Monday, March 14, 2016

8 - டி.கே.எஸ்.சகோதரர்கள்

                     

டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதியருக்கு நான்கு மகன்கள். டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி., இந்த நால்வரும் நாடக உலகில், திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நுழைந்த போது பள்ளிச் சிறுவர்கள்.ஆறாவது வகுப்பு, நான்காவது வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று முறையே படித்துக் கொண்டிருந்தனர்.கடைசி மகன் பகவதி கைக்குழந்தை.

ஷண்முகம் இளமையிலேயே ,துடிப்பு, ஆர்வம்,சிந்தனைக் கூர்மை, உடையவராய் விளங்கினார்.சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த "அபிமன்யு சுந்தரி" நாடகத்தில் அபிமன்யுவாக நடித்து புகழ் பெற்றார். தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகிய நாடக ஆசிரியர்களிடம் ஷண்முகம் நடிப்புப் பயின்றார்.

1925 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" என்ற நாடகக் குழுவைத் தொடங்கி 1950 வரை தமிழ் நாட்டிலும், மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர்.

1937ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி திரு டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். 'அன்ன பூர்னிகா மந்திர்" என்ர வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது இந்நாடகம்.

பின்னர் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் முத்துசாமி அவர்களால் நாடக மாக்கப்பட்டு நடந்தது

தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர்.இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது.108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர்.

1942ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 2ஆம் தேதி மதுரையில் , பி.எத்திராஜுலு அவர்கள் எழுதிய ஔவையார் நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் கதாநாயகன் கிடையாது.கதாநாயகி உண்டு...ஆனால் கதாநாயகியும் ஒரு மூதாட்டி.காதல் காட்சிகள் இல்லை.நாடக இலக்கணப்படி தோன்றல், திரிதல் ஆகிய முறைகளை அனுசரித்து எழுதப்படாத புதுமை நாடகம்.இந்நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் நாடக உலகிற்கே மாபெரும் வெற்றி எனலாம்.இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள்.இது அவரது நாடக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு எனலாம்.இதற்கு பின்னர் ஔவையார் என்ற அடைமொழியோடு "ஔவை சண்முகம்' என்று அழைக்கப்பட்டார் அவர்.

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, டி.கே,எஸ். சண்முகத்தின் ஔவையார் நடிப்பைப் பாராட்டி கவி ஒன்று புனைந்தார்

மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஔவையைநாம்
இன்று கண்ட காட்சி இது

ஔவையின் நடிப்பை விமரிசித்த கல்கி அவர்கள்-

"நடிப்புத் திறமையை பொறுத்த வரையில் இந்நாடகத்தில் ஔவைப்பாட்டியாக நடிக்கும் திரு டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.வேஷம்,பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம்.நடிப்பு அபாரம்" என்று கல்கியில்  (3-6-42)விமரிசித்தார்

திரு ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய பில்ஹணன், டி.கே.முத்துசாமி எழுதிய காளமேகப் புலவர்,கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, ப.நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜா, ஆகிய நாடகங்களை அரங்கேற்றினர்.

நாடு சுதந்திரம் அடைந்தபின், முதல் வரலாற்று நாடகமாக ரா.வெங்கடாசலம் எழுதிய இமயத்தில் நாம் நாடகமும், (இது சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது),, தொடர்ந்து திரு நாரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் என்ற தமிழ்ச்சுவையும்.நகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் அரங்கேறின.

"மனுஷ்யன்" எனற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

அடுத்ததாக இவர்கள் அரங்கேற்றிய நாடகம் அகிலன் எழுதிய "புயல்".தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.

திரு ரா.வெங்கடாச்சலம் எழுதிய முதல் முழக்கம் என்ற நாடகத்தை நடத்தி னர் 1950ல் டிகேஎஸ் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை"  நாடகக் குழு தன் நிறைவு விழாவை நடத்தியது.

அதற்கான காரணம் என்ன? பின்னர் என்ன செய்தார்கள் சகோதரர்கள் என  பார்ப்போம்

தொலைக்காட்சி வந்தப் பிறகு நாடகங்கள் அழிந்துவிடும் என ஆங்காங்கே கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது போல....அன்று..பேசும்படம் வந்த காலகட்டத்தில்..நாடக மேடை அழிந்துவிடும் என்றனர்.

இது குறித்து திரு சண்முகம் அவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.அவர் சொன்னார்....

"நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விடவில்லை.திரைப்பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய நுணுக்கங்கள் பலவற்றை கையாண்டு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது" என்றார்

இன்றும் அது பொருந்துகிறது அல்லவா? ஆனால் என்ன ஒன்று...

"அந்த நாட்களில் நாடகக் கொட்டகை எல்லாம்...திரைப்பட கொட்டகைகளாக மாற்றிவிட்டனர்.ஆகவே நாடகம் நடத்துபவர்களுக்கு அரங்குகள் கிடைக்கவில்லை.அப்படியே கிடைத்தாலும் பலமடங்கு வாடகை அதிகமாக கொடுக்க வேண்டியிருந்தது.அது நாடக வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது.டி.கே,சண்முகம் அவர்களின் நாடகசபையும் இந்த காரணத்தினாலேயே மூடுவிழா கண்டது.

பின்னர் 1950ல் நாடகக் கழகம் தோன்றியது.நாடக அரங்குகள் இல்லாத குறையைத் தீர்க்க திறந்தவெளி அரங்குகள் தோன்றின.கலைவிழாக்கள் நடந்தன.ஐயாயிரம் நாற்காலிகள் போடப்பட்டு....முதல் வகுப்பு எட்டணா...இரண்டாம் வகுப்பு நாண்கனா என்று குறைந்த கட்டணத்தில் நாடகங்கள் நடந்தன.பம்மல் முதலியார், டி.கே.எஸ்., ஆகியவர்கள் முயற்சியால் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கிடத்தது.

மீண்டும் டி.கே.எஸ்., குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர்.நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்". ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி". கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் :'எது வாழ்வு', ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர்.தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார்.

இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "இராஜ ராஜ சோழன்" எழுதிய நாடகத்தையும் டி.கே.எஸ்.நடத்தினார்.(பின்னர் இன்றுவரை பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை மேடையேற்றி வருகின்றனர்)தஞ்சையில் நடந்த இந்நாடகம் காண 21000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனராம்.

பின்னர் அகிலன் எழுதிய"வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம்.இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார்.

டி.கே.சண்முகத்தின் நண்பர் பொதுவுடமைக் கட்சி ஜீவானந்தம்.அவருடன் சேர்ந்து பாரதியாரின் பாடல்களை நாட்டுடமையாக்க முயன்று வென்றார்.

இனி டி.கே.சண்முகம் அடைந்த பொறுப்புகளும், விருதுகளும்-

1950ல் நாடகக் கழகம் அமைக்கப்பட்டு...முதல் தலைவர் ஆனார்.நாடகங்களுக்கு கேளிக்கைவரி பெற்று தந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திவந்த "நடிகன் குரல்" பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்

தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளராக நான்காண்டுகள் இருந்தார்.

தவிர்த்து, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், தில்லி சங்கீத நாடக அகடெமி ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்

1941ல் மதுரை தமிழ்ச் சங்கத்தின் "முத்தமிழ்க் கலாவித்துவ ரத்தினம்" , 1944ல் ஈரோட்டில் நாடகக் கலை மகாநாட்டில் "ஔவை" பட்டம்,புதுவை ராமகிருஷ்ணா பாடசாலை வழங்கிய "நாடக வேந்தர்:" பட்டம்,குன்றக்குடி அடிகளாரால், "நாடகக் கோ" பட்டம்,1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகக் கழகம் வழங்கிய,"சிறந்தத் தமிழ் நாடக நடிகர்" பட்டம்,1962ல். புதுதில்லி சங்கீத நாடக அகடெமி வழங்கிய , "சிறந்த நாடக நடிகர்" விருது, 1966ல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில்"தமிழ் நாடக வரலாறு" என்னும் தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையை வழங்கினார்.

திரு அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வர் ஆனபோது சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி அளித்தார்

1971ல் இந்திய அரசின் தேசிய விருதான "பத்மஸ்ரீ" விருது பெற்றார்.

தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடக வாழ்க்கை ஆகிய நூல்களை எழுதினார்.

1973 ஃபெப்ருவரி 15ல் மறைந்தார்.

இவரது நூற்றாண்டை இவரது மகன்கள் டி.கே.எஸ்.கலைவாணன், புகழேந்தி ஆகியோர் 26-4-2012 அன்று சிறப்பாகக் கொண்டாடினர்.இன்று நாடக உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூறு கலைஞர்களுக்கு "நாடகச் செல்வம்" என்று விருது கொடுத்து கௌரவித்தனர்.

அன்று விருது பெறும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது.



No comments:

Post a Comment