்றிலும் மாறுபட்டது.நடிகன் வேறாகவும்..அவன் படைப்பு வேறாகவும் இருக்க முடியாது.நடிகன் படைக்கும் பாத்திரம் அவனுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது.நடிகனும் அவனே..பாத்திரமும் அவனே..
இந்த சிறப்பை கலைஞர்கள் அனைவரும் உணர வேண்டும்.இது நடிப்புக் கலைக்கே உரிய தனி சிறப்பாகும்.
நாடகத்தில் சொல்லப்படும் கதை அழகோடு,கலையழகோடு..மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வழிகோல வேண்டும்.

இப்படி அழகாக சொல்லிச் சென்றவர் ஔவை ஷண்முகம் ஆவார்.

1)தெருக்கூத்து
----------------------

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின் பழங்க்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.

தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில் சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒரு அகன்ற பெஞ்ச் போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங் கீற்றால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.

கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும் பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டு பாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும் இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை மிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பர்.

தெருக்கூத்தில் ஆர்மோனியம், மத்தளம், தாளம், முகவீணை(மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.

கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார். கூத்தினைத் தொடங்கி வைத்தல், கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல், கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல், கூத்தின் கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும் விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல், கூத்தினை முடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.

கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள் கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர் கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டிய முழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும் அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம், மார்புப் பதக்கம், தோளணிகள், போன்ற அணிகளை அணிவர். வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண் வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவான அணிகலன்களை அணிவர்.

கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும். இதனை களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது என ஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.

கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத் திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்கு முன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன் காட்சி தருவர்.

தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களே பெண்வேடமிட்டு நடிப்பர்.

பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கி முடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோன்பிருப்பர்.

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது. தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி வருகிறது

வில்லுப்பாட்டு
---------------------------------

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.

வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.

‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குட்த்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாடத் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது.


வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:


இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.


குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.

தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.


கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.


கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.


நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.


இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.

No comments:

Post a Comment