Sunday, March 6, 2016

2) நாடக வரலாறு

தமிழ் நாடகங்களின் தோற்றம்
--------------------------------------------------------

தமிழ் நாடகங்களின் தோற்றத்தை விவரிக்கும், தலைச் சங்ககாலத்து நூல் அகத்தியம். நாடகம் என்பது பாட்டும், நடிப்பும் கொண்டது என்று தமிழ்மரபு வழி கூறுகிறது.சங்கக் காலத்தில் குணநூல், கூத்த நூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது.

மேலும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன.

நாடகத் தோற்றம்
-----------------------------------

இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை.ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும்,அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் சொல்லப்படுகிறது.இவாறு பிறந்த நாடகம் தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ் பெற்றது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்,
"பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்கிறார். இவ்வரிகள், தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும்,நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம்.நாடக வழக்கைப் பற்றி மேலும் தொல்காப்பியம் கூறுகிறது....

"நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர்"

சுவைபடவருவதெல்லாம் ஓரிடத்தில் வந்தன.பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி, வடிவம் உணர்த்தபடாதது.
பொருளின் தன்மையினையும் உணர்த்தி, வடிவத்தையும் உணர்த்துவது என பொருள்கள் இருவகைப் படும்.
பொருளின் த்ன்மையினை உணர்த்தி, வடிவம் உணர்த்தப்படாதது...காமம், வெகுளி(சினம்),மயக்கம்,இன்பம்,துன்பம் முதலியன.இவையே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக , அனைத்து நாடுகளின் மொழி,நாடகம், திரைப்படம் போன்ற கலைவடிவங்களில் காணப்படுகின்றன.

இப்படி நாடகச்சுவைகளைக் கூறுவதால்...நாடகக்கலை தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது எனலாம்.

நாடக அரங்கம்
---------------------------

நாடகம் நடைபெறும் அரங்கம் இந்தந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்கிறது சிலப்பதிகாரம்

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விரலாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன்
தோன்றிய அரங்கில்"
    (சிலப்பதிகாரம்.அரங்கேற்று காதை)

அரங்கம் அளக்கப்படும் கோலானது, ஒரு சாண் மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவர் பெருவிரல் இருபத்தினான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்( அதுவே அக்கால அளவு கோலாகும்)

எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள்.எட்டு தேர்ந்துகள் ஒரு இம்மி.எட்டு இம்மிகள் ஒரு எள்.எட்டு எள் கொண்டது ஒரு நெல்.எட்டு நெல் ஒரு பெருவிரல்.

இதன்படி சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும்..நீளம் எட்டு கோலாகவும்..உயரம் ஒரு கோலாகவும் அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்திரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச்செய்து அரங்கினுள் செல்லவும், வெளியேறவும் இருவாயில்கள் அமைத்துத், தூண்களின் நிழல்கள் ஆடும் இடத்தில் விழாமல்நிலை விளக்கினைப் பொறுத்தினராம்.

நாடகத்திரைகள்
--------------------------

மூன்றுவகையான திரைகள் பண்டைகாலந் தொட்டு பழக்கத்தில் உள்ளன.அவை...

1) ஒருமுக எழினி -  ஒருமுகமாக சுரிக்கிக் கட்டப்பெற்ற திரையாகும் (இன்றும் சென்னை நாடகக் குழுக்களால் நாடகமேடைகளில் பயன்படுத்தப் படுகின்றன)

2)பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு  ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும் (இம்முறை இப்பொழுது தட்டி என அழைக்கப் படுகிறது.இம்முறை பயிற்றுமுறை நாடகக் குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்களால் பயன்படுத்தப் படுகிறது)

3)கந்து வரல் எழினி- மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும்,பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப் பெற்றுள்ள திரை..

இவற்றைத் தவிர்த்து, முத்து மாலைகள்,பூமாலைகளை வளைவாகத் தொங்கவிட்டு நாடக ரங்கினை அலங்கரித்தனர்

அரங்கைப் பயன் படுத்தும் முறை
-----------------------------------------------------------------

இன்றும் நாடக மேடையில், ஒரு நடிகர் வீட்டின் உள்ளே செல்ல வலப்புறமும், வெளியே செல்ல இடப்புறமும் பயன்படுத்துகின்றனர்.இம்முறை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வருவதை இப்பாடலால் காணமுடிகிறது

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

இப்பாடலில், குயிலுவர் என்பது இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்.நிலையிடம் ஒருகோல் என்ற ஒழுங்குபடி நின்றனர்.அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி தன் வலதுகாலை முன் வைத்து....பொருமிக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள்.ஒருமிக எழினியுள்ள இடதுத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற...ஆடி மூத்தவர்,நாட்டியத்திற்கு துணை செய்பவர் , மாதவி வந்தபடியே வலக்காலை முன்வைத்து வந்து நின்றனர் "என்கின்றது இப்பாடல் வரிகள்.

நடிப்பும், இசையும்
---------------------------------------

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாடலும், கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை,
பாண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை பிண்டியில் களைதலும்
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும்
                     (அரங்கேற்ற காதை)
இப்பாடல் வரிகளின் பொருள் வருமாறு-

கூத்து வகைகள் இரண்டு
அகக்கூத்து - அரசனுக்காக ஆடும் கூத்தை "வேத்தியலை:" அகக்கூத்து என்பர்
புறக்கூத்து- பிறருக்காக ஆடும் பொதுவியல்

நாடகம், நாட்டியம் இரண்டும் கூத்து என்றே அழைக்கப் பெற்றது.அகக்கூத்து இரு வகைகளைக் கொண்டிருந்தது.சாந்திக் கூத்து, மற்றும் விநோதக் கூத்து.

சாந்திக் கூத்து நான்கு வகைப்படும்

சாக்கம்- தாளத்தின் அடைப்படையைக் கொண்டது
மெய்க் கூத்து- அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்டது
அபிநயக்கூத்து- பாட்டின் பொருளை அபிநயத்து கதையை தழுவாது வருவது
நாடகக் கூத்து- கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்
விநோதக் கூத்து- பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது...இந்த விநோதக் கூத்து ஏழு வகைப்படும்
குரவைக் கூத்து- ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கை கோர்த்து ஆடும் கூத்தாகும்
கழாய்க்கூத்து- கலை நடனம் என அழைக்கப்படும் கூத்தாகும்
குடக்கூத்து- கரகம் எனாழைக்கப்படும் கூத்து
கரணம்- பாய்ந்து ஆடப்படும் கூத்தாகும்
பார்வைக்கூத்து- கண்களினால் நோக்கப்படும் கூத்தாகும்
வசைக்கூத்து- நகைச்சுவை உணர்வுகளை மையமாகக் கொண்ட கூத்தாகும்
சாமியாட்டம் அல்லது வெறியாட்டம்
வென்றிக் கூத்து- மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உணர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக் கூடிய கூத்தாகும்
இந்தக் கூத்தில் தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது நாடகம் எனப்பட்டது

கடைச்சங்கக் காலத்தில் நாடகத்தழிழ்
----------------------------------------------------------------------

கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
விளைவுகள விறலியிற் தோன்று நாடன்

என்ற கபிலரின் அகநாநூற்றுப் பாடல், "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்கிறது இவ்வரிகள்

:படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்"

என்ற வரிகளில் ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து கடைச்சங்கக் காலத்தில் தமிழ் நாடகம் செழுமைப் பெற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது

பின்னர், கடைச்சங்கக் காலம் வரை செழுமையுடன் இருந்தது நாடகக்கலை. கிபி 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 5ஆம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன.அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.ஆகவே, இக்காலக்கட்டத்தில் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் போனது.

பின் கிபி 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்ச்யடையத் தொடங்கின.

கிபி 846ஆம் ஆண்டு விஜயாலய சோழனால் எழுச்சிப் பெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது.கிபி1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகங்கள் மக்கள் மன்றங்களில் நடத்தப்பட்டன. சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துகள் போலவே நாடகக்கலை மக்களின் கலையாக வளர்ச்சிப் பெற்றது.

பின்பள்ளு,குறவஞ்சி,நொண்டி, போன்ற நாடகங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றின

இன்றைய தமிழ் நாடகங்களுக்கு வித்திட்டவர்கள்
---------------------------------------------------------------------------------------------

கிபி 19ஆம் நூற்றாண்டில் "தெருக்கூத்து" என்ற நாடக வடிவம் தோன்றியது.இதற்கு கோவிந்தசாமி ராவ் என்பவர் வித்திட்டார்.நாடகத்தின் நேரத்தையும் காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தார்.1891ல் பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நாடகங்கள் தமிழ் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது.நாடகமேடையில் கட்டிடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் கீழும், மேலும் ஏறுவது, இறங்குவது போன்ற யுக்திகள் அறிமுகமாகின

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்,  மின்விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய விஷயங்களை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக மைப்பாளர் ஆனார்.இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்குகளை நடிக்க வைத்து புதுமை படைத்தார்.

நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்ததை சி.கன்னையா அவர்கள் முக்கோண கனபரிமாண அமைப்பின் மூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த அரங்கில் அடுத்தக் காட்சிக்கான தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருக்கும் முறையினைத் தோற்றுவித்தார்.காட்சியமைப்புகளின் வழிகாட்டி கன்னையா எனலாம்.

இருபதாம் ஆண்டின் தொடக்கம் முதல் ஐம்பது ஆண்டுகள், தமிழ் வரபுமொழி நாடகங்கள் வளர்ச்சி பெற்றன.

இவற்றை இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்

தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என மூவகையாக முன்னோர் வகுத்ததையும், நம் தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுவதையும், இசைத் தமிழ் கேட்டு இன்புறத்தக்கது  என்றும், நாடகத் தமிழ் பார்த்து மகிழத்தக்கது என்றும் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

இவ்வாறு ஒரு மொழியை மூன்று கூறாகப் பாகுப்படுத்திப் பாராட்டிய பெருமை உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.


இந்தக் காலக் கட்டத்தில், இராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை சிலர் நாடகமாக்கினர்.அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், சுவாமினாத பிள்ளையின் இராம நாடகம் ஆகியவை இராமாயணத்தை ஒட்டித் தோன்றிய நாடகங்கள் ஆகும்.

அல்லி நாடகம், அர்ச்சுன நாடகம்,அபிமன்யூ நாடகம், அதிரூப அமராவதி ஆகிய நாடகம் பாரதத்தினின்று தோன்றின.

தவிர்த்து, 'அரிச்சந்திர விலாசம்", "மதுரை வீரன் விலாசம்". "வள்ளித் திருமணம்" ஆகிய நாடகங்களும் நடத்தப்பட்டன.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஷேக்ஸ்பியர்,காளிதாசர், பவபூதி ஆகியோரின் ஆங்கில, வடமொழி நாடகங்களைத் தழுவியும், மொழி பெயர்த்தும் தமிழ் நாடகங்கள் இயற்றப்பட்டன.பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் நாடகம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒப்பும், உயர்வும் பெற்று விளங்கியது.

ஆங்கிலப் புலவர் லார்ட் லிட்டன் என்பவர் எழுதிய "இரகசிய வழி" என்ற கதையைத் தழுவியது "மனோன்மணீயம்".இது ஒரு தழுவல் நாடகமாக இருந்தாலும், மூல நாடகத்தை மிஞ்சும் வகையில் இருந்தது எனலாம்..ஆனாலும் "மனோன்மணீயம்" படிக்க எழுதிய நாடகமாகவே இருந்ததே தவிர, நடிக்க எழுதிய நாடகமாக இல்லை.

மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தை வடமொழியிலிருந்து தமிழில் அழகாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் மறைமலையடிகள் அவர்கள்.

பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை தமிழின் பால் கொண்ட மையலால் மாற்றிக் கொண்ட வி.கே.சூரிய நாராயண சாஸ்திரியார் ,நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டும் சிறப்பானது..நாடகம் அமையும் முறைகளை விளக்கும் வகையில் அரிய "நாடகவியல்" என்னும் நூலை இவர் எழுதியுள்ளார்.

தவிர்த்து, "கலாவதி:", மான விஜயம்" "ரூபாவதி" ஆகிய நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

அடுத்து, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்  எனலாம்.

No comments:

Post a Comment